துரித உணவு துரித முடிவு கட்டுரை

Thuritha Unavu Thuritha Mudivu Katturai

இந்த பதிவில் “துரித உணவு துரித முடிவு கட்டுரை” பதிவை காணலாம்.

துரித உணவுகள் துரித முடிவைப் பெற்றுத் தரும். அவற்றை தவிர்ப்பது நல்ஆரோக்கியத்தைப் பெற்றுத் தரும்.

இன்று அனேகமானோர் துரித உணவின் சுவையை விரும்பியும் மற்றும் அதிக வேலைப்பளு காரணமாக நேரம் இன்மையாலும் துரித உணவை அதிகம் விரும்புகிறார்கள்.

துரித உணவு துரித முடிவு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. துரித உணவு அறிமுகம்
  3. துரித உணவின் விளைவு
  4. துரித உணவை தவிர்த்தல்
  5. நல்ல உணவுப் பழக்கம்
  6. முடிவுரை

முன்னுரை

இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் இந்த மூன்றிலும் மனிதனிற்கு மிக அவசியமானது உணவு. உணவே மனிதனிற்கு உயிர் வாழ்வதற்கான சக்தியை வழங்குகின்றது.

ஆதிகால மனிதர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்தார்கள். இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், கிழங்குகள் மற்றும் பழங்களை உண்டு, ஆரோக்கியமான நீடித்த வாழ்வினை பெற்றிருந்தார்கள்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மனிதர்களில் விரைவான வாழ்க்கை முறையினாலும் துரித உணவு மற்றும் தவறாக உணவுப் பழக்கத்தாலும் பல்வேறு நோய் உபாதைகளிற்கும், சுகாதார சீர்கேடுகளிற்கும் ஆளாகியுள்ளார்கள்.

நச்சுப் பொருட்கள் கலக்காத உணவை உள்ளெடுப்பதும், சரியான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதும் ஆரோக்கியமாக வாழ மிகவும் அவசியமாகும்.

துரித உணவு அறிமுகம்

அதிகரித்த போட்டி மிக்க உலகில் மனிதர்கள் தம் அன்றாட வேலைகளிற்கு பின்னே ஓட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்கள். அதனால் ஓய்வாக வீடுகளில் சமைத்துண்ண யாரிற்கும் நேரம் இருப்பதில்லை.

இதனால் துரித உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளது. துரித உணவுகள் எனப்படுபவை சமைத்தபடியே விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுகளுமாகும்.

இவற்றிற்கு உதாரணமாக பீட்சா, பர்கர், நூடில்ஸ், பொரித்த இறைச்சி வகைகள் மற்றும் வறுத்த சோறு (பிறைட் றைஸ்) போன்றவற்றை குறிப்பிடலாம்.

இதனைத் தவிர போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பான வகைகள் மற்றும் பொலீத்தீன் பைகளில் அடைக்கப்பட்ட நொருக்கு தீனி (சிப்ஸ்) வகைகளும் உடலிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியன.

உலகமயமாக்கலின் விளைவினால் அனைத்து நாடுகளிலும் தோற்றம் பெற்ற இந்த துரிதஉணவு மையங்களானவை மனிதனது உடல் நலனில் அக்கறை செலுத்தாது, தமது இலாபத்தையே முதன்மையாக எண்ணி துரித உணவுகளை கவர்ச்சிகரமாக விற்பனை செய்து வருகின்றன.

துரித உணவின் விளைவு

துரித உணவுகளானவை மனிதனிற்கு கேடுவிளைவிக்கக்கூடியன. அதில் கலக்கப்படும் நிறக்கலவைகளும், அஜினமோட் போன்ற சுவையூட்டிகளும் நாளடைவில் மனிதர்களுக்கு வயிற்றுப்புண், புற்றுநோய், உடல் எடை அதிகரிப்பு, நீரழிவு, மற்றும் இருதய பிரச்சனைகள் போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றன.

இதனைத் தவிர துரித உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது எம்மை அறியாமலே அவற்றிற்கு அடிமையாகி விடுகின்றோம்.

