தசமி திதி என்றால் என்ன

dashami tithi in tamil

ஒவ்வொரு நாளுக்கென்று ஒவ்வொரு திதிகள் காணப்படுகின்றன. தசமி, நவமி, சதுர்த்தசி, துவாதசி, ஏகாதசி, அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை, திரியோதசி போன்றன சில திதிகள் ஆகும். தசம் என்பது ஓர் வடமொழிச்சொல் ஆகும். இதன் பொருள் பத்து என்பதாகும்.

இராமாயணத்தில் இராவணன் பத்து தலைகளைக் கொண்டிருந்தமையால் தசமுகன் என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய இந்த பதிவில் நாம் தசமி திதி மற்றும் அந்த திதியில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, தசமி திதியின் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தசமி திதி என்றால் என்ன

தசமி திதி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள் ஆகும்.

இவற்றுள் பௌர்ணமியில் இருந்து வரும் பத்தாவது நாள் கிருஸ்ணபட்ச தசமி என்றும் அமாவாசையில் இருந்து வரும் பத்தாவது நாள் சுக்கிலபட்ச தசமி என்றும் அழைக்கப்படுகின்றது.

தசமி திதி என்பது ஒரு சிறப்பு வாய்ந்த திதி ஆகும். குறிப்பாக நாம் அனைவரும் அறிந்த சிறப்பு தசமி நாள் நவராத்திரியின் சரஸ்வதி பூஜை முடித்து இறுதி நாளான விஜய தசமி ஆகும்.

விஜய தசமி என்பதன் பொருள் வெற்றியை அளிக்கும் நாள் என்று அறியப்படுகின்றது. துர்க்காதேவி மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் போரிட்டு 10வது நாளில் அவனை வெற்றியடைந்தார். அந்த நாளே விஜய தசமியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த தசமி திதியில் எந்தவொரு செயலைத் தொடங்கினாலும் அந்த செயல் முழுமையான வெற்றியைத் தரும் என்பது ஐதீக நம்பிக்கை ஆகும். இந்த விஜயதசமி திதி வட நாட்டில் தசரா விழா என்ற பெயருடன் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகின்றது.

தசமி திதியில் பிறந்தவர்களின் குண இயல்புகள்

ஒவ்வொரு திதியில் பிறப்பவர்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். தசமி திதியில் பிறப்பவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் சிறந்த முன்னோடியாகத் திகழ்வார்கள்.

இந்த திதியில் பிறப்பவர்கள் வியாபார நடவடிக்கைகளில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்லாது சிறந்த ஒழுக்கமுடைய நபர்களாக காணப்படுவார்கள்.

இவர்களிடம் எப்போதும் செல்வம் மற்றும் செல்வாக்கு நிறைந்திருக்கும். ஆசாரமான நபர்களாகக் காணப்படுவார்கள். இவர்களுக்கு சிறந்த நட்பு வட்டாரம் காணப்படும். சுற்றத்தில் நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பார்கள்.

அதுமட்டுமல்லாது தசமி திதியில் பிறந்தவர்கள் தமது குடும்பத்தின் மீது பாசம் மற்றும் அக்கறையைக் கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பாங்கை கொண்டிருப்பார்கள். தசமி திதியில் பிறந்தவர்கள் இறைவனுக்கு கறுப்பு எள் படைத்து வழிபட்டு வர அவர்களது வாழ்வு மென்மேலும் சிறப்படையும்.

தசமி திதியில் என்ன செய்யலாம்

தசமி திதி ஆனது வீரபத்திரன் மற்றும் தர்மராஜா போன்ற தெய்வங்களுக்கு உரிய நாளாக காணப்படுகின்றது. இந்த நாளில் மதம் சார்ந்த நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். ஆன்மீக செயல்களில் இந்த தசமி திதியில் ஈடுபடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

மேலும் தசமி திதியில் சுப காரியங்கள், புதிய தொழில்கள் போன்றன செய்யலாம். இவை தவிர திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் வாங்கலாம். மேலும் திருமணம், கிரகப்பிரவேசம், போன்ற நிகழ்வுகளும் அரச காரியங்கள், வெளியூர் பயணங்கள் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். அத்தோடு கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி கடன் கொடுக்கலாம்.

தசமி திதிக்கு ராசிகள் சிம்மம், விருச்சிகம் போன்றனவாகும். வளர்பிறை தசமி திதிக்கான தெய்வம் வீரபத்திரர் ஆகும். அதேபோல் தேய்பிறை தசமிக்கான தெய்வம் துர்க்கை மற்றும் எமன் ஆகும்.

Read More: ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன

சிதம்பரம் கனகசபை என்றால் என்ன