பேரூராட்சி என்றால் என்ன

peruratchi enral enna

இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் மட்டும்தான் நகராட்சிக்கும், கிராம உள்ளுராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி அமைப்பு நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.

தமிழ் நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடன் ஊர்களைப் பேரூராட்சியாகப் பிரித்துள்ளனர்.

பெரும்பான்மையான பேரூராட்சி தாலுக்கா தலமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள், வழிபாட்டுத் தலங்களாகவும் விளங்குவதால் நகரங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன.

பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி, அழகுபடுத்தும் பணி, அடிப்படையில் வசதிகளை மேம்படுத்தும் பணி ஆகியவற்றிற்கு தனியார் நிறுவனப் பங்களிப்பு பெற பெருமளவில் வாய்ப்பு உள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், முக்கிய வணிக நிறுவனங்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியவர்களது உதவிகளைப் பெற்று அவர்களது பங்களிப்புடன் சாலை, தெரு ஓர பூங்கா அமைக்கலாம் அல்லது பராமரிக்கலாம்.

மற்றும் தெருப் பெயர்ப் பலகை அமைத்தல், சமுதாயக் கூட்டம் அமைத்தல், சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டிடம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

பேரூராட்சி என்றால் என்ன

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு, மாநில அரசுக்குட்பட்ட பேரூர்களை ஆளுமை செய்யும் ஆட்சி மன்றம் ஆகும்.

பேரூராட்சிகளில் மக்கள் தொகை 5000ற்கும் அதிகமாகவும் 30,000 வரையிலும் இருக்கும்.

பேரூராட்சி வகைகள்

பேரூராட்சிகள் அதன் வருட வருவாய்க்கு ஏற்ப 5 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன மூன்றாம் நிலைப் பேரூராட்சி, இரண்டாம் நிலைப் பேரூராட்சி, முதல் நிலைப் பேரூராட்சி, தேர்வு நிலைப் பேரூராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி போன்றவையே அவையாகும்.

மூன்றாம் நிலைப் பேரூராட்சி என்பது பத்து இலட்சத்திற்கு குறைந்த வருவாய் உடையது ஆகும்.

இரண்டாம் நிலை பேரூராட்சி என்பது இருபது இலட்சத்திற்கு அதிகமாகவும், முதல் நிலைப் பேரூராட்சி என்பது இருபத்து ஐந்த இலட்சத்துக்கும் அதிகமாகவும், தேர்வு நிலைப் பேரூராட்சி என்பது ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்திற்கு அதிகமாகவும், சிறப்பு நிலைப் பேரூராட்சி என்பது ஒரு கோடிக்கு அதிகமாகவும் வருவாய் ஈட்டுவது என நகராட்சியைப் போலவே அதன் வருவாயிற்கு ஏற்ப பிரிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்

பேரூராட்சிகள் நகராட்சிகளைப் போலவே தன்னிச்சையாகச் செயற்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னை மாவட்டம் தவிர்ந்த ஏனைய 37 மாவட்டங்களில் 528 பேரூராட்சிகள் உள்ளன.

இந்த பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்கம் சென்னையில் செயற்படுகின்றது.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920களின் படி பேரூராட்சிகளின் நிர்வாகம் செயற்படுகின்றது.

பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இடைப்பட்ட அமைப்பாக விளங்கினாலும் பேரூராட்சிகளில் மக்கள் தொகை 5000க்கு அதிகமாகவும் 30000 வரையிலும் உள்ளன.

பேரூராட்சிகள் மேற்கொள்ளும் பணிகள்

  • பொது சுகாதாரம் – துப்புரவு,கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி,திடக்கழிவு மேலாண்மை
  • மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு
  • குடிநீர் வழங்கல்
  • விளக்குவசதி
  • கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்குசெய்தல்
  • தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு
  • மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.

Read more: மாநகராட்சி என்றால் என்ன

அரசியலமைப்பு என்றால் என்ன