ஆடிப்பெருக்கு என்றால் என்ன

aadi perukku endral enna

ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுள் ஒன்றாகவே ஆடிப்பெருக்கு திகழ்வதோடு தமிழ்நாட்டின் மிக முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக ஆடிப்பெருக்கானது காணப்படுகிறது.

ஆடிப்பெருக்கு என்றால் என்ன

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். இவ்வாறு ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதே ஆடிப்பெருக்கு எனப்படும்.

ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதனை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்காகும். இதனை ஆடி நோம்பி எனவும் மக்கள் அழைக்கின்றனர்.

இந்நாளிலேயே உழவர்கள் விதை விதைத்து விவசாயத்தை தொடங்குவார்கள். இதனை ஆடிப்பட்டம் எனவும் முன்னோர்கள் அழைப்பார்கள். தமிழ் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இதனை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இயற்கை வழங்கிய கொடைக்கு நன்றி செலுத்தும் முகமாக இது கொண்டாடப்படுகின்றது. மேலும் தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காக துவங்கப்பட்ட ஒரு விழாவாக ஆடிப்பெருக்கு காணப்படுகிறது.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் முறை

ஆடி மாதம் 18ம் திகதி ஆற்றங்கரையோரம் முழுவதும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் கொண்டாடுவார்கள். குறிப்பாக பெண்கள் திருவிழாவாக நடாத்துவார்கள்.

முதலில் காலையில் குளித்து முடித்து விட்டு பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கள பொருட்களோடு பெண்கள் தங்கள் வயதொத்தவர்களோடு செல்வார்கள்.

சிறுவர்கள், திருமணமாகிய பெண்கள் என அனைத்து பருவத்தினரும் ஆற்றங்கரைக்கு செல்வதற்கு தயாராகுவதிலிருந்து இந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டமானது ஆரம்பமாகின்றது.

ஆற்றங்கரைக்கு செல்வதற்கு முன்பாக அதிகாலையிலேயே எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் என்று அனைத்தையும் தயார்படுத்தி ஆற்றிற்கு கொண்டு செல்வதற்காக ஒரு பாத்திரத்தில் அடைத்து வைப்பார்கள்.

ஆற்றிற்கு சென்றதும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தம் செய்து அதில் வாழை இலை விரித்து வெற்றிலை வைத்து மஞ்சளிள் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள்.

பின்னர் அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி வளையல், பூ, வாழைப்பழம், அரிசி, பேரிக்காய் போன்றவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள்.

பின்னர் ஒரு வாழைப்பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். இதன்போது விளக்கு எரிந்து கொண்டே ஏனைய பொருட்களுடன் செல்வதானது காவிரியின் உயிர்ப்பை உலகிற்கு உணர்த்துவதாக காணப்படுகிறது.

வயதில் மூத்த பெண்கள் இத் தினத்தில் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்க கைகளிலும், பெண்களுக்கு கழுத்திலும் கட்டிவிடுவார்கள். மேலும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசியும் பெறுவார்கள்.

ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம்

ஆடிப்பெருக்கு தினத்தில் மிக முக்கியம் வாய்ந்ததொரு விடயமாக தாலி பிரித்து கோர்ப்பது காணப்படுகின்றது. அதாவது ஆடிப்பெருக்கு நாளில் மனைவியர்களுக்கு கணவன்மார்கள் தாலியை பிரித்து மஞ்சள் கயிற்றில் மங்களகரமாக புது தாலியை அணிவிப்பார்கள்.

இந்நாளில் விவசாயிகளுக்கு விவசாயத்தினை மேற்கொள்வதற்கான நீர் தாராளமாக கிடைக்கப் பெறும் என்பதோடு ஆடி மாதம் பயிரிடுவதனை தை மாதம் அறுவடை செய்ய கூடியனவாக காணப்படுவது ஆடிப்பெருக்கின் முக்கியத்துவத்தினை எடுத்தியம்புகின்றது.

ஆடிப்பெருக்கு தினத்தில் இறைவனை வழிபடுதலானது விஸ்ணு, சிவனின் பூரண அருளை பெற்றுத்தரக்கூடியதாக அமைந்துள்ளது எனலாம். மேலும் இந்நாளில் குபேரனை வழிபடும்போது பெரிய நட்டத்திலிருந்து மீண்டுவரவும் இப்பண்டிகையானது துணை புரிகின்றது.

Read More: தசமி திதி என்றால் என்ன

ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன