மழை என்பதே நமது பூமிக்கு வரும் விருந்தாளியாகும். அதனை கைநீட்டி வரவேற்க வேண்டும். மழை என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டமான விடயமாகும் அதுவும் கோடை காலத்தில் மழை பெய்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். இந்த மழையானது பல்வேறு விதத்தில் பொழிகின்றது. அந்தவகையில் ஆலங்கட்டி மழையானது பெரிய மேகங்களில் இருந்து வரும்.
ஆலங்கட்டி உருவாகுவதற்கு தேவையான மோகங்களை திரள்கார் முகில் மேகங்கள் (Thunder Clouds / Cumulonimbus) என்று அழைக்கின்றோம். பொதுவாகக் கோடை காலத்தில் பூமியின் மேற்பரப்பு அதிக வெப்பம் அடைந்து சரசரவென மேல் நோக்கி செங்குத்தாக எழும்பும்.
அவ்வாறு எழும் காற்றுடன் நிலத்தில் உள்ள சிறிய துகள்களும் சேர்ந்து கொள்ளும். மேகங்கள் செங்குத்தாக உயர்வடைவதால் இந்தத் துகள்களில் ஒரு பெரியளவு நீரை சேமித்து வைக்க முடியும். அப்படித் திரளான நீரை சேகரிக்கும் மேகங்கள். வளிமண்டலத்தில் அதிக உயரத்தை எட்டும் போது அது திடீரென குளிர ஆரம்பிக்கும்.
வளிமண்டலத்தில் உயரத்தில் உள்ள குளிர்ந்த காற்றை சூடான மேகங்கள் திடீரென எதிர்கொள்ளும் போது அதில் உள்ள நீர் குளிரால் உறையும். இந்த நிலையில் தண்ணீர் கட்டிகளாக அதாவது மல்லிகைப்பூ போன்ற ஆலங்கட்டிகளாக மாறும்.
இதனால் மேகத்தின் எடை அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் மேகம் அதிக குளிர்ச்சியைப் பெற்று விட அது சட்டென கீழ்நோக்கி இறங்கும். அப்படி இறங்கும் போது மேகங்களில் உள்ள ஆலங்கட்டிகள் சட சடவென நிலத்தில் விழுந்து சிதறும்.
ஆலங்கட்டி மழை வரலாற்றிலேயே மொராதபாத்தில் பெய்ததுதான் மிக மோசமாகக் கூறப்படுகின்றது. 1888 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் 246 பேர் உயிரிழந்தனர். 1600 கால்நடைகள் உயிரிழந்தன. ஒவ்வொரு கட்டியும் கிரிக்கெட் பந்தின் அளவிற்கும், முட்டையின் அளவிற்கும் இருந்துள்ளது.
அதன் பின் 2010 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் வயல் பகுதியில் விழுந்த ஆலங்கட்டியின் எடை 4.4 கிலோ ஆகும். இந்த ஆலங்கட்டியே இதுவரை விழுந்த ஆலங்கட்டிகளில் அதிகூடிய எடையாகக் கருதப்படுகின்றது.
மேலும், விவசாய நிலங்களில் ஆலங்கட்டிகள் விழும்போது பயிர்கள் கருகிப் போகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
ஆலங்கட்டி மழை பெய்தவுடன் அது எந்த அளவு பெய்கின்றது என்பதை பார்த்துவிட்டு அதனை பலரும் ரசிக்கின்றனர். அழகாகப் பார்க்கப்படும் ஆலங்கட்டி மழை எப்போதும் அழகாக மட்டும் இருந்து விடுவதில்லை என்பதனை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஆலங்கட்டி மழை என்றால் என்ன
ஆலம் + கட்டி + மழை = ஆலம்கட்டி மழை
சூடாமணி, பிங்கல நிகண்டு போன்றவை ஆலம் என்பதற்குப் பல பொருள்களைக் கூறுகின்றன. அதாவது ஆலம் என்பது நீர், மரம், பூ, விஷம், எனக் குறிப்பிடுகின்றன.
அடர்த்தியான மழை பெய்யும் போது நீர் குளிர்ந்து இறுகி கட்டியாகி மழையாய்ப் பெய்கின்றது. இதுவே ஆலங்கட்டி மழையாகும்.
விரிவாகக் கூறின், காற்று வெப்பச் சலனத்தால் திடீரென குளிர்ந்து மேகங்களுக்கு உள்ளே இருக்கின்ற நீர் எல்லாம் உறைந்து கட்டியாக மாறி பனிக்கட்டிகளைப் போல வேறு வேறு விதத்தில் கல் போன்று பனிக்கட்டிகளாகப் பொழியும். அவ்வாறு பொழியும் மழையே ஆலங்கட்டி மழையாகும். இது பல்வேறு இடங்களில் பல்வேறு எடைகளில் பொழியும்.
Read More: அமில மழை காரணங்கள் மற்றும் விளைவுகள்