ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன

aani thirumanjanam endral enna in tamil

மிதுன ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் ஆகும். தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக ஆனி மாதம் காணப்படுகின்றது. ஆனி மாதம் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது சிதம்பரத்தில் இடம்பெறும் சிறப்பு வாய்ந்த அபிஷேகம் ஆகும்.

சிறப்பு வாய்ந்த ஆனித் திருமஞ்சனம் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம் அன்று இடம்பெறுகின்றது. இந்த பதிவில் நாம் ஆனித் திருமஞ்சன நாளில் அன்று செய்ய வேண்டிய செயல்கள் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி பார்ப்போம்.

ஆனித் திருமஞ்சனம் எப்போது அனுட்டிக்கப்படுகின்றது

மானிடர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள் பொழுது ஆகும். வைகறை பொழுது மார்கழி மாதம், காலைப்பகுதி மாசி மாதம், உச்சிக்காலம் சித்திரை மாதம், மாலைப்பகுதி ஆனி மாதம், இரவுப் பகுதி ஆவணி மாதம், அர்த்த சாமம் புரட்டாதி மாதம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. சந்தியா காலங்களான ஆனி, மார்கழியை இறைவழிபாட்டிற்கு உகந்த மாதங்களாகக் கொள்ளப்படுகின்றது.

ஆனித் திருமஞ்சனம் என்பது அபிஷேகத்தைக் குறிக்கும். நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகங்களில் முக்கியமான ஒரு நாளே ஆனிமாத உத்தர நட்சத்திரத்தன்று மாலையில் இடம்பெறும் ஆனித் திருமஞ்சனம் ஆகும்.

அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் இந்த ஆனித் திருமஞ்சனம் ஆகும். ஆனி மாதம் உத்தராயணம் கடைசி காலமும் தட்சணாயணத்தின் முதற் காலமும் சேரும் மாதம் ஆகும்.

இரு அயன கரணங்களின் கூட்டு சேர்க்கையில் வரும் இந்த ஆனி மாதத்தில் இறை அபிஷேகத்தினால் ஏற்படும் தெய்வீக பலன்கள் அற்புத சக்தி வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இந்த நாளிலேயே நடராஜர் மாணிக்க வாசகருக்கு குருந்த மர நிழலின் கீழ் உபதேசம் செய்த நாளாக அறியப்படுகின்றது.

ஆனித் திருமஞ்சனத்தில் செய்ய வேண்டியவை

ஆனித் திருமஞ்சன விழாவானது சிதம்பரத்தில் சீரும் சிறப்புமாக நடைபெறுகின்றது. இந்த நாளில் குடம் குடமாக பால், தேன் போன்றவற்றில் நடராஜ பெருமான் குளிர்விக்கப்படுவார்.

திருமஞ்சன நாளில் நீராடி அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுவதால் உடலில் உள்ள பிணிகள் நீங்குவதோடு வாழ்க்கையில் உள்ள கஸ்டங்கள் யாவும் நீங்கி வளம் பெறலாம்.

உத்திரம் நட்சத்திரம் என்பது சூரியனின் நட்சத்திரம் ஆகும். அத்துடன் சூரிய கிரகத்தால் ஏற்படுகின்ற தோஷங்களைக் குறைத்து பாதிப்புக்களை சரிப்படுத்துகிறது.

ஆனித் திருமஞ்சனத்தன்று கிரிவலம், பாதயாத்திரை, அடிப்பிரதட்ஷணம், அங்கப்பிரதட்சணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு பிரதட்ஷணம் செய்கையில் நம் பாதங்கள் மூலமாக தேகத்திற்கு தெய்வீக கதிர்வீச்சு சக்தி வந்து சேருகின்றது.

வழிபடும் முறை

ஆனி உத்தர நாளில் நாள் முழுதும் விரதம் இருந்து சிவதலத்திற்கு சென்று நடராஜரை வழிபட்டால் நாம் வேண்டிய விருப்பங்கள் யாவும் நிறைவேறும். நாள் முழுதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை மட்டும் உண்டு உபவாசம் இருக்கலாம்.

ஆனி உத்தரத்தன்று சிவபெருமானின் அபிஷேகத்தை காண்பதனால் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும். தம்பதிகளுக்கு சுகமான வாழ்க்கை கிடைக்கும். கன்னிப் பெண்களுக்ஙு நல்ல வரன்கள் கிடைக்கும். ஆண்களுக்பு மனதில் தைரியமும் உடல் பலமும் அதிகரிக்கும்.

பிரபஞ்சத்தைக் காத்தருளும் நடராஜனின் இந்த நாளில் வணங்கி எல்லா வளங்களையும் பெறலாம்.

Read More: திருமண் என்றால் என்ன

பாவங்கள் போக்கும் நதி