வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை

vana vilangu pathukappu katturai in tamil

இந்த பதிவில் “வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கையின் சமனிலை தன்மையை சரியான அளவில் பேணுவது அதன் நிலைத்ததன்மைக்கு இன்றியமையாததாக அமைகின்றது. இதற்கு விலங்குகளே அதிகளவில் பங்களிப்புச் செய்கின்றன.

வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வனங்களும் வனவிலங்குகளும்
  3. வனஉயிரினங்களின் முக்கியத்துவம்
  4. வனவிலங்குகள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள்
  5. வனவிலங்குகள் அழிவடைதல்
  6. வனவிலங்குகளை பாதுகாத்தல்
  7. முடிவுரை

முன்னுரை

இவ்வுலகமானது மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் ஒன்றித்து வாழும் வகையிலே படைக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் மனிதர்களும் விலங்குகளும் இணைந்து இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காடுகளிலும், நீர்நிலைகளை அண்டித்த இடங்களிலும் வாழ்ந்தார்கள்.

தமது உணவுத் தேவைளை பூர்த்தி செய்ய வேண்டப்பட்ட அளவில் மட்டும் விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்ந்தார்கள். இதனால் விலங்குகளும் ஏனைய உயிரினங்களும் அழிவடையாமல் நிலைத்து வாழ்ந்தன.

தற்காலத்தில் அதிகரித்த சனத்தொகையின் விளைவால் காடுகள் அழிக்கப்பட்டு அதன் வளங்கள் சூறையாடப்படுவதனால் அங்கு காணப்படும் விலங்குகள் அழிவடைகின்றன.

இக்கட்டுரையில் வனவிலங்கு பற்றி விரிவாக நோக்கலாம்.

வனங்களும் வனவிலங்குகளும்

இந்த பூமியின் நிலைத்தன்மைக்கு ஆதாயமாய் அமைவன காடுகள். இந்த பூமியின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட முப்பது வீதமான பகுதி காடுகளினால் சூழப்பட்டுள்ளது.

உலகில் மிகப்பெரிய காடுகளிற்கு உதாரணமாக அமேசான் மற்றும் ஆபிரிக்கக் காடுகளைக் குறிப்பிடலாம்.

காடுகளானவை உயிர் பரம்பலை பாதுகாப்பதற்கு அளப்பரிய பங்கினை ஆற்றுவதுடன், இப்பூமிக்கு மழையைப் பெற்றுத் தரும் முக்கியமான வழியாகக் காணப்படுகின்றன.

காடுகளாவை வெறுமனே மரங்களை மட்டும் கொண்டிராமல் விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் நுண்ணுயிர்கள் என ஆயிரக்கணக்கான உயிர்ப் பல்வகைமையையும் கொண்டு காணப்படுகின்றன.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள உலகின் முதலாவது மிகப் பெரிய மழைக் காடாக விளங்கும் அமேசான், பில்லியன் கணக்கான உயினங்களின் உறைவிடமாய் விளங்குகின்றது.

இவ்வாறு வனங்களானவை வனவிலங்குகளின் வாழ்விடமாய் அவைகளை பாதுகாக்கும் கூடாரமாய் அமைந்துள்ளன.

வனஉயிரினங்களின் முக்கியத்துவம்

பண்டைய காலத்தில் விலங்குகள் மனிதனின் உணவுக்காகவும், பயிர்ச்செய்கை, போக்குவரத்து மற்றும் ஏனைய பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இன்று அன்றாட வாழ்க்கையில் விலங்குகளை பயன்படுத்துவதற்கான தேவை அரிதாகக் காணப்படுகின்றது.

அதனைத் தவிர வனவிலங்குகள் சூழலின் பல்வகைமைத் தன்மையையும், உயிர்த் தன்மையையும் பேணுவதற்கு மிகவும் அவசியமானவை.

இயற்கையின் சமனிலை தன்மையை சரியான அளவில் பேணுவது அதன் நிலைத்ததன்மைக்கு இன்றியமையாததாக அமைகின்றது. இதற்கு விலங்குகளே அதிகளவில் பங்களிப்புச் செய்கின்றன.

