உடல் நலம் காப்போம் கட்டுரை

உடல் ஆரோக்கியம் கட்டுரை

இந்த பதிவில் “உடல் நலம் காப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.

உளம் மற்றும் உடல் ஆகிய இரண்டின் ஆரோக்கியமே முழுமையான உடல் நலம் ஆகும்.

மற்றைய செல்வங்களால் மனிதனின் ஆரோக்கியத்தை வாங்கிவிட முடியாது. சிறு வயதிலிருந்தே அனைவரும் உடலை நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

உடல் நலம் காப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மனித உடலின் சிறப்புக்கள்
  3. உடல் நலம் பாதிக்கப்படல்
  4. உடல் நலம் பேணுதலின் அவசியம்
  5. உடல் நலம் பேணும் முறைகள்
  6. நோயற்ற வாழ்வு
  7. முடிவுரை

முன்னுரை

மனித இனத்தின் நிலைத்திருத்தலிற்கு மிகவும் அவசியமாகவுள்ள மனித உடலானது, ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பல்வேறு உடல் கூற்று கட்டமைப்புக்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும்.

ஒரு மனிதன் நீண்ட ஆயுளைப் பெற்று இவ்வுலகில் வாழ வேண்டுமாயின், மனித உடலின் சீரான செயற்பாடுகளில் மிகவும் அக்கறையுடன் செயற்படுதல் வேண்டும்.

உடல்நலம் பேணும் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை கடைப்பிடுப்பதோடு, உளத்திருப்தியோடு கூடிய தெளிந்த நீரோட்டம் போன்ற அமைதியான வாழ்க்கையை வாழுதல் அவசியமாகும்.

இக்கட்டுரையில் உடல் நலம் பற்றிய சிறப்புகள், உடல் நலம் காப்பதன் அவசியம், உடல் நலம் காக்கும் முறைகள் போன்றவற்றை நோக்கலாம்.

மனித உடலின் சிறப்புக்கள்

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற ஒளவையாரின் வாக்கிற்கமைய இந்த உலகத்தில் காணப்படும் அனைத்து உயிர்ப் படைப்புக்களையும் விட மனிதராய் பிறத்தலே மேன்மையானதாகக் கருதப்படுகின்றது.

மனிதன் அவன் படைப்பியல்புகளால் உயர்ந்து விளங்குவதோடு, ஐந்தறிவு படைத்த உயிரினங்களை விட, ஆறறிவு கொண்ட மனிதன் போற்றுதலிற்கு உரியவனாகின்றான்.

மனித உடலானது மரபணுக்கள் திசுக்கள், எலும்புத் தொகுதிகள், தசைப் பகுதிகள் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உடலிலும் தனித்தன்மையுடன் கூடிய நுண்ணிய கலங்களினால் உருவாக்கப்பட்ட மூளை, உடல் முழுவடும் இரத்தத்தைப் பாய்ச்சும் இதயம் மற்றும் சுவாச சுற்றோட்டத்திற்கு வழிவகுக்கும் நுரையீரல் ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ளது.

இவ் உடலியல் செயற்பாடுகள் திறம்பட இடம்பெறுவதற்கு சீரான நலம் பேணலை கடைப்பிடித்தல் அவசியமாகும்.

உடல் நலம் பாதிக்கப்படல்

இவ்வுலகில் வாழ்கின்ற மக்களில் 75 சதவீதமானோர் ஏதேனும் ஒரு நோயால் அவதிப்படுவோராகக் காணப்படுகின்றனர்.

மனித உடலின் பகுதிகள் மற்றும் உள ரீதியான நிலைமைகளில் ஏற்படும் எதிரான தாக்கங்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றது.

உடலின் புற ஆரோக்கியமானது, நவீன உலகின் விரைவான வாழ்க்கையோட்டத்தாலும், முறையற்ற உணவுப் பழக்கவழக்கத்தாலும் பாதிப்படைகின்றது.

அதீத மனஅழுத்தம் மற்றும் ஆகக்கூடிய வேலைப்பழுவால் ஏற்படும் மனச்சோர்வினால் உள ஆரோக்கியம் அற்றுப்போகின்றது.

