ஆசிரியர் பணி கட்டுரை

நான் போற்றும் ஆசிரியர் கட்டுரை

இந்த பதிவில் “ஆசிரியர் பணி கட்டுரை” பதிவை காணலாம்.

தனது நலனை பாராமல் சமூக அக்கறையுடன் வளமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க உழைக்கும் ஆசியிரியர்களின் பணிக்கு நிகரான பணி எதுவுமில்லை.

இன்று உலகமே வியந்து பார்க்கும் பல மனிதர்களை உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்கும்.

ஆசிரியர் பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆசிரியப் பணியின் சிறப்பு
  3. ஆசிரிய மாணவ உறவு
  4. ஆசிரியப் பணியிலுள்ள சவால்கள்
  5. சமூக வளர்ச்சியில் ஆசிரியப்பணி
  6. முடிவுரை

முன்னுரை

“மாதா பிதா குரு தெய்வம்” என்ற வரிகளிற்கேற்ப தாய் தந்தையரிற்கு அடுத்த படியாக போற்றப்படும் ஆசியர்கள், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெறுகின்றார்கள்.

மகத்தான பணியாகக் கருதப்படும் ஆசிரியப் பணியில் ஈடுபடுபவர்களே மனிதர்களிற்கு அறிவாற்றலை வழங்கி அவர்களை முழுமை பெற செய்கிறார்கள்.

இவ்வுலகத்தில் பிறப்பெடுத்த அனைத்து மானிடர்களும் கல்வியறிவை அவர்கள் வாழ்நாளில் மிக முக்கியமான சொத்தாகக் கருதுகின்றார்கள்.

எனவே அக் கல்வியறிவை வழங்கும் ஒவ்வொரு ஆசிரியர்களையும் போற்றி வணங்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

இந்த கட்டுரையில் ஆசியர் பணி பற்றி காணலாம்.

ஆசிரியப் பணியின் சிறப்பு

“எழுத்தறிவித்தவன் இறைவனாவன்” என்ற கூற்றிற் கேற்ப ஒரு மனிதனிற்கு யாரெல்லாம் கல்வியறிவை போதிக்கின்றார்களோ, அவர்களெல்லாம் இறைவனிற்கு நிகராக போற்றப்பட வேண்டுமென கூறப்படுகின்றது.

கல்வியைத் தவிர உலகிலுள்ள அனைத்து சொத்துக்களும் அழிவடையக் கூடியன. பிற செல்வங்கள் நீரினாலோ, நெருப்பினாலோ அல்லது கள்வர்களாலோ அழிவடையும். அதனால் நிலையானதாகக் கருதப்படும் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கும் ஆசிரியர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் மதிக்கப்படுகின்றார்கள்.

ஆசிரியர்கள் தம்மிடம் வரும் மாணவர்களிற்கு நல்லொழுக்கத்தையும், சமூகத்தை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களை வளப்படுத்துகின்றார்கள்.

அதனைத் தவிர விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஊக்கம், நற்பழக்கங்கள், பொது அறிவு மற்றும் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தருகின்றார்கள்.

ஒரு தவறான மாணவனையையும் சிறந்த ஆசிரியரால் நல்வழிப்படுத்த முடியும்.

ஆசிரிய மாணவ உறவு

ஆசிரியப் பணியானது வெறுமனே எழுத்தறிவை போதிப்பது மட்டுமல்ல. மாணவர்களை நற்பண்புகள் பொருந்திய மனிதர்களாக வளர்த்தெடுப்பதே ஆசிரியப் பணியின் மிகமுக்கிய இலக்கு ஆகும்.

ஆசிரியர்களிற்கும் மாணவர்களிற்குமிடையில் தெளிந்த நீரோடை போல அமைதியானதொரு நல்லுறலு காணப்பட வேண்டும். ஆசிரியர்கள் சுயநலமற்றவர்களாகவும், மாணவர்களை அரவணைத்து செல்லும் பரந்த மனப்பான்மை உடையவர்களாகவும் காணப்பட வேண்டும்.

மாணவர்கள் தவறும் போது அவர்களை வன்சொற்களால் தண்டிக்காமல் தம் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்த வேண்டும்.

ஆசிரியரது நடை உடை பாவனைகளும், செயற்பாடுகளும் மாணவர்களை கவரும் வகையிலும் அவர்கள் மதிக்குமாறும் அமைய வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்கள் கூறும் நற்சொற்களை செவிமடுத்து அவற்றை பின்பற்ற வேண்டும்.

ஆசிரியரோடு தனிப்பட்ட முரண்பாடுகளை தவிர்த்து அவர்கள் கற்றுத்தரும் நற்பண்புகளை பின்பற்றினால் மட்டுமே வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

ஆசிரியப் பணியிலுள்ள சவால்கள்

ஆசிரியப் பணியானது இன்று சவால்கள் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாட்டால் மாணவர்களிடையே கல்வியின் மீதுள்ள நாட்டம் குறைவடைந்த வருகின்றது.

இதனைத் தவிர மாணவர்களிற்கு சுய ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் மொத்த நாட்டு மக்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ள இவ்வேளையில் இணையவழி கல்வியே மாணவர்களிற்கு வழங்கப்படுன்றது.

இதனால் மாணவர்களின் குறைபாடுகளை இனங்கண்டு அவர்களை சரியாக அணுக முடியாத சூழ்நிலை ஆசிரியர்களிற்கு ஏற்பட்டுள்ளது.

சமூகவளர்ச்சியில் ஆசிரியப் பணி

“இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்” என்ற கூற்றிற்கமைய இன்றைய இளைய தலைமுறையினரே எதிர்காலத்தில் பயன் தரும் விருட்சங்களாகக் கருதப்படுகின்றனர்.

எனவே சிறுவர்களை திறம்பட வழி நடத்தி சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.

ஒரு நாட்டின் பேண்தகு அபிவிருத்தியானது அந்நாட்டின் எழுத்தறிவு வீதத்திலேயே தங்கியுள்ளது. எனவே நாட்டின் வளர்ச்சி ஆசிரியர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

குழந்தைகளிற்கு நல்லறிவு புகட்டி அவர்களை சமூகத்தில் உயர்ந்த மனிதர்களாக, சமூகப் பொறுப்பு மிக்கவர்களாக மாற்றி சமூகத்திற்கு கையளிக்கும் உன்னத பணியாக விளங்கும் ஆசிரியப் பணியை சிறப்பிப்பது போற்றுதலிற்குரியதாகும்.

முடிவுரை

அப்துல்கலாம் போன்ற அறிவியல் மேதையையும், கல்பனா சாவ்லா போன்ற உலகப் புகழ் பெற்ற விண்ணோடியையும் பல்வேறு அறிர்களையும் இந்த உலகிற்கு உருவாக்கி தந்தவர்கள் ஆசிரியர்களே.

தம் நலத்தை பாராமல் தியாக மனப்பான்மையுடன் சேவையாற்றி எதிர்கால சந்ததியினரை வளப்படுத்தும் ஆசிரியப் பணிக்கு ஈடு இணையில்லை.

வெறுமனே ஏட்டுக் கல்வியை வழங்குவது மட்டுமில்லாது சமூகப்பொறுப்புடன் கூடிய வாழ்க்கை முறைமையையும் கற்றுத்தரும் ஆசிரியர்களை மதித்து அவர்களின் சொற்படி ஒழுகி மேன்மையான இடத்தை பெற்று வாழ்வோமாக.

You May Also Like:

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

மருத்துவப் பணி கட்டுரை

நூலகத்தின் சிறப்பு கட்டுரை