நூலகத்தின் பயன்கள் கட்டுரை

noolagam payangal katturai in tamil

இந்த பதிவில் “நூலகத்தின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

நூலகத்தின் பயன்கள் நன்கறிந்து மாணவர்களாகிய நாமும் நூல்கள் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.

நூலகத்தின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நூலகத்தின் உருவாக்கம்
  3. நூலகத்தின் தேவை
  4. நூலகத்தின் மறுபெயர்கள்
  5. நூலகங்களின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

அறிவால் உயர்ந்து அரியாசனம் செய்வோம் என்கிறார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. அத்தகைய அறிவினை நமக்கு அள்ளித் தரும் இடம் நூலகம் ஆகும். நல்ல அறிவுரைகளை சொல்வதில் பெற்றோருக்கும் மேலாக உயர்ந்து நின்கின்றன நூலகங்கள்.

நூல்கள் நிறைந்த இடமே நூலகம் ஆகும். நூலகமானது பல துறைசார்ந்த அறிஞர்கள் வாழும் இடமாகும். இது ஓர் அறிவுக் களஞ்சியமாகும்.

நல்ல நூலகங்களைப் படிப்பதன் மூலம் அறிவு வளரும். நூலகங்கள் நமக்களிக்கும் பயன்கள் பலவாகும். நூலகங்களின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நூலகத்தின் உருவாக்கம்

உலகில் முதன் முதலில் நூலகம் என்கின்ற அமைப்பை ஏற்படுத்தியவர்கள் பண்டைய காலங்களில் மெசொப்பொத்தேமியர்கள் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஈராக்கியர்கள் ஆவர்.

அசிரியப் பேரரசின் அரசாங்கத்தின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில் எழுதி அவற்றை சூளைகளில் சுட்டு காயவைத்து பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத்தினர்.

இத்தகைய முக்கிய ஆவணங்கள் அரசு கருவூலங்களிலும் சில கோவில் கருவரைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளடைவில் உயிர்காக்கும் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்கள் போன்றவையும் எழுதிப் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இக்களிமண் தகடுகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தையும் தாண்டியது, ஒவ்வொரு களிமண் தகடுகளும் துறை வாரியாக பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு என்று விடப்பட்டது. இதுதான் உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும்.

நூலகத்தின் தேவை

நூலகத்தின் தேவை பற்றி உணர்ந்ததாலேயே “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமெனில் கல்வியறிவு சமூகத்திற்கு இருப்பது அவசியமாகின்றது.

இத்தகைய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நூலகம் மிகவும் அவசியமானவையாகும். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும் மக்களை மேன்மக்களாக மிளிர வைப்பதற்கு நூலகங்கள் முக்கியமாகின்றன.

பலதுறை சார்ந்த அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கும், துறை சார்ந்த திறனை அறிந்து கொள்வதற்கும் நூலகங்கள் தேவைப்படுகின்றன. ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்ற நூலகங்கள் அவசியமாகின்றன.

நூலகத்தின் மறுபெயர்கள்

புத்தகசாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிகம், நூல் நிலையம், பண்டாரம் என பல பெயர்களால் நூலகம் அழைக்கப்படுகின்றது.

நூலகங்களின் பயன்கள்

நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும், வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஒருவரை பல்துறை அறிவுடையவர்களாக மாற்றுவதற்கு நூலகம் பயன்படுகின்றது. வாழ்வில் சிறந்த முடிவுகளை எடுக்க நூலகள் துணைபுரியும்.

நூலகம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒழுக்கத்தை ஊட்டும், நற்பண்புகளையும், நாகரீகத்தையும் கற்றுத் தரும்.

பகுத்தறிவுத் திறனை வளர்க்கும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அமுதசுரபியாய் அள்ளிக் கொடுக்கும்.

முடிவுரை

நூலகங்களைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். எத்துறை சார்ந்த நூல்களையும் செலவின்றிப் படித்துப் பயன்பெற உதவுவது நூலகம்.

நூலகத்தின் பயன்கள் நன்கறிந்து மாணவர்களாகிய நாமும் நூல்கள் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

You May Also Like :
இளைஞர்கள் பற்றிய கட்டுரை
உலக தாய்மொழி தினம் கட்டுரை