நான் ஒரு பறவையானால் கட்டுரை

Naan Oru Paravai Aanal Tamil Katturai

இந்த பதிவில் “நான் ஒரு பறவையானால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.

பறவைகளை காணும் போதெல்லாம் எழும் கற்பனைகளின் ஆசை வெளிப்பாடே இந்த கட்டுரை.

நான் ஒரு பறவையானால் கட்டுரை – 1

சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் பறவைகளை காணும் போதெல்லாம் அவற்றை போலவே சிறகடித்து பறக்கும் ஆர்வம் எனக்குள்ளும் எழுவதுண்டு. நான் ஒரு பறவையானால் எல்லைகளற்ற வானவெளியில் என் அகண்ட சிறகுகளை விரிந்து மகிழ்ச்சியாகப் பறப்பேன்.

கவலைகளை எல்லாம் மறந்து, இயற்கையின் அழகுகளை எல்லாம் கண்டு மகிழ்வேன். வானுயர்ந்த மரங்களைக் கொண்ட காடுகளையும், பச்சை பசேலென்ற காடுகளையும், சலசலத்து ஓடும் ஆறுகளையும் தாண்டி உயரப் பறப்பேன். பரந்து விரிந்த சமுத்திரங்களின் மேல் வட்டமடித்து பறந்து, தூய்மையான காற்றை சுவாசிப்பேன்.

மலைகளில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகளை அதன் உச்சியில் அமர்ந்தவாறு இரசிப்பேன். வானிலிருந்து பொழியும் மழைத் துளிகளினூடே உற்சாகமாய் பறந்து மழையில் நனைவேன்.

காடுகளில் கிடைக்கும் பழங்களையும், வயல்களில் மின்னும் நெல்மணிகளையும் கொத்தித் உண்பேன். மலைஅடிவாரங்களில் அமர்ந்து நான் இதுவரை காணாத இயற்கையின் அழகான அம்சங்களை கண்டு களிப்பேன்.

நான் ஒரு பறவையானால் அதிகாலையில் துயிலெழுந்து இனிமையான குரலெழுப்பி மனிதர்களிகளின் தூக்கம் கலைவிப்பேன். காலை வேளைகளில் அவசரமாக பள்ளிக்கு ஓடாமல், சூரியக் கதிர்களினூடே சிறகுகளை விரித்து பறப்பேன்.

மாலைகளில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடும் இடங்களில் அமர்ந்து அவர்களின் உற்சாகத்தை இரசிப்பேன். இதுவரை பெற்றோருடன் சென்ற இடங்களில் எல்லாம் தனியாக சுற்றித் திரிவேன்.

ஏனைய பறவைகளுடன் சேர்ந்து அவைகளின் மொழி அறிய முயற்சிப்பேன். இந்த வானவெளியில் என் வலிமையான சிறகுகளை அசைத்து காற்றை ஊடுருவி, இந்த உலகை இரசித்து மகிழ்வுற்று வாழ்வேன்.

நான் ஒரு பறவையானால் கட்டுரை – 2

காலை வேளைகளிலும், மாலை வேளைகளிலும் பறவைகள் வானத்தில் வட்டமிட்டு பறப்பதை பார்த்து இரசிப்பதுண்டு. பறவைகள் சுதந்திரமானவை. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. எல்லைகளற்ற இந்த வான வீதியில் அவை சுற்றித் திரியாத இடங்களே இல்லை.

அவற்றை பார்த்து இரசிக்கும் போதெல்லாம் நானும் அந்த பறவைகளைப் போல் சிறகடித்து பறக்க ஆவல் எழுவதுண்டு. நான் ஒரு பறவையானால் அவற்றைப் போல் சுகந்திரமாய் பறந்திடுவேன். “கீச் கீச்” என ஒலியெழுப்பி “பட பட” என சிறகுகளை அடித்து உயரப் பறப்பேன்.

வானத்தில் பறந்து செல்லும் விமானங்களுக்கு இணையாக போட்டி போட்டு பறந்திடுவேன். பரந்து விரிந்த மைதானங்களில் தரையிறங்கி ஓய்வாக அமர்ந்திடுவேன். வானளவு உயர்ந்த கோபுரங்களின் உச்சியில் அமர்ந்து என் கிராமத்தின் இயற்கை அழகைக் கண்டுகளித்திடுவேன்.

நகர வீதிகளில் எழும் மாசுக் காற்றிலிருந்து விடுபட்டு, சில்லென்று வீசும் தூய்மையான தென்றலின் குளிர்மையை அனுபவித்திடுவேன். பறவைகள் கூடி வாழும் மரக்கிளைகளிற்கு சென்று அவைகளை போல் கூடு கட்டி அவைகளுடன் ஒற்றுமையாக வாழ்ந்திடுவேன்.

நான் ஒரு பறவையானால் ஓய்வின்றி கடினமாக உழைக்கும் விவசாயிகளின் வயல்கள் தோட்டங்களில் எதையும் பறித்துண்ணாமல் காடுகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் விதைகளை மட்டும் உண்பேன்.

வேட்டையாடுபவர்களின் கண்களில் அகப்படாமல் சுதந்திரமாய் பறந்திடுவேன். பறவைகளிடம் உள்ள நற்குணங்களாகிய ஒற்றுமையாக வாழ்தல், உற்சாகமாக வாழ்தல் மற்றும் உழைத்து உண்ணுதல் போன்றவற்றை கற்று அவற்றை என் நண்பர்களிற்கு கற்றுத்தந்திடுவேன்.

அதுமட்டுமல்லாது சுயமாக வாழும் இயல்பையும் கற்றறிந்து அவற்றை என் வாழ்வில் கடைப்பிடித்திடுவேன்.

You May Also Like :

உடல் நலம் காப்போம் கட்டுரை

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை