தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை

Thanneer Semippu Katturai In Tamil

இந்த பதிவில் உயிர்கள் வாழ இன்றியமையாத “தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவசியத் தேவையான தண்ணீரை நாம் அளவுக்குப் பாதுகாப்பாக விழிப்புடன் பயன்படுத்த வேண்டும்

தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தண்ணீரின் முக்கியத்துவம்
  3. தண்ணீர் மருந்தாகும்
  4. வீணாகும் தண்ணீர் விழித்துக் கொள்வோம்
  5. தண்ணீர்த் தட்டுப்பாடு
  6. முடிவுரை

முன்னுரை

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் அவசியமானது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள் யாவும் உணரும்.

இன்று இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் பலவும் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினை முதன்மையானதாக காணப்படுகின்றது.

எனவே மனித சமுதாயத்துக்கு அத்தியாவசியத் தேவையான தண்ணீரை நாம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் அதனை எவ்வாறு சேமித்து வைக்க வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு இருப்பது அவசியமாகின்றது. இக்கட்டுரையில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பற்றி நோக்கலாம்.

தண்ணீரின் முக்கியத்துவம்

உலகின் அனைத்து ஜீவராசிகளின் உயிர் வாழ்க்கைக்கும் தண்ணீர் முக்கியமானது. விவசாய நடவடிக்கைகள், தொழிற்சாலைகளின் இயக்கங்கள் முதலானவற்றிக்கும் நீர் அவசியமாகின்றது.

நீர்வழிப் போக்குவரத்து, மீன்பிடி போன்றவற்றிற்கும் தண்ணீரின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

மரஞ் செடிகள் செழிப்பாக வளர்வதற்கும் பசுமையைப் பேணவும் தண்ணீர் மிகவும் அவசியமாகின்றது.

தண்ணீர் மருந்தாகும்

தண்ணீர் பல நோய்களை குணப்படுத்த கூடிய சக்தி வாய்ந்த மருந்தாகும். சிறுநீர்க் கற்கள் இருப்பவர்கள் அதிகம் தண்ணீரைப் பருகி வந்தால் சிறுநீர் கற்கள் சிறியதாக இருக்கும் போதே கரைந்துவிடும்,

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் தினமும் அதிகளவிலான தண்ணீரை பருகி வந்தால் உடற்சூடு தணியும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் நிவாரணம் அளிக்கிறது,

நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் அடிக்கடி வரும். இதனால் காய்ச்சல் விரைவில் குறைகிறது. இருமல், சளி, தொண்டைப்புண், சுவாசப்பாதை தொற்று போன்றவை குணமாகக் கூட தண்ணீர் உதவுகிறது.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கலாம்.

வீணாகும் தண்ணீர் விழித்துக் கொள்வோம்

தண்ணீரின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி அறியாமல் நாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். எந்த மாதிரியான வேலைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதையெல்லாம் உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

குளித்தல், துவைத்தல், பாத்திரம் கழுவுதல், கை கால் கழுவுதல் போன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எவ்வித அக்கறையும் இன்றி செலவு செய்கின்றோம்.

எந்த மாற்றமாக இருந்தாலும் அதில் மக்களின் பங்களிப்பே முதன்மையானதாகும். எனவே தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது நம் கைகளிலேயே உள்ளது.

தண்ணீர்த் தட்டுப்பாடு

இன்று மனித சமூகம் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சனைகளில் தண்ணீர் தட்டுப்பாடும் ஒன்றாக காணப்படுகின்றது.

நீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய நீர் ஆதாரங்கள் இல்லாதது. சமமற்ற விநியோகம் காரணமாக உலகம் நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

உலகளாவிய நன்னீர் தேவையின் கூர்மையான உயர்வு, வறட்சி, மழையின்மை, அல்லது மாசுபாடு போன்றவற்றாலும் நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

முடிவுரை

நீர் வீடுகளில்தான் அதிகம் வீணாகின்றது. எனவே பாத்திரம் கழுவும்போதோ அல்லது துவைக்கும்போதோ அதிக தண்ணீரைப் பயன்படுத்தாமல் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தலாம்.

குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தில் இருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். தண்ணீர்க் குழாய்களில் கசிவிருந்தால் உடனடியாகச் சரி செய்துவிட வேண்டும்.

இவைபோன்ற பல வழிமுறைகளைக் கையாண்டு தண்ணீர் சேகரிப்பை மேற்கொள்ளலாம்.

தண்ணீர் தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப, நீரை சேமித்து மிச்சப்படுத்தும் பட்சத்தில், அடுத்த தலைமுறைக்கு, குறைந்தளவாவது தண்ணீரை விட்டுச் செல்ல முடியும்.

You May Also Like :
நீர் வளத்தை பாதுகாப்போம் கட்டுரை
மழை நீர் சேகரிப்பு கட்டுரை