பழையன கழிதலும் புதியன புகுதலும் கட்டுரை

பழையன கழிதலும் புதியன புகுதலும் கட்டுரை

பழையன எல்லாம் பழையன என்று தவிர்க்கப்பட வேண்டியவையுமல்ல; புதியன யாவும் வரவேற்கப்பட வேண்டியவையுமல்ல.

பழையன கழிதலும் புதியன புகுதலும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பழையன கழிதலும் புதியன புகுதலும்
  3. பழையனவும்  நம்வாழ்வும்
  4. புதியனவும் நம்வாழ்வும்
  5. நடைமுறையில் மனித மனநிலை
  6. முடிவுரை

முன்னுரை

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது தமிழர்களுடைய முதுமொழிகளில் ஒன்று. இதுவே இயற்கையின் நியதியும் கூட. ஆயினும் பழையவை என்று கழிப்பவை தொடர்பிலும், புதியன என்று ஏற்றுக் கொள்பவை தொடர்பிலும் நாம் தீவிர கரிசனை காட்ட வேண்டியிருக்கிறது.

ஏனெனில் பழையன எல்லாம் பயனற்றவையுமல்ல, புதியன எல்லாம் பயன்வாய்ந்தவையுமல்ல என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

“ பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினனானே”

என பவணந்தி முனிவர் நன்னூலில் குறிப்பிட்டபடி, கால மாற்றங்களோடு பொருந்திப் போகாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாதவற்றை தவிர்த்து, கால மாற்றங்களோடு மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடை போடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதால் விளக்கப்படுகின்றது.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளன்று கொண்டாடப்படுகின்ற போகிப் பண்டிகை விளக்கும் தத்துவமும் இதுவாகும்.

மாதத்தின் கடைசி நாளன்று தேவையற்ற பழைய பொருட்களை எரித்து, பழைய சிந்தனைகளையும் தேவையற்ற மன அழுக்கையும் போகியில் போக்கிவிட்டு, புதிய பொருட்கள், புதிய எண்ணங்களுடன் பிறக்கும் புதிய மாதமான தையை வரவேற்பதே போகிப் பண்டிகை எனப்படுகிறது.

பழையனவும் நம்வாழ்வும்

பழையன கழிதல் என்ற பெயரில் நம் வாழ்வை நெறிப்படுத்தும் விஷயங்களை கைவிடுதல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்காக பழையன யாவும் நன்மை தருபவை என்பதற்குமில்லை.

பழையன என்று நாம் எண்ணும் சில எவ்வளவு பழமையாகிப் போனாலும் இன்றைக்கும், எதிர்வரும் காலத்திற்கும் பொருந்துவனவாக காலத்தை வென்று ஒளிர்கின்றன.

காலங்காலமாக பேணப்பட்டு வருகின்ற பண்பாடுகள், கலாசாரங்கள் என எமது வாழ்விற்கு வழிகாட்டுபவற்றை எக்காலத்திலும் பழையன என்று ஒதுக்கிட முடியாது.

எமது பண்பாட்டின் ஒவ்வொரு மரபிலும் ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளன. எக்காலத்திலும் அவற்றை கடைப்பிடித்து ஒழுக வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

புதியனவும் நல்வாழ்வும்

நாகரிகம் வளர வளர, மக்களிடையே புதுப் பொருட்களும், புதிய பழக்க வழக்கங்களும் நடைமுறைக்கு வருதல் என்பது தவிர்க்க முடியாதது.

இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்திலே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது மாற்றங்கள் இவ்வுலகில் நடந்தேறிக் கொண்டிருக்கும் நிலையும் அவற்றோடு நம்மையும் இயைவுபடுத்தி வாழ வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகின்றது.

புதியவை பல பழையவற்றின் மேம்பட்ட படைப்புக்களே ஆகும். புதிய பொருட்களை நுகரும் போது, புதிய சூழலுக்குள் நுழைகின்ற போது கிடைக்கின்ற புத்துணர்ச்சி வாழ்விற்கு ஒரு புது உத்வேகம் அளிப்பதாகும்.

நடைமுறையில் மனித மனநிலை

தேவையற்றுப்போன பொருட்களும், அவற்றை குறிக்க வழங்கும் சொற்களும், பழக்கவழக்கங்களும் வழக்கற்றுப் போகின்ற நிலையே எம்மவர்களிடையே காணப்படுகின்றது.

ஆதலால் பழையன எல்லாம் பழிக்கத்தக்கன, புதியன எல்லாம் போற்றற்குரியன என எவரும் எண்ணுதல் கூடாது.

அவ்வாறே பழையன எல்லாம் போற்றற்குரியன, புதியன எல்லாம் பழித்தற்குரியன என்றும் கூறிட இயலாது.

ஆகவே தோன்றிய காலத்தைக் கொண்டு அவற்றை பாராட்டுவதும், பழிப்பதும் செய்யாது அவற்றின் தற்போதைய நிலை, அவை உணர்த்தும் நெறிமுறை கொண்டே அவற்றிற்கு உயர்வு தாழ்வு கற்பித்தல் வேண்டும்.

முடிவுரை

பழையன எல்லாம் பழையன என்று தவிர்க்கப்பட வேண்டியவையுமல்ல; புதியன யாவும் வரவேற்கப்பட வேண்டியவையுமல்ல.

பழையன புதியன இரண்டின் குணவியல்புகளையும் ஆராய்ந்து எவையெல்லாம் எம்வாழ்வை நெறிப்படுத்தும் என எண்ணுகின்றோமோ அவற்றை பழையன புதியன என்ற வேறுபாடுகளின்றி வாழ்வில் உபயோகித்து சிறப்புறுவோமாக.

Read More: தாய்மொழி கற்றலின் அவசியம் கட்டுரை

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்