மனித ஆரோக்கியம் குறைவடையும் போது பல்வேறுபட்ட நோய்கள் உருவாகி மனித ஆயுளை குறைவடையச் செய்கின்றன.

உடல் நலம் பேணுதலின் அவசியம்

தற்காலத்தில் உடல் நலத்தை பேணுவதில் அக்கறையோடு, இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்தலில் ஈடுபாடுடையவர்களாக மனிதர்கள் மாற்றமடைந்து வரும் போக்கினை அவதானிக்கலாம்.

இதற்கான பிரதான காரணம் உடல் நலம் பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகும்.

மனிதர்கள் நீண்ட ஆயுளைப் பெற்று இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கு உடலானது வலிமையாக இருத்தல் அவசியமாகும்.

உடலியக்கமானது சீராக இடம் பெற்றால் மாத்திரமே மனிதர்களால் மகிழ்ச்சியாக வாழமுடியும்.

அத்துடன் இளமைக் காலத்தில் கடினமாக ஓடி உழைத்து, முறையற்ற உணவுப் பழக்கங்களைப் பேணிவிட்டு முதுமையில் அவதிப்படுவதனை விட சிறுவயது தொடக்கம் உடல் ஆரோக்கியத்தை பேணி நலம்பெற்று வாழ்தல் நன்று.

உடல் நலம் பேணும் முறைகள்

உடல் நலத்தை பேணுவதற்கு பல்வேறு முறைகள் காணப்படுகின்ற போதும், மிக முக்கியமான விடயமாகக் காணப்படுவது மனித அகநலனை பேணுவதாகும்.

அக நலனை பேணுவதானது தேவையற்ற மனஅழுத்தங்கள், ஓய்வற்ற வேலைப்பழு மற்றும் சிக்கல்கள் நிறைந்த எண்ணவோட்டங்களை தவிர்ப்பதோடு மனர்ச்சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளிலிருந்து தள்ளி இருத்தலாகும்.

உள ரீதியான மாற்றங்களானவை உடலின் செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்தக் கூடியவாக காணப்படுவதனால் மனமகிழ்ச்சி அவசியமாகும்.

சரியான தூக்கப் பழக்கம், யோகாசனம் செய்தல், தேவையானளவு ஓய்வு மற்றும் இறைவழிபாடு போன்றன உள நலனை ஏற்படுத்தும்.

புற ரீதியான ஆரோக்கியமானது சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறைமையிலும் தங்கியுள்ளது.

துரித உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் அடங்கிய உணவுகளை உட்கொள்வதோடு, நாம் வாழும் சூழலை நமக்கு பிடித்த வகையில் மாற்றிக்கொள்ளல் அவசியமாகும்.

நோயற்ற வாழ்வு

“நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்” நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்வதே ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் பெறும் சிறந்த செல்வமாகும்.

பிற செல்வங்களால் மனிதனின் ஆரோக்கியத்தை வாங்கி விட இயலாது. வரும்முன் காப்போம் என்ற கூற்றிக்கிணங்க நோய்கள் நம்மை அண்டும் முன்பே உடல் நலத்தை பேண வேண்டும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” அதாவது உண்ட உணவு செரித்தபின் அடுத்தவேளை உணவை உண்பதே நோய் வராமல் தடுப்பதற்கான சிறந்த வழியென வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

நோயற்று வாழ்வதே உடல் ஆரோக்கியத்தின் மிக முக்கிய இலக்கு ஆகும்.

முடிவுரை

உடல் நலனை மட்டும் பேணாது உள ரீதியிரான நலனையும் பேணுதலே மனித ஆரோக்கியத்தின் ஆரம்ப படி நிலையாகும்.

உடலிற்கு தீங்கு விளைவிக்கும் மாசுக்கள் நிறைந்த இவ்வுலகில் உடல் நலனைக் காத்து மனமகிழ்ச்சியைப் பேணி நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வோமாக.

You May Also Like :

மருத்துவப் பணி கட்டுரை

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை