ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

Olukkam Uyarvu Tharum Katturai In Tamil

இந்த பதிவில் “ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை” பதிவை காணலாம்.

ஒருவரின் சிந்தனை ஒழுக்கமாக இருந்தால் அவர்களின் செயல்பாடுகளும் ஒழுக்கம் உடையதாக இருக்கும்.

ஒவ்வொருவரும் சுயஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. திருவள்ளுவரின் கருத்து
  3. ஒளவையாரின் கருத்து
  4. ஒழுக்கமே உயர்வு
  5. ஒழுக்கப் பண்புகள்
  6. ஒழுக்கமின்மை
  7. முடிவுரை

முன்னுரை

இவ்வுலகில் மானிதராய் பிறந்த அனைவரும் வாழ்தல் பொருட்டு பல்வேறு ஒழுக்கப் பண்புகளையும், நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.

இவை இன்று நேற்று உருவாக்கப்பட்டவையல்ல. காலம் காலமாக பாரம்பரியமாக பின்பற்றி வரப்படுபவை.

இதனைத் தவிர ஒரு மனிதன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் மதிக்கப்பட வேண்டுமாயின் அவன் சுயஒழுக்கம் உடையவனாகவும், நற்பண்புகளை பின்பற்றுபவனாகவும் இருக்க வேண்டும்.

இக்கட்டுரையில் ஒழுக்கம் உயர்வு தரும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

திருவள்ளுவரின் கருத்து

திருவள்ளுவர் தனது நூலாகிய திருக்குறளில் ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். திருக்குறளில் ஒழுக்கத்திற்கென தனியாக ஒழுக்கமுடமை எனும் அதிகாரத்தை உருவாக்கியுள்ளார்.

“அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு” என ஒழுக்கதின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

அதாவது மற்றவர்கள்மேல் பொறாமை கொண்டு, அவர்களின் அழிவைப் பற்றி எப்போதும் சிந்திப்பவனிடத்தே எவ்வாறு ஆக்கம் அமையாதோ அதே போன்று ஒழுக்கம் இல்லாதவன் வாழ்விலும் உயர்வு என்பதில்லை.

ஒழுக்கம் ஒரு மனிதனிற்கு எந்தளவு முக்கித்துவம் வாய்ந்தது என்பதை “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என ஒழுக்கத்தை உயிரிற்கும் மேலானதாக கருதவேண்டும் என குறிப்பிடுகின்றார்.

இதனைத் தவிர ஒழுக்கத்திலிருந்து தவறும் போது மனிதன் இழிசொல் கேட்க நேரும் என்றும், அவன் மட்டுமின்றி அவனது முழுகுடும்பமுமே துன்பத்திற்கு ஆளாகுவார்கள் என்றும் ஒழுக்கத்தின் தேவையை எடுத்தியம்புகின்றார்.

ஒளவையாரின் கருத்து

சங்ககால புலவர்களில் ஒருவரான ஒளவையார் ஒழுக்கத்தை மிக முக்கிய நற்பண்பாக வலியுறுத்துகின்றார்.

அவர் எழுதிய நூல்களில் ஒன்றாகிய கொன்றை வேந்தனில் “ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்” என்று ஒமுக்கத்தின் அவசியத்தை எடுத்தியம்புகின்றார்.

அதாவது ஒழுக்கமானது வேதம் ஓதுவதனை விட அவசியமானதென குறிப்பிடுகின்றார். அத்துடன் கொடிய குணம் உடையோரிடத்தே நற்குணங்கள் இருக்காது என்பதனை “பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்” என்றும் குறிப்பிடுகின்றார்.

இதனைத் தவிர நல்வழியில் “இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று” என ஒழுக்கம் தவறுவதைவிட உயிரை விடுவது மேலாது என ஒழுக்கத்தின் சிறப்பை வலியுறுத்துகின்றார்.

