புயலிலே ஒரு தோணி கட்டுரை

Puyalile Oru Thoni Katturai In Tamil

இந்த பதிவில் “புயலிலே ஒரு தோணி கட்டுரை” பதிவை காணலாம்.

பெரும் புயலில் சிக்கி கரைசேர தத்தளிக்கும் தோணி போன்றது தான் வாழ்க்கை பயணம்.

புயலிலே ஒரு தோணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாழ்க்கை புயல் போன்றது
  3. நம்பிக்கை ஆகிய தோணி
  4. வெற்றியும் தோல்வியும்
  5. மனவலிமை வேண்டும்
  6. துடுப்பாக கடின உழைப்பு
  7. முடிவுரை

முன்னுரை

நதி நீரின் வெள்ளத்தில் தத்தளிக்கும் தோணி ஒன்றின் பயணம் போன்றது தான் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும்.

நதியில் உருவாகும் அலைகளும் சுழிப்புகளும் ஆட்டி வைக்கும் புயலும் வாழ்வின் இன்னல்களும் சவால்கள் என்றாகின்றது.

இவைகளை தாண்டி எவ்வாறு அந்த தோணி கரையேறுகின்றது என்பதில் தான் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. மனித வாழ்க்கை ஒன்றும் அத்தனை சுலபமானதல்ல பல சவால்கள், போராட்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்த வண்ணமே இருக்கும்.

எத்தனை புயல்கள் நம்மை சூழ்ந்தாலும் எதிர்த்து நின்று சமாளிப்பதில் தான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கின்றது.

இக்கட்டுரையில் வாழ்வில் வெற்றி பெற்று எவ்வாறு கரையேற முடியும் என்பது தொடர்பாக நோக்கப்படுகின்றது.

வாழ்க்கை புயல் போன்றது

இந்த வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே போன்றதல்ல சிலருக்கு வரமாகி மகிழ்ச்சியை கொடுக்கும் சிலருக்கு சாபமாகி வலிகளையும் கண்ணீரையும் பரிசளிக்கும் இன்பமோ துன்பமோ ஏற்றுக்கொண்டு கடந்து செல்வது தான் இயற்கையின் விதி.

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுக்கு பல தேவைகள் உள்ளன. அவை ஆசை, கனவு, பசி, அன்பு, நட்பு, அரவணைப்பு என்று ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்ப்புகளோடு தான் ஓடிக் கொண்டிருக்கின்றான்.

சிலருக்கு எல்லாம் அமைந்து விடும் சிலருக்கோ அது கனவு தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. கிடைக்காதவற்றுக்காய் ஏங்குவதும் அதற்காய் போராடுவதுமாய் மனித வாழ்க்கை நீள்கின்றது.

கிடைத்தவற்றை வைத்து மகிழ்வதும் அவற்றை கொண்டாடி தீர்ப்பவனும் தான் நிறைவான மனிதன். மனிதனாக பிறந்து விட்டால் வாழ்வனைத்தும் புயல் போல் சூழும் பிரச்சனைகளோடு போராடித்தான் ஆக வேண்டும்.

நம்பிக்கை ஆகிய தோணி

அலைகள் நிறைந்த ஆற்றின் மறுகரை சேர வேண்டுமாயின் தோணியும் துடுப்பும் எவ்வாறு பயன்படுமோ அதுபோல மனிதன் தனது வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றை கைக்கொள்ள வேண்டியுள்ளது.

“பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும்” ஆகையால் உண்மையோடு உழைத்தால் உயர்வு நிச்சயம்.

நிறைய தோல்விகளும் அவமானங்களும் நிராகரிப்புக்களும் சில மனிதர்களும் தடைக்கல்லாக தோன்றினாலும் அவற்றை தாண்டியும் போராடுதல் வெற்றி பெற வழிவகுக்கும்.

வெற்றியும் தோல்வியும்

உயர்வு-தாழ்வு, வெற்றி-தோல்வி இவை தவிர்க்க இயலாதவையாக இருக்கின்றன. இவை இரண்டையும் சமனாக பார்ப்பதில் வாழ்வின் அனுபவ முதிர்ச்சி இருக்கின்றது.

நம்முடைய முயற்சிகள் எம்மை கைவிட்டிருக்கலாம் ஆனால் நாம் முயற்சிகளை ஒரு போதும் கைவிட்டு விடக்கூடாது.

வெற்றியின் போது நிலை தவறாமையும் தோல்வியை கண்டு துவளாமையும் தான் மிகச்சிறந்த பக்குவமாகும்.

இந்த மனநிலை உடையவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே பலவகையான போராட்டங்களை எதிர்கொண்டுதான் இருப்பார்கள்.

மனவலிமை வேண்டும்

“எண்ணி எண்ணியாங் கெய்துவர் எண்ணியார் திண்ணியராக பெறின்” என்கிறார் திருவள்ளுவர் அதாவது மிகுந்த மனவலிமை உடையவர்கள் வாழ்வில் எண்ணியவாறு சாதித்து காட்டுவார்கள்.

புயல் போன்று உருவாகும் சோதனைகளை கண்டு மனம் கலங்கினால் வாழ்வில் வெற்றி பெற முடியாது போய்விடும்.

ஆகையால் உடல் வலிமையை விடவும் மனவலிமை மிக அவசியமாகும் எத்தனை தோல்விகள் வரினும் அவற்றை தாங்கி கொண்டு போராட மனவலிமை தான் சிறந்த ஆயுதம்.

துடுப்பாக கடின உழைப்பு

உழைப்பும் தளைப்பும் என்றொரு விடயம் இருக்கின்றது. கடினமான முயற்சிகள் நிச்சயமாக வெற்றியை பெற்று கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

அலைகளில் தத்தளிக்கும் படகினை கரையேற்ற துடுப்பு எவ்வாறு உதவுகிறதோ அதுபோல வாழ்வில் வெற்றி பெற எமது உழைப்பு நிச்சயம் கைகொடுக்கும்.

ஓடாத மான் எவ்வாறு பிழைத்து வாழ முடியாதோ அது போல போராட தவறுகின்ற மனிதனும் வாழ முடியாது என்கிற சூழ்நிலை உருவாகி காணப்படுகிறது.

வலியன மட்டுமே பிழைக்கும் என்ற சூழ்நிலையில் நாம் அனைவரும் கடின உழைப்பினால் தான் இங்கு பிழைத்திருக்க முடியும்.

முடிவுரை

எத்தனை புயல்களை இந்த பூமி கண்டிருக்கும் அத்தனை அழிவுகளுக்கு பின்னும் மீண்டு அது வருவதனை போல பல சோதனைகளையும் இந்த வாழ்வு தந்தாலும் மீண்டும் மீண்டும் நம்பிக்கை உணர்வோடும் மனிதத்தோடும் பிற மனிதர்களையும் கரையேற்றும் பல தோணிகளும் இருக்கவே செய்கின்றன.

அந்த மனிதர்களும் அவர்களால் உருவான நம்பிக்கையும் இன்னும் பல மனிதர்களை கரையேற்றும் என்பதில் ஐயமில்லை.

You May Also Like :

உழைப்பாளர் தினம் கட்டுரை

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை