சேமிப்பு என்றால் என்ன

semippu enral enna

சேமிப்பு என்றால் என்ன

வாழ்வில் சிலர் அதிகமாக சம்பாதித்தாலும் கையில் எதுவும் இல்லாமல் இருப்பர். சிலரே குறைவாக வருவாய் பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் ஓரளவு வசதியை எட்டி இருப்பார்கள்.

சிலருக்கு பணத்தை சேமிப்பது செலவை குறைப்பது இலகுவான பழக்கமாக உள்ளது. சிலருக்கு அக்கலை வருவதில்லை.

சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். இப்போது சேமிக்கும் பணம் பிற்காலத்தில் உதவும். மற்றும் அவசர காலத்தில் பேருதவியாக இருக்கும்.

இதனால் தான் சேமிப்பு என்பது வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. சிக்கனம் வீட்டைக்காக்கும், சிறுசேமிப்பு நாட்டை காக்கும்.

சேமிப்பு என்றால் என்ன

சேமிப்பு என்பது ஒத்திவைக்கப்பட்ட நுகர்வு ஆகும். அதாவது செலவு செய்யாமல் தனியாக எடுத்து வைக்கப்படும் பணம் சேமிப்பு ஆகும்.

மேலும் சேமிப்பு என்பது நம்மிடம் இருக்கும் சிறிய பணத்தை பாதுகாப்பான மற்றும் அணுகத் தயாராக இருக்கும் இடத்தில் வைக்கும் ஒரு செயல்முறையாகும்.

சேமிப்பின் தேவை

பறவைகள் மிருகங்கள் மற்றும் இதரப் பிராணிகள் கூட மழைக்காலம் வருவதற்கு முன்பு தங்களுக்குத் தேவையான உணவுகளைச் சேகரித்து வைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளன.

இவ்வாறு சிற்றறிவு படைத்த பிராணிகளே சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் போது பகுத்தறிவு பெற்ற நாம் சேமிப்பின் தேவை உணர்ந்து செயற்பட வேண்டும்.

இன்று இளமையாக இருக்கின்றோம், சம்பாதிக்கின்றோம். மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ஆனால் முதுமையில் அவ்வாறு இருக்க முடியாது. அதனால் தான் “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்கின்றனர்.

எனவே வாய்ப்பு இருக்கும் போதே சேமித்து வைக்கும் பொருள் எதிர்காலத்துக்கும், எதிர்பாரா செலவுகளுக்கும் பயன்படும்.

திடீரென்று நமக்கு நோய் வந்து விடுகின்றது. படுக்கையில் கிடக்கின்றோம். வேலைக்குச் செல்ல முடியாது. அத்தகைய நிலைமையில் உணவுக்கு மட்டுமின்றி இதர செலவுகளுக்கும் பொருள் அல்லது பணம் வேண்டும் அல்லவா? இதற்கு கை கொடுப்பதே சேமிப்பாகும்.

எனவே சேமிப்பின் தேவை அறிந்து சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பணத்தை சேமிக்கும் வழிகள்

தொலைபேசி அழைப்புகளை அவசியமான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.

பணிபுரிபவர்கள் அன்றாடம் தவறாமல் பானங்களுக்கு செலவு செய்கின்றார்கள். ஒரு நாளில் பலமுறை தேநீர் அருந்துபவர்களாக இருந்தால் குறைத்துக் கொள்ளலாம்.

சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்லது. வாரந்தோறும் அல்லது மாதம் தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். “சிறு துளி பெருவெள்ளம்” என்ற பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும்.

பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கின் ஊடாக கண்டுபிடிக்கலாம். மேலும் சேமிக்க முடியாத காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நீங்கள் மன நிம்மதியுடன் வாழ வீட்டுச் செலவை எழுத வேண்டும். எனவே வரவு செலவுக் கணக்கு குறித்துப் பழகுங்கள்.

வீட்டு மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வருவது பணத்தை சேமிக்கும் வழியே ஆகும். அடிக்கடி ஹோட்டலில் உண்பதை விட வீட்டில் சமைத்து உண்பது நல்லது.

இது உடல் நலத்திற்கும் வழிவகுப்பதுடன், வீணான செலவுகளையும் கட்டுப்படுத்த உதவும். நாம் பணத்தை சிறுகச் சிறுக சேமித்தால்தான் அது பெருகிக்கொண்டே இருக்கும்.

நம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சேமிப்புக்கும் வழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு உண்டியல் கொடுத்து சேமிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

Read more: இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு கட்டுரை

சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை