புத்தக வாசிப்பு கட்டுரை

Puthaga Vasippu Katturai In Tamil

இந்த பதிவில் “புத்தக வாசிப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். அதுமட்டுமின்றி வாசிப்பு என்பது ஒரு சிறந்த பழக்கவழக்கமும் ஆகும்.

புத்தக வாசிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாசிப்பு எனும் அழகியல்
  3. புத்தகங்கள் ஆகிய நண்பர்கள்
  4. புத்தக வாசிப்பின் பலன்கள்
  5. படைப்பாற்றலும் வாசிப்பும்
  6. மனிதனை பூரணமாக்கும் புத்தகங்கள்
  7. முடிவுரை

முன்னுரை

“நான் வாசிக்காத புத்தகங்களை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்கிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

அந்த வகையில் உலகின் ஆகச் சிறந்த தலைவர்கள் ஏன் புத்தக வாசிப்பை இவ்வளவு தூரம் நேசித்தார்கள்? ஏனென்றால் புத்தகங்கள் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. அமைதி எனும் உயரிய ஞானத்தை வழங்கி தன்னை வாசிப்பவர்களை தலை நிமிர செய்கிறது.

ஆதலால் தான் நம் முன்னோர்கள் “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்று கூறினார்கள். இக்கட்டுரையில் புத்தக வாசிப்பு மனித மனங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியே நோக்கப்படுகிறது.

வாசிப்பு எனும் அழகியல்

மனிதனுடைய ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள் தான் என்கிறார் “அல்பிரட் ஐன்ஸ்டீன்”. ஆமாம் மனிதன் சிந்திக்க வல்ல ஒரு விலங்கு அதனால் தான் வாசிக்கவும் அதனை யோசிக்கவும் திறனுடையவனாக இருக்கிறான். பல படைப்புக்களையும் படைக்கவும் முடிகிறது.

மனிதனுடைய உள்ளத்தில் உள்ள உணர்வுகளையும் அறிவையும் அனுபவத்தையும் திறன்களையும் பல வாசகர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக புத்தகங்கள் காணப்படுகின்றன.

நல்ல புத்தகங்கள் மனித மனங்களை அத்தனை அழகாக மாற்றுவதனால் இவை ஒரு அழகியல் என்றால் அது மிகையல்ல.

புத்தகங்களாகிய நண்பர்கள்

“கல்வியே மூலதனம்” என்று கூறுவார்கள் வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒருவன் கற்ற கல்வி அவனை உயரச்செய்யும்.

நல்ல நண்பர்கள் எவ்வாறு தோழோடு தோழ் நிற்பார்களோ, மகிழ்ச்சி அளிப்பார்களோ, நல்வழி படுத்துவார்களோ, அது போல நல்ல புத்தகங்களும் நம்மை செதுக்கும்.

இதனால் தான் ஜீலியஸ் சீசர் 1000 புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனை காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி என்றார்.

ஓர் நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்று கூறுவார்கள். ஆதலால் புத்தகங்களை எமது நண்பனாக்கி கொள்வது வாழ்வில் எம்மை உயர்த்தும்.

புத்தக வாசிப்பின் பலன்கள்

புத்தக வாசிப்பு மனிதனிடத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி சலனமில்லாத அமைதியையும் பொறுமையையும் தர வல்லது. சிறந்த பொறுமையையும் பிரச்சனைகளையும் சமாளிக்க வல்ல அனுபவங்களையும் புத்தகங்கள் தருகின்றன. ஆழமான அறிவினால் ஆக்கமான பேச்சாற்றலையும் தர வல்லதாகும்.

அறிவு, திறன், தன்னம்பிக்கை போன்றவற்றையும் புத்தக வாசிப்பு தரும். எழுத்தாற்றல் மூலமாக பல படைப்புகள் தோன்ற வாசிப்பு பழக்கவழக்கமே தூண்டுகிறது.

காலம் தோறும் தோன்றுகின்ற சிறந்த படைப்பாளிகள் மற்றும் மிகச்சிறந்த ஆளுமைகள் சிறந்த வாசகர்களாக தான் இருப்பார்கள்.

வாழ்வின் தார்ப்பரியங்கள் புதிய புதிய விடயங்களை மனிதனுக்கு புத்தகங்களே ஊட்டுகின்றன. இவ்வாறு புத்தகங்களின் பலன்களை கூறி கொண்டே செல்லலாம்.

புடைப்பாற்றலும் வாசிப்பும்

“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்கிறார் ஔவையார்.

அதாவது ஒருவர் எவ்வளவு தூரம் நூல்களை தேடி கற்று பரிச்சயமாக உள்ளாரோ. அவ்வளவு தூரம் அவரிடம் அறிவும் படைப்பாற்றலும் நிறைந்திருக்கும்.

இதனை வள்ளுவர் தனது பாணியில் கூறுகையில் “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைதூரும் அறிவு” என்கிறார்.

உலகத்தின் வரலாறு, அரசியல், கலை, விஞ்ஞானம், கலாச்சாரம், இலக்கியம் போன்ற மரபுகள் பெருமைக்குரியன இவற்றினை படைக்கும் படைப்பாளிகள் சிறந்த வாசிப்பு பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

உலகின் பெரிய மாமேதைகள் அனைவரும் புத்தக வாசிப்பினால் உருவானவர்களே. சிறந்த சிந்தனைகளையும் கற்பனை திறனையும் உருவாக்குவன சிறந்த புத்தகங்களே ஆகும்.

மனிதனை பூரணமாக்கும் புத்தகங்களும்

மனிதன் அறியாமை, ஆசை, பொறாமை, பொய் போன்ற தீய எண்ணங்கள் மற்றும் மடமைத்தனம் மூடநம்பிக்கைகள் தவறான வழக்கங்கள் வழி நிற்பதனால் பல தவறான செயல்களில் ஈடுபடுவதும் பிறரை துன்புறுத்தவும் வேதனை படுத்தவும் செய்கிறான்.

அதர்ம வழியில் செல்கிறான் இவற்றை தடுத்து அவனை நல்வழியில் இட்டு செல்வன நல்ல புத்தகங்கள் தான்.

இதனால் தான் வாசிப்பு மனிதனை பூரணமடைய செய்கிறது என்கிறார்கள். நல்ல புத்தகங்களை வாசித்து அதன் படி ஒழுகுபவர்கள் சிறந்த மனிதர்களாக இங்கே வாழ்கின்றனர்.

முடிவுரை

“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அதாவது புத்தகங்களை மனிதன் வாசிப்பதனால் இங்கு குற்ற செயல்கள் குறைவடையும் நல்ல விடயங்கள் நடந்தேறும்.

இன்றைய சமுதாயத்தில் வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தான் சமூகம் இவ்வாறான சீர்கேடுகளை எதிர்கொள்கிறது. ஆகவே நாம் வாசிப்பை ஊக்கப்படுத்துவோம்.

“ஒரு நூலகம் எரிக்கப்படுகின்ற போது அங்கு நல்ல மனிதர்களும் எரிக்கப்படுகிறார்கள்” –சே குவேரா

You May Also Like :

பெண் குழந்தை பாதுகாப்பு கட்டுரை

ஆசிரியர் பணி கட்டுரை