செய்யுள் என்றால் என்ன

seiyul endral enna

தமிழ் இலக்கணத்தில் செய்யுள் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. செய்யுள் ஒன்று எவ்வாறு அமைய வேண்டுமென யாப்பு கூறுகிறது. அதாவது யாப்பு இலக்கணத்தின் விதிகளுக்கு அமைவாகவே செய்யுள் ஒன்று உருவாகிறது.

செய்யுள் என்றால் என்ன

செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது ஆகும். செய்யப்படுவதனால், இது செய்யுள் எனப்படுகின்றது.

செய்யுள் வகைகள்

செய்யுள், பா என்னும் சொல்லாலும் வழங்கப்படுகின்றது. பாக்கள் நான்கு வகைகளாக உள்ளன. அவையாவன,

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா

வெண்பா

வெண்பா என்பது ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் ஆகும். இது தமிழ் செய்யுள் மரபில் பழைமையான வெண்பா ஆகும்.

ஆசிரியப்பா

ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது.

கலிப்பா

கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.

வஞ்சிப்பா

வஞ்சிப்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. பாவகைகளுக்கு அடிப்படையான ஓசை வகைகளுள், தூங்கலோசையே வஞ்சிப்பாவுக்கு அடிப்படையாகும்.

இவற்றை தவிர, சிறப்பானதாகக் கருதப்படாத மருட்பா என்னும் பாவகையையும் சேர்த்து பாக்கள் ஐந்து வகை எனக் கொள்வாரும் உள்ளனர்.

செய்யுளியல் என்பது

தமிழ் இலக்கணத்திலே செய்யுள்களுக்கான இலக்கணங்களை விளக்கும் பகுதி செய்யுளியல் எனப்படுகின்றது. இன்று கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் இலக்கணம் பற்றி அதன் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியம் பின்வரும் 34 செய்யுள் உறுப்புக்களைப் பற்றி விளக்குகிறது.

  1. மாத்திரை
  2. எழுத்து
  3. அசை
  4. சீர்
  5. அடி
  6. யாப்பு
  7. மரபு
  8. தூக்கு
  9. தொடை
  10. நோக்கு
  11. பா
  12. அளவியல்
  13. திணை
  14. கைகோள்
  15. கண்டோர்
  16. கேட்போர்
  17. இடம்
  18. காலம்
  19. பயன்
  20. மெய்ப்பாடு
  21. எச்சம்
  22. முன்னம்
  23. பொருள்
  24. துறை
  25. மாட்டு
  26. வண்ணம்
  27. அம்மை
  28. அழகு
  29. தொன்மை
  30. தோல்
  31. விருந்து
  32. இயைபு
  33. புலன்
  34. இழை

செய்யுள் விகாரங்கள்

செய்யுளில் அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றின் இலக்கணம் நோக்கிச் சில இடங்களில் சொற்கள் விகாரப்படுவது உண்டு. இவ்விகாரங்கள் செய்யுள் இலக்கணத்தை நிறைவு செய்தற்பொருட்டு வருவதால் செய்யுள் விகாரங்கள் எனப்படுகின்றன. செய்யுள் விகாரங்கள் மொத்தம் ஒன்பது வகைப்படும். அவையாவன,

  1. வலித்தல் விகாரம்
  2. மெலித்தல் விகாரம்
  3. நீட்டல் விகாரம்
  4. குறுக்கல் விகாரம்
  5. விரித்தல் விகாரம்
  6. தொகுத்தல் விகாரம்
  7. முதற்குறை
  8. இடைக்குறை
  9. கடைக்குறை, என்பவை ஆகும்.

அணி

செய்யுளுக்கு அழகு செய்து நிற்பது அணி எனப்படும். இது பல வகைப்படும். அவையாவன,

உயர்வு நவிற்சி அணி

வானத்தில் மிகத் தாழ்ந்து செல்லும் மேகம் இம்மலையுச்சியில் படிகிறது.” – இம்மலை மேக மண்டலத்தை முட்டுகிறது என்று மிகைப்டக் கூறாமல், உள்ளதை உள்ளவாறு கூறியதனால் இது தன்மை நவிற்சி அணி எனப்படும்.

இது இயல்பு நவிற்சி என்றும் கூறப்படும். இதற்கு மாறுபட்டது உயர்வு நவிற்சியணி.

உருவக அணி

முகமதி – இது ‘முகம் ஆகிய மதி’ என விரியும். இவ்வாறு உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும்படி அமைவது உருவக அணி எனப்படும்.

உவமை அணி

மதிபோன்ற வட்டமுகம் – இதில், மதி – உவமை; முகம் – பொருள் (உவமேயம்); வட்டம் – பொதுத் தன்மை, போன்ற – உவம உருபு.