விலங்குகள் இல்லையேல் உணவுச்சங்கிலியின் சமனிலை பாதிக்கப்பட்டு தாவரவுண்ணிகள் இவ்வுலகின் பசுமைகளை எல்லாம் அழித்துவிடும். எனவே வனவிலங்குகளின் நிலைத்தன்மை அவசியமாகின்றது.

வனவிலங்குகள் அழிவடைதல்

இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று அரிய பல உயிரினங்களும், விலங்கு வகைகளும் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்குவதாகும்.

இயற்கையாக நிகழும் பேரனர்த்தங்களாலும், மனித செயற்பாடுகளாலும் வனவிலங்குகளானவை அழிவடைகின்றன. உலகின் மிகப் பெரிய விலங்கினமாகக் கருதப்படும் டைனசோர்கள் உலகில் இடம் பெற்ற சடுதியான காலநிலை மாற்றங்களாலே முற்றாக அழிவுற்றன.

காட்டுத்தீ ஏற்படும் போது ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புடைய காடுகள் எரிந்து சாம்பலாவதோடு அதில் வசிக்கும் ஆயிரக்கணக்கான உயிர்கள் அழிவடைகின்றன. மண்சரிவு, சூறாவளி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை மாறுதல்களாலும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகின்றன.

இதனைத் தவிர மனித செயற்பாடுகளாலும் விலங்குப் பரம்பல் அற்றுப்போகின்றது. சட்டவிரோத வேட்டையாடுதலில் ஈடுபடுதல், காடுகளை அழித்தல் விலங்குகளை தமது ஆராய்சிகளுக்கு பயன்படுத்தல் மற்றும் அவற்றை மிருகக்காட்சிசாலையில் பிடித்தடைத்து காட்சிப்பொருளாக்குதல் போன்றவற்றாலும் அழிவடைகின்றன.

தற்போது உலகின் அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகளிற்கு உதாரணமாக சிறுத்தை, காண்டாமிருகம், யானைகள் மற்றும் கோல்டன் டேபி டைகர் போன்றவற்றை குறிப்பிடலாம்.

வனவிலங்குகளைப் பாதுகாத்தல்

அழிவின் அபாயத்திலிருக்கும் வனவிலங்குகளை பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும். வனவிலங்குகளின் உறைவிடமாகவுள்ள காடுகளை பாதுகாப்பதே அதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாகக் கொள்ளப்படுகின்றது.

காடுகள் பாதுகாக்கப்படும் போது விலங்குகளின் இருப்பிடப் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட முடிவதனால் அவற்றால் சுதந்திரமாக நடமாடவும், தம் இனத்தை பெருக்கிக்கொள்ளவும் முடியும்.

இதனைத் தவிர விலங்கழிப்பிற்கு எதிராக பல்வேறு சட்டங்களும் இயற்றப்படடுள்ளன. இதற்கு உதாரணமாக 1972ம் ஆண்டு இந்திய வன உயிர் பாதுகாப்புச் சட்டம், மற்றும் 2004ம் வருட பல்லுயிர் பெருக்கச் சட்டம் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மக்களிடையே வனவிலங்குகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சிறுவர்களிற்கு விலங்குகளை பாதுகாக்க கற்றுத்தருவதோடு அவற்றின் அவசியத்தையும் உணர்த்த வேண்டும்.

முடிவுரை

வனவிலங்குகளை பாதுகாப்பதென்பது தனிமனிதர்களிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்திற்கும் நன்மை பயப்பதாகும்.

அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை பின்பற்றுவதோடு, விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

காட்டு விலங்குகளை பிடித்து எமது தேவைக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். அவற்றை இவ்வுலகின் மிகப்பெரிய சொத்துக்களாகக் கருதி பாதுகாத்து வளம்மிகுந்த பூவுலகை கட்டியெழுப்புவோமாக.

You May Also Like :

உலக வெப்பமயமாதல் கட்டுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை