ஒற்றுமையே பலம் கட்டுரை

Otrumai Patri Katturai In Tamil

இந்த பதிவில் “ஒற்றுமையே பலம் கட்டுரை” பதிவை காணலாம்.

பல விலங்குகளும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கூட்டாக ஒற்றுமையாக வாழ்கின்றது.

மனிதர்களும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பகைமை உணர்வை விடுத்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.

  • Otrumai Patri Katturai In Tamil
  • ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கட்டுரை

ஒற்றுமையே பலம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உயிர்களின் ஒற்றுமை
  3. புலவர்களின் கருத்துக்கள்
  4. ஒற்றுமையின் மகத்துவம்
  5. முடிவுரை

முன்னுரை

“இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர்” என்கின்றார் வள்ளுவப் பெருந்தொகை. வேற்றுமையை விட்டு ஒற்றுமையுடன் யாரெல்லாம் வாழ்கின்றார்களோ, அவர்களை தோற்கடிக்க முடியாது என்பதே அதன் கருத்தாகும்.

ஒற்றுமை எனப்படுவது இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களிற்கும் அவசி்யமான ஒன்றாகும். ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தார்கள்.

கூட்டமாக வாழ்ந்து வருதல் அவர்களிற்கு பாதுகாப்பைத் தந்ததோடு, குழுவாக வேட்டையாடி அதன் மூலம் கிடைக்கின்ற உணவை பகிர்ந்துண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இதனையே முன்னார்கள் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்று குறிப்பிட்டு ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தியுள்ளனர்.

இக்கட்டுரையில் ஒற்றுமையே பலம் பற்றி பார்க்கலாம்.

உயிர்களின் ஒற்றுமை

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்தலை விரும்புவதோடு, அவை பெரும்பாலும் கூட்டாகவே வாழ்கின்றன.

ஏனைய விலங்குகளால் ஆபத்து நேரும் போது ஒன்றாகத் திரண்டு அதனை எதிர்கொள்கின்றன. காடுகளில் வாழும் விலங்குகளான யானைகள், மான்கள், சிங்கங்கள் அனைத்துமே கூட்டாக வாழ்பவையே.

ஒற்றுமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்கும் பறவையினம் காகம். காகங்கள் ஏதேனும் சிறு உணவைக் கண்டால் கூட, சத்தமாகக் கரைந்து தன் கூட்டத்தை அழைத்தே உண்ணும்.

மேலும் தேனீக்கள் ஒற்றுமைக்கு மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டு. தேனீக்கள் தனித்தனியாக தேனை சேகரித்த போதும், அதனை சேமித்து வைக்கும் வதையை சேர்ந்தே அமைக்கின்றன.

தமது வாழ்விடத்தை ஏதேனும் ஒரு ஆபத்து நெருங்கும் போது கூட்டாகச் சென்று தாக்குகின்றன. அத்துடன் எறும்புகள், கறையான் போன்றவையும் ஒன்றாகச் சேர்ந்து மண்ணைக் குடைந்து வாழ்விடத்தை அமைக்கின்றன.

இவ்வாறு விலங்குகளும் பறவைகளும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து கூட்டாகச் செயற்படுகின்றன.

புலவர்களின் கருத்துக்கள்

பண்டைய காலம்தொட்டு இன்று வரை புலவர்களும், அறிஞர்களும் ஒற்றுமையின் பலத்தை வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

முண்டாசுக் கவிஞனாகப் போற்றப்படும் பாரதியார், “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே” என்றார்.

அதாவது ஒற்றுமை இல்லையேல் அனைவரும் தாழ்ந்து விடுவர் என்று குறிப்பிடுகின்றார்.

அதுமட்டுமின்றி ஒளவையார் தனது நூலாகிய கொன்ற வேந்தனில் “ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்கின்றார்.

அனைவருடனும் பகைமையை வளர்க்காது வாழ்வதே சிறந்ததாகும். ஏனெனில் ஊருடன் பகைமை பாராட்டினால், மன அமைதியுடன் வாழ இயலாது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் “புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் கருத்து யாதெனில் தேவருலகம் சென்றாலும் ஒற்றுமை போல் வேறொன்றை பெற இயலாது என்பதாகும்.

ஒற்றுமை இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் குடியிருக்கும். அது தேவர்களின் உலகிற்கு ஒப்பானதாகும்.

இவ்வாறு ஒற்றுமையானது ஆண்டாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.

ஒற்றுமையின் மகத்துவம்

இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் இனம், மதம், மொழி என பிரிந்து வேற்றுமையோடு வாழ்கின்றனர்.

இதனால் இனமத கலவரங்களும், ஏனைய பல சச்சரவுகளும் சமூகத்தில் தோற்றம் பெற்று, மனித இனமே அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒற்றுமையானது மிகவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நல்லிணக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே அனைவரும் அமைதியான சூழலில் வாழ முடியும்.

ஒவ்வொரு மனிதனும் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். எனவே தவறுகளை மன்னிக்கும் குணமும், புரிந்துணர்வும் அவசியமாகும்.

ஆரம்பகால மனிதர்கள் கூட்டங் கூட்டமாக இணைந்து கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழிக்கேற்ப கூட்டாக விவசாயம் செய்து உணவை பகிர்ந்துண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

ஆனால் தற்காலத்தில் இந்த முறைமை அருகி தனிக்குடும்பமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.

இதற்கு பிரதான காரணமாக விளங்குவது மக்களிடையே சகிப்புத்தன்மையும், சுயநலமும் அதிகரித்து வருவதாலாகும்.

எனவே மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், ஒருவர் மீது ஒருவர் உள்ளார்ந்த அன்புடனும் வாழவேண்டும். ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே இந்த சமுதாயம் சீர்கேடுகள் ஏதுமற்று சிறப்பாக விளங்கும்

முடிவுரை

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர்களின் வாக்கிற்கமைய ஒற்றுமையே அனைவருக்கும் அவசியமானது.

இயந்திரமயமான இந்த மனித வாழ்க்கை அழகாக மாற வேண்டுமாயின் நாம் அனைவரும் விட்டுக்கொடுப்புடன், ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழவேண்டும்.

உலக சமாதானம் மற்றும் உயிரினங்களின் நிலைத்தனம் ஆகியன மனித இனத்தின் ஒற்றுமையிலே தங்கியுள்ளன.

You May Also Like :

பெண்களின் முன்னேற்றம் கட்டுரை

அறிவியல் வளர்ச்சி கட்டுரை