உவமை அணி என்றால் என்ன

uvamai ani enral enna in tamil

அணி என்றால் அழகு என்று பொருள்படும். கவிஞர்கள் தாம் இயற்றிய செய்யுளை சொல்லாலும், பொருளாலும் அழகுபடுத்தி இருப்பார்கள். அவ்வாறு அழகுபடுத்தலே அணி என்று அழைப்பர்.

அணி பலவகைப்படும் அந்த வகையில் ஒன்றுதான் உவமை அணி. அணிகளில் முதலாவதாகவும் பிற அணிகளுக்குத் தாயாகவும் விளங்குவது உவமை அணியாகும். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், உவமையியல் என்னும் இயல் அமைத்து இவ்வணியை விளக்கிக் கூறியிருப்பதால் இதன் சிறப்பை அறியலாம்.

“உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.”

ஒரு பொருளை விளக்குவதற்காக அதனோடு ஒப்புமை உடைய இன்னொரு பொருளை உவமையாகக் கூறி விளங்க வைப்பதை உவமை அணி என்கிறோம்.

ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம். அதவாது புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

உவம உருபுகள் யாவை

போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ

உவமை அணியின் வகைகள்

பொதுத்தன்மை அடிப்படையில் உவமை அணியானது மூன்று வகைப்படும்.

  1. பண்பு உவமை அணி
  2. தொழில் உவமை அணி
  3. பயன் உவமை அணி

பண்பு உவமையணி

பண்பு உவமையணி என்பது ஒரு பொருளின் வடிவம், அளவு, சுவை, நிறம் ஆகியவை அப்பொருளின் பண்பாகும். இப்பண்புகள் காரணமாக அமையும் உவமையணி பண்பு உவமையணியாகும்.

உதாரணம் – முத்துப்பல், பவளவாய், கயல்விழி

தொழில் உவமை

தொழில் உவமை அணி என்பது ஒரு பொருளின் தொழில் காரணமாக அல்லது செயலின் காரணமாக அமையும் உவமையணியாகும்.

உதாரணம் – புலிமறவன், குரங்குமனம் (செயலை விளக்குவது)

பயன் உவமையணி

பயன் உவமையணி என்பது ஒரு பொருளினால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும் உவமையணி பயன் உவமையணி எனப்படும்.

உதாரணம் – மழைக்கை.

இவை தவிர உவமையணி பல வகைகளில் காணப்படுகின்றது. அவையாவன,

  1. விரி உவமை
  2. தொகை உவமை
  3. இதரவிதர உவமை
  4. சமுச்சய உவமை
  5. உண்மை உவமை
  6. மறுபொருள் உவமை
  7. புகழ் உவமை
  8. நிந்தை உவமை
  9. நியம உவமை
  10. அநியம உவமை
  11. ஐய உவமை
  12. தெரிதரு தேற்ற உவமை
  13. இன்சொல் உவமை
  14. விபரீத உவமை
  15. இயம்புதல் வேட்கை உவமை
  16. பலபொருள் உவமை
  17. விகார உவமை
  18. மோக உவமை
  19. அபூத உவமை
  20. பலவயிற்போலி உவமை
  21. ஒருவயிற்போலி உவமை
  22. கூடா உவமை
  23. பொதுநீங்கு உவமை
  24. மாலை உவமை.

உவமை அணியின் பயன்பாடு

உவமை அணி, கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவதாகப் பயன்படுகின்றது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதற்கு பயன்படுகின்றது.

தெரிந்த பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவதற்காக பயன்படுகின்றது.

எடுத்துக்காட்டு – தாமரை போன்ற முகம் இதில் விளக்கப்படும் பொருள் முகமாகும். இந்தப் பொருளை விளக்குவதற்காக தாமரை என்ற ஒன்றை எடுத்து விளக்கப்படுவதால் இதில் உவமை அணி இடம்பெற்றுள்ளது.

உவமை அணி எடுத்துக்காட்டு

நிலவைப் போல் முகம் உடையவள் – பெண்ணொருத்தியின் முகம் மிகவும் அழகானது எனக் கூற வந்த புலவர் நிலவை போன்றது எனக் குறிப்பிடுகின்றார். நிலவு எவ்வாறு வட்டமாக அழகாக மென்மையாக இருக்குமோ அதைப்போல் பெண்ணின் முகம் காணப்படும்.

உவமானம் – நிலவு (தெரிந்த பொருள்)
உவமேயம் – பெண்ணின் முகம் (தெரியாத பொருள்)
பொதுத்தன்மை – அழகு

முத்துப் போன்ற பற்கள் – இங்கு முத்தினைப் போன்று பற்கள் அழகாக வெண்மை நிறம் கொண்டதாக உள்ளன எனக் குறிப்பிடப்படுகின்றது. பற்களுக்கு முத்து உவமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உவமானம் . முத்து (தெரிந்த பொருள்)
உவமேயம் . பற்கள் (தெரியாத பொருள்)
பொதுத்தன்மை – அழகு, வெண்மை.

அன்னம் போன்ற நடை கொண்டவள் தமயந்தி – இங்கு தமயந்தியின் நடையானது அன்னம் போன்றதென குறிப்பிடப்பட்டுள்ளது.

உவமானம் – அன்னம்
உவமேயம் – தமயந்தியின் நடை
பொதுத்தன்மை நடை – அழகு

உவமை அணி எடுத்துக்காட்டு திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை. நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). ‘போல’ என்பது உவம உருபு.

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”

விளக்கம் : மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.

இங்கு மணற்கேணி தோண்டப்படுவது உவமையாகும். மனிதர் கற்பது உவமேயம் ஆகும். போல என்னும் உவம உருபு வெளிப்பட்டு வரவில்லை.

You May Also Like :
நாவல் என்றால் என்ன
இலக்கியம் என்றால் என்ன