பெற்றோரின் சிறப்பு கட்டுரை

petrorin sirappu in tamil

மாதா, பிதா, குரு, தெய்வம் என சான்றோர்கள் வணங்கத் தகுதியானவர்களின் வரிசையில் முன்னிலையில் தாய் – தந்தை ஆகிய பெற்றோர்களையே முதன்மைப்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் நாம் வாழும் உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்றோர்கள் எந்த அளவு முக்கியமானவர்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

பெற்றோரின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெற்றோரின் மகிமை
  3. பெற்றோரின் முக்கியத்துவம்
  4. பெற்றோருக்கு நாம் கொடுக்க வேண்டிய கௌரவம்
  5. தற்காலங்களில் பெற்றோர்களின் நிலை
  6. முடிவுரை

முன்னுரை

தான் அனுபவித்த துன்ப நிலைகளை தன்னுடைய குழந்தைகள் அனுபவிக்க கூடாது என தங்களுடைய குழந்தைகளுக்காகவே தங்களுடைய வாழ்வை முழுவதுமாக அர்ப்பணம் செய்யும் தியாகிகளே பெற்றோர்கள் ஆவர்.

இவ்வாறான தியாகிகளை விட உலகில் தலை சிறந்தவர்கள் யாரும் இல்லை. இக்கட்டுரையில் பெற்றோர்களின் சிறப்புகள் பற்றி நோக்குவோம்.

பெற்றோரின் மகிமை

“தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற ஔவையாரின் வாசகங்கள் பெற்றோரின் மகிமையை எடுத்துக் கூறுவதனை காணலாம்.

அதாவது இந்த உலகில் தன்னைப் பெற்ற தாயை விட வணங்குவதற்கு உயர்வான விடயம் எதுவும் இல்லை, அதே போல தந்தையின் வார்த்தைகளை விட உயர்வானது எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து இந்த வையகத்தில் பெற்றோர்களின் மகிமையை புரிந்து கொள்ள முடியும்.

பெற்றோரின் முக்கியத்துவம்

அதிசிறந்த அன்பினை தரும் தாயையும், மிகச் சிறந்த ஆசிரியரான தந்தையினையும் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் அதிர்ஷ்டசாலிகளே.

அதாவது இந்த உலகில் தாய் தந்தையினை இழந்து அனாதையாக பரிதவிக்கும் ஒவ்வொரு குழந்தையின் கண்ணீரிலும் நாம் பெற்றோரின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள முடியும்.

ஒரு குழந்தையை எவ்வளவு சொகுசாக வளர்த்தாலும் கூட பெற்றோரின் அரவணைப்பை போல் சிறந்த இடம் எங்கும் கிடைப்பதில்லை.

எனவே தாய் தந்தையினை அருகில் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பெற்றோர்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயற்பட வேண்டும்.

பெற்றோருக்கு நாம் கொடுக்க வேண்டிய கௌரவம்

இந்த உலகில் உயர்ந்த நிலையை அடைந்த ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பெற்றோரை மதித்து கௌரவம் அளித்தவர்களே ஆவர்.

தான் பெற்ற குழந்தையை வளர்த்து நல்வழியில் ஆளாக்குவதற்காக தங்களையே தியாகம் செய்யும் தியாகிகளான பெற்றோர்களை நாம் மதித்து நடக்க வேண்டும்.

சிறுவர்களாக நாம் இருக்கையில் கண் இமை போல் காத்த எம் பெற்றோர்கள் வயோதிபம் அடைந்தால் அவர்களை கண்கலங்காமல் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் அளிக்கும் கௌரவமாகும்.

தற்காலங்களில் பெற்றோர்களின் நிலை

இன்று நாம் வாழும் உலகம் நவீன மாற்றங்களை தன்னகத்தே உட்கொண்டு மனித வாழ்வில் புதிய புதிய விடயங்களை மாற்றி அமைத்துள்ளது. இதன் விளைவாகவே இன்று முதியோர் இல்லங்கள் நாட்டின் பல பாகங்களிலும் பரவிக் கிடப்பதனை காணலாம்.

தங்களை வளர்த்து ஆளாக்கும் பெற்றோர்களை வயோதிபத்தியின் காரணமாக தங்களுடைய பிள்ளைகள் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவல நிலை தற்காலங்களில் அதிகமாகவே இடம் பெறுகின்றது.

வெயிலிலும்-மழையிலும் துன்பத்திலும் -இன்பத்திலும் பார்த்து பார்த்து வளர்த்த தன்னுடைய குழந்தை வளர்ந்து ஆளாகியவுடன், உங்களுக்கு பொருத்தமான இடம் முதியோர் இல்லமே என கூறும் நிலைமையே தற்கால பெற்றோர்கள் அனுபவித்து வருகின்றனர்.

முடிவுரை

வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தங்களுடைய குழந்தைகளை பாதிக்க கூடாது என்பதற்காக அத்தனை துன்பங்களையும் சமாளித்து சகித்துக் கொண்டு குழந்தைகளுக்காக வாழும் தியாகிகளே பெற்றோர்கள்.

அவ்வாறான பெற்றோர்களை நாம் மதிக்காமல் நடப்போமே ஆனால் எம்மை விட கயமை நிறைந்தவர்கள் வேறு யாரும் இல்லை.

இன்றைய காலத்தில் பலரும் தங்களுடைய பெற்றோர்களை மதிக்காமல் முதியோர் இல்லங்களில் விடுகின்ற கொடுமையை காண முடியும்.

எமது பெற்றோர்களை மதித்து பாதுகாப்பதே எமது கடமை என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் இந்நிலைமையில் இருந்து எமது பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும்.

Read more: அன்பின் சிகரம் அம்மா கட்டுரை

அம்மா பற்றிய கட்டுரை