அவற்றில் அதிகமாகக் கலக்கப்படும் சுவையூட்டிகள் மனிதர்களின் சுவை நரம்பை தூண்டக்கூடியன. பெரும்பாலும் வளர்ந்தவர்களை தவிர குழந்தைகளே அதற்கு மிக வேகமாக அடிமையாகின்றனர்.

எந்த விதமான கனியுப்புக்களோ அல்லது விற்றமின் சத்துக்களோ துரிதஉணவுகளில் இல்லை எனத்தெரிந்தும் பெற்றோர்கள் அதனை வழங்கி பிள்ளைகளை நோயாளிகளாக உருவாக்குகின்றார்கள்.

துரித உணவுகளைத் தவிர்த்தல்

துரித உணவு வகைகளானவை தவிர்க்கப்பட வேண்டியன. அதனைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி பாரம்பரிய உணவுப் பழக்கத்திற்கு மாறுதலாகும். குழந்தைகளிற்கு சிறுவயது முதலே துரித உணவுகளின் தீமைகளை எடுத்துக் கூறுவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையையை வாழ பழக்க வேண்டும்.

அவர்களிற்கு முடிந்த வரை வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே பீட்சா, பர்கர் போன்றவற்றை தயாரித்து வழங்கலாம். பெரியவர்கள் தம் நலனில் அக்கறை கொண்டு, சுயமாகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

துரித உணவுகளைத் தவிர்த்து நம்முன்னோர்கள் கற்றுத் தந்த பல்வேறுபட்ட சுவைமிகுந்த உணவுகளை உண்டு எமது ஆரோக்கியத்தை பாதுகாத்தல் அவசியமாகும்.

நல்ல உணவுப் பழக்கம்

சரியான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது ஆரம்ப காலம் தொட்டு வலியுறுத்தி வரப்படும் ஒன்று. ஒரு மனிதனிடம் நல்ல உணவுப் பழக்கம் இருந்தால் மட்டுமே அவனால் நோய் நொடியின்றி வாழ முடியும்.

நல்ல உணவுப் பழக்கம் எனப்படுவது, இயற்கையாக கிடைக்கும் உணவுகளை தெரிவு செய்தலையும், அவற்றை தினமும் சரியான நேரத்திற்கு உட்கொள்வதையும் குறிக்கும். உணவுகளாவை மனிதனிற்கு முழுமையான இயக்க சக்தியை வழங்குகின்றன.

ஆனால் தற்காலத்தில் இந்த உணவுகள் இயற்கைத் தன்மை அற்றனவாகவும், நச்சுத்பொருட்கள் கலந்தனவாகவும் காணப்படுகின்றன. எனவே இயற்கையாக விளையும் உணவுப்பொருட்களை மிகுந்த அவதானத்துடன் கொள்வனவு செய்து, அவற்றின் ஊட்டச்சத்துக்கள் அழியாமல் அவற்றை சமைத்து உண்ண வேண்டும்.

அத்துடன் அவற்றை காலந்தவறாமல் மூன்று வேளையும் உண்ண வேண்டும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்”

என்ற வள்ளுவரின் கூற்றிற்கமைய எந்த நேரமும் உணவை உட்கொள்ளாமல், உண்ட உணவு செரித்த பின்னரே அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும் இதுவே சரியான உணவுப் பழக்கமாகும்.

முடிவுரை

துரித உணவுகள் துரித முடிவைப் பெற்றுத் தரும். அவற்றை தவிர்ப்பது நல்ஆரோக்கியத்தைப் பெற்றுத் தரும். நல்ல உணவை உட்கொள்கின்ற மனிதர்களிற்கு நோய் நொடியே ஏற்படாது.

ஆரோக்கியமான உணவே சிறந்த மருந்தாக விளங்குகின்றது. எனவே நாம் அனைவரும் துரித உணவைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவை உண்டு நலம் பெற்று வாழ்வோமாக.

You May Also Like :

மருத்துவப் பணி கட்டுரை

உடல் நலம் காப்போம் கட்டுரை