ஒழுக்கம் உயர்வு தரும்

ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை நல்லொழுக்கமானது ஒரு மனிதனின் உயர் பண்பாக கருதப்படுகின்றது. நல்லொழுக்கம் எனப்படுவது மனிதர்களை நல்வழிப்படுத்தும் சிறந்த ஆயுதமாகும்.

எமது முன்னோர்கள் ஒழுக்கம் தவறினால் தம் குலத்திற்கே இழுக்கு என்று கருதி நல்லொழுக்கத்தை பேணி வாழ்ந்தார்கள்.

தவறான வழியில் செல்லாமல் நற்பழக்கவழக்கங்களை பின்பற்றுதலே ஒருவரிற்கு மேன்மையான வாழ்வை பெற்றுத் தரும்.

ஒரு மனிதனின் சிந்தனைகளில் நல்லெண்ணங்கள் காணப்படுமாயின் அவனது செயல்களில் தெளிவும், நற்குணங்களின் வெளிப்பாடும் காணப்படும்.

அது அவனிற்கு சமூகத்தில் மரியாதையையும், உயர்வையும் பெற்றுத் தரும். இதனையே “ஒழுக்கதின் எய்துவர் மேன்மை” என்று குறிப்பிடப்படுகின்றது.

ஒழுக்கப் பண்புகள்

ஒவ்வொரு மனிதனும் சிறுவயது முதலே அவனது பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும், ஏனைய பெரியவர்களாலும் ஒழுக்கப் பண்புகள் ஊட்டி வளர்க்கப்படுகின்றார்கள்.

மனிதர்கள் அவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் ஒழுக்கப் பண்புகளிற்கு உதாரணமாக களவு கொலை போன்ற பாதக செயல்களில் ஈடுபடாமல் இருத்தல், பொய் பேசாமை, பெரியவர்களை மதித்தல், அடுத்தவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களிற்கு தீங்கு செய்யாமல் நடந்துகொள்ளல், அன்பு செய்தல் மற்றும் அறவழியில் நடந்து கொள்ளல் போன்றன கருதப்படுகின்றன.

சிறுவர்களிற்கு குழந்தைபருவம் முதலே நீதிக்கதைகள் மூலம் ஒழுக்கப்பண்புகளை ஊட்டி வளர்த்தால் மட்டுமே அவர்களை ஒழுக்கம்மிகுந்த மாந்தர்களாக வளர்த்தெடுக்க முடியும்.

ஒழுக்கமின்மை

ஒழுக்கமானது நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என இருவகையாக காணப்படுகின்ற போதும், நல்லொழுக்கமே அதன் பொருளாகக் கொள்ளப்படுகின்றது.

நல்லொழுக்கம் ஒருவரை எவ்வாறு உயர்த்துகின்றதோ, அதேபோல் ஒழுக்கமின்மையானது ஒருவரை தீய வழியில் செலுத்தி சமூகத்தில் இழிநிலைக்கு இட்டுச் செல்லும்.

மகாபாதகச் செயல்களில் ஈடுபடல், கூடாநட்புக்கள் மற்றும் போதைப் பொருட்களிற்கு அடிமையாதல் போன்றன ஒழுக்கமின்மையை உருவாக்குகின்றன. மனிதர்கள் தீயசெயல்களைத் தவிர்த்து அனைவரையும் மதித்தால் மட்டுமே சமூகத்தில் உயர்ந்து விளங்கலாம்.

முடிவுரை

இந்தபூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் நலம்பெற்று வாழ்வெதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை பின்பற்றினால் மட்டுமே அனைவரும் பயமின்றி சுதந்திரமாக நடமாட முடியும்.

எனவே நல்லொழுக்கத்தை வாழ்வின் மிகமுக்கிய தேவையாகக் கொண்டு மேன்மையானவர்களாக வாழ்வோமாக.

You May Also Like :

உடல் நலம் காப்போம் கட்டுரை

ஒற்றுமையே பலம் கட்டுரை