தனிமனித ஒழுக்கம் கட்டுரை

Thani Manitha Olukkam In Tamil

இந்த பதிவில் “தனிமனித ஒழுக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

உலகின் மிக சிறந்த வெற்றியாளர்கள் மிக சிறந்த தனிமனித ஒழுக்கம் உடையவர்களாகவே அறியப்படுகின்றனர்.

தனிமனித ஒழுக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுயஒழுக்கத்தை தடுக்கும் விடயங்கள்
  3. தனிமனித ஒழுக்கத்தை வளர்க்கும் வழிகள்
  4. தனக்கு தான் நேர்மையாக இருத்தல்
  5. பாதகமானவற்றில் இருந்து விலகி இருத்தல்
  6. வெற்றிக்கான வழி
  7. முடிவுரை

முன்னுரை

மனிதனுடைய நடத்தைகளில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தால் அவர்களால் நிச்சயமாக வெற்றி பெறமுடியும்.

எம்மை சுற்றி நிகழ்கின்ற நிகழ்வுகளை கண்டு எமது மனம் பல்வேறான கோணங்களில் சிந்திக்கும் தவறான முறைகளிலும் பயணிக்கும் இவற்றில் இருந்து எம்மை நாம் கட்டுப்படுத்தி சரியான பாதையில் பயணிப்பதில் தான் எம்முடைய வாழ்வின் வெற்றி தங்கி இருக்கிறது.

தனி மனித ஒழுக்கம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் அவசியமாகும். ஒழுக்கம் இல்லாத மனிதர்கள் சமூக மதிப்பு இல்லாதவர்களாக காணப்படுவர். இக்கட்டுரையில் தனி மனித ஒழுக்கம் தொடர்பாக நோக்கப்படுகிறது.

சுயஒழுக்கத்தை தடுக்கும் விடயங்கள்

பள்ளிகளில் கற்கும் போது எமக்கான ஒழுக்கம் பற்றி நன்றாக கற்று தந்திருப்பார்கள். எதனை செய்ய வேண்டும் எதனை செய்ய கூடாது என்பது தொடர்பாக எமக்கு கற்பிக்கப்படுகின்றது ஆனால் வளர வளர சுயஒழுக்கம் என்ற விடயம் மாறுபடுகின்றது. எமது சூழல் அதனை மாற்றுகின்றது.

அதன் பின்பு நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை யாரும் கற்று தர மாட்டார்கள் நாமாகவே ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

இதனை தடுக்கும் விடயங்களாக நம்மை திசைதிருப்புகின்ற விடயங்கள் தொலைபேசி, தொலைகாட்சி, சினிமா இவை போன்ற விடயங்கள் எமது நேரத்தை வீணாக்குகின்றன.

அத்துடன் சோம்பல் இதுவும் எமது சுயகட்டுப்பாட்டை இழக்க செய்யும். தாழ்வு மனப்பான்மை இவை போன்ற காரணங்கள் எமது சுயஒழுக்கத்தை தடுத்து எம்மை வளரவிடாது தடுப்பவையாக உள்ளன.

தனிமனித ஒழுக்கத்தை வளர்க்கும் வழிகள்

எமக்கு ஏதேனும் ஒரு நல்ல விடயத்தை செய்ய வேண்டுமென தோன்றினால் அதனை இப்போது செய்யாமல் பின்பு செய்யலாம் என எண்ணும் தவறான சோம்பல் தனத்தை இல்லாமல் செய்கின்ற மனநிலையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.

மற்றும் எம்மை தவறான வழிகளில் இட்டு செல்லக்கூடிய மனிதர்களின் வார்த்தைகளை கேட்காமல் இருத்தலும் அவர்களிடம் இருந்து விலகி இருப்பதும் நன்மை அளிப்பதாக இருக்கும்.

“தீயாரோடு இணங்கி இருப்பதுவும் தீதே” என்பதனை போல நம்மை சாதகமாக ஊக்குவிக்கும் நல்ல மனிதர்களோடு பழகுவது எமக்கு நல்ல விடயங்களை கற்று தரும்.

தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும்

நாம் சுய ஒழுக்கத்தோடு நல்ல மனிதர்களாக இருப்பது எமது நன்மைக்கே என நாம் கருத வேண்டும். அடுத்தவர்களுக்காகவோ அன்றி அழுத்தங்களின் பெயரிலோ நாம் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடாது.

நாம் எப்போதும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இது எமக்கு நேர்மறையான உணர்வை தரும்.

ஒழுக்கமின்றி தவறு செய்பவர்கள் நிம்மதியாக வாழவே முடியாது. ஆகவே நாம் எமக்கு நேர்மையாக இருப்போம்.

பாதகமானவற்றில் இருந்து விலகி இருத்தல்

“துஷ்டனை கண்டால் தூர விலகு” என்பது ஒளவையார் வாக்கு அது போல எமக்கு நன்மை தராது எமது வளர்ச்சியை பாதிக்கின்ற தவறான விடயங்களில் இருந்து விலகுதல் எமது தனிமனித ஒழுக்கமாக இருக்கும்.

மாணவர்கள் மதுப்பாவிப்பவர்கள், போதை பாவனை உடையவர்கள், சட்டவிரோதமானவர்கள் போன்ற மனிதர்களில் இருந்து விலகி இருப்பது அவர்களையும் அவ்வாறான குற்றங்களை செய்யாமல் தடுக்க உதவும்.

எமது கல்வி நடவடிக்கையை தொலைகாட்சி தடுக்குமானால் அதிலிருந்து விலகி நாம் கற்க வேண்டும். இவ்வாறான அணுகுமுறைகளை நாம் வளர்க்க வேண்டும்.

வெற்றிக்கான வழி

எவனொருவன் உயர்வான கொள்கையோடு விடாமுயற்சி, உண்மை, நேர்மை, விட்டுக்கொடுப்பு, சோர்வு இன்மை, கடுமையான பயிற்சி, தியாகம் போன்ற உயரிய ஒழுக்கங்களோடு முயற்சிக்கிறானோ அவன் நிச்சயமாக வெற்றி பெறுவான் என்பதில் துளியும் ஐயமில்லை.

எமது மனதை கட்டுப்படுத்தி நாம் நடந்து கொண்டால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும். “ஐம்புலன் ஆட்சி கொள்” என்பது போல மனிதன் தன்னை தான் கட்டுப்படுத்துவதால் இலகுவாக வெற்றி பெற முடியும்.

முடிவுரை

வெற்றியாளர்களின் வெற்றியின் ரகசியம் தனிமனித ஒழுக்கம் என்பதாகும். எமது சுய மேம்பாட்டை உயர்த்துவது இந்த ஒழுக்கம் தான் வாழ்க்கையில் எவ்வளவு சவால்கள் வருகின்ற பொழுதும் நம்பிக்கை இழக்காது விடாமுயற்சியுடனும் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நாம் நடந்து கொள்ளவேண்டும்.

இவை அனைத்தும் எம்முடைய ஆர்வத்தில் தான் தங்கியுள்ளது. வெற்றி பெற ஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்வார்கள் என்பது திண்ணம்.

உலகின் மிக சிறந்த வெற்றியாளர்கள் மிக சிறந்த தனிமனித ஒழுக்கம் உடையவர்களாகவே அறியப்படுகின்றனர்.

You May Also Like :

அறம் செய்ய விரும்பு கட்டுரை

தூய்மை பற்றிய கட்டுரை