இவ்வாறு உவமை, பொருள், பொதுத் தன்மை, உவம உருபு என்னும் நான்கும் அமையும்படி அல்லது மூன்று அமையும்படி, அல்லது உவமையும் பொருளும் அமையும்படி கூறுவது உவமை அணியாகும்.

பின்வருநிலை அணி

ஒரு செய்யுளில் முன்வந்த சொல்லும் பொருளும் தனித்தனியேனும் கூடியேனும் பல இடங்களில் பின்வருமாயின், அது பின்வரு நிலையணி எனப்படும்.

வேற்றுப்பொருள் வைப்பணி

அநுமன் கடல் கடந்தான், பெரியோர்க்கு அரியது யாது? – இதில் பெரியோர்க்கு அரியது யாது என்பது உலகறிந்த பொதுப் பொருள்; அநுமன் கடல் கடந்தான் என்பது சிறப்புப் பொருள்.

இவ்வாறு ஒன்றைக் கூறத் தொடங்கிப் பின்னர் அது முடித்தற்கு உலகம் அறிந்த வலிமை உடைய வேறொரு பொருளை வைத்து மொழிவது வேற்றுப் பொருள் வைப்பணி எனப்படும்.

வேற்றுமை அணி

“சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே

நின்றளவி லின்ப நிறைப்பவற்றுள் – ஒன்று

மலரிவருங் கூந்தலார் மாதர்நோக் கொன்று

மலரிவருங் கூத்தன்றன் வாக்கு.”

இச்செய்யுளில் முன் இரண்டு அடிகளால் வெளிப்படையாக இரு பொருளுக்கு ஒப்புமை கூறி, பின்பு, ஒன்று ‘மாதர் நோக்கு,’ ஒன்று ‘கூத்தன்றன் வாக்கு’ என அவ்விரு பொருள்களுக்கும் வேறுபாடு கூறப்பட்டது. ஆதலால் இது வேற்றுமையணி எனப்படும்.

கூற்றினாலாவது, குறிப்பினலாவது, ஒப்புடைய இரு பொருள்களை ஒரு பொருளாக வைத்து, அவற்றைத் தம்முள் வேற்றுமைப்படச் சொல்வது வேற்றுமையணி எனப்படும்.

பிறிமொழிதலணி

“எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.” – நாகம் சிறிது விழித்தெழ எலிப்பகை அழிந்துவிடும் என்பது இதன் கருத்து.

இதனை வீரனொருவன் கூறும் போது இதன் பொருள் “தான் எழுந்த மாத்திரத்தில் வீரர் அல்லாதார் பலர் அழிவர்” என்பதை மறைத்து, அதனை வெளிப்படுத்ததுவதற்குப் பொருத்தமான மேற்சொல்லப்பட்ட செய்தியைக் கூறுகிறான்.

இவ்வாறு ஒருவன் தான் கருதிய பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற பிறிதொன்றைச் சொல்லுதல் பிறிது மொழிதல் அணி எனப்படும்.

தற்குறிப்பேற்ற அணி

திரௌபதியை மணக்கச் சென்ற பாண்டவர் காட்டு வழியே போனபோது, “திரௌபதியின் திருமணத்திற்கு அரசர் எல்லோரும் வந்துவிட்டனர். நீங்கள் விரைந்து வாருங்கள்.” என்று சொல்வன போலக் குயில்கள் கூவின.

காட்டில் குயில் கூவுதல் இயற்கை. அந்த இயற்கை நிகழ்ச்சியில், புலவன் தன் குறிப்பை ஏற்றிக் கூறியிருத்தல் காண்க. இங்கனம் கூறுதல் தற்குறிப்பேற்ற அணியாகும்.

சிலேடை அணி

சிலேடை – தழுவுதல் உடையது; பல பொருள்கள் இணைந்து நிற்பது. உச்சரித்தற்கண் ஒரு வடிவாக நின்ற சொற்றொடர், பல பொருள் உடையதாக வருவது சிலேடை ஆகும்

சுவை அணி

வீரம், அச்சம், இழிப்பு (இளிவரல்), வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை (இவை தண்டியலங்கார ஆசிரியர் தரும் பெயர்கள்) என்று சுவை எட்டு வகைப்படும்.

இவற்றைத் தொல்காப்பியர் முறையே பெருமிதம், அச்சம், இளிவரல், மருட்கை, உவகை, அழுகை, வெகுளி, நகை என்பர்.

Read more: உவமை அணி என்றால் என்ன

அன்மொழித்தொகை என்றால் என்ன