எனது பாடசாலை அழகானது கட்டுரை

Enathu Padasalai Alaganathu Katturai

இந்த பதிவில் “எனது பாடசாலை அழகானது கட்டுரை” பதிவை காணலாம்.

மாணவர்களிற்கு அறிவையும் நற்பண்புகளையும் அள்ளி வழங்கும் இடமாக பாடசாலை விளங்குகின்றது.

எனது பாடசாலை அழகானது கட்டுரை – 1

மாணவர்களிற்கு அறிவையும் நற்பண்புகளையும் அள்ளி வழங்கும் இடமாக பாடசாலை விளங்குகின்றது. குழந்தைகளாக உலகம் அறியாதவர்களாக பாடசாலைக்குள் உட்புகும் பிள்ளைகள் அனைத்து ஆற்றலும் கைவரப் பெற்றவர்களாக பாடசாலையை விட்டு வெளியேறுகின்றனர்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த எனது பாடசாலையைப் பற்றி கூறப்போகின்றேன். எனது பாடசாலை அழகியதொரு பாடசாலையாகும். சுற்றி வர பூஞ்செடிகள் பூத்துக் குழுங்க பார்ப்பவர்களை கவரும் வகையில் எனது பாடசாலை சூழல் காணப்படும்.

பாடசாலை நுழைவாயிலின் இரு மருங்கிலும் உயர்ந்து ஓங்கிய மரங்கள் நிழலை பரப்பியவாறு வளர்ந்திருந்தன. அதன் உட்புறும் நடைபாதையின் இருமருங்கிலும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப்பூக்கள் பூத்து அந்த இடத்தையே இரம்மியமாக மாற்றியிருந்தன.

இயற்கை அழகிற்கு மேலதிகமாக, சுத்தத்திலே அதிசிறந்து விளங்கும் இடமாக எனது பாடசாலை விளங்கியது. எப்போதும் பாடசாலை முற்றங்கள் குப்பை எதுவும் அற்றனவாக பெருக்கப்பட்டு தூய்மையாகக் காணப்படும்.

ஆங்காங்கே குப்பை கூடைகள் வைக்கப்பட்டு அதற்குள் மட்டுமே குப்பைகளை இடுமாறு அறிவுறுத்தலும் வைக்கப்பட்டிருந்தன. பொலித்தீன் மற்றும் உக்கக் கூடிய குப்பைகள் என அவற்றின் மேல் ஒட்டப்பட்டிருந்தன.

எனது பாடசாலையானது இயற்கையை பாதுகாப்பதில் மிகச் சிறந்த பாடசாலையாக காணப்படுகின்றது. பச்சைப் பசேலென காணப்படும் என் பாடசாலை, அழகான ஓரளவு பெரிய தோட்டத்தையும் கொண்டு காணப்படும்.

மாணவர்களால் அமைக்கப்பட்ட அந்த தோட்டத்தில், பூசணி, கத்தரி, மிளகாய், வெண்டி, பாகல் போன்ற மரக்கறி வகைகளும், பலா, தோடை, மாதுளை, வாழை போன்ற கனி தரும் மரங்களும் காணப்படுகின்றன. பாடசாலைக்கு சமூகமளிப்பவர்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் அழகான தோற்றமுள்ள பாடசாலை ஆகும்.

எனது பாடசாலை அழகானது கட்டுரை – 2

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி மீதான ஆர்வத்தை அதிகரிப்பதில் பாடசாலைச் சூழலிற்கு மிகமுக்கிய பங்குண்டு. அந்த வகையில் எனது படசாலையானது அழகிய கண் கவரும் சுற்றுச்சூழலைக் கொண்டு காணப்படுகின்றது.

இப்பாடசாலையானது கிராமப்புறத்தில் அமைந்திருந்தமையால் எப்போதும் அமைதியான சூழலும், சுத்தமான காற்றும் போதியளவு சூரிய ஒளியும் இயற்கையாகவே காணப்பட்டது.

உயர்ந்த மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு நீல வர்ணத்தில் நிறந் தீட்டப்பட்டுள்ளன. பாடசாலை முற்றம் முழுவதும் நேர்த்தியாக வெட்டப்பட்ட பூஞ்செடிகள் ஒழுங்காக பராமரிக்கபட்டிருந்தன.

நடைபாதைகள் சீராக அமைக்கப்பட்டு அதன் இரு மருங்கிலும் வெள்ளை மணல் பரவப்பட்டிருந்தன. இடையிடையே நீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைவரினதும் மனதை வசீகரிக்கும் வகையில் பாடசாலையின் முகத்தோற்றம் காணப்பட்டிருந்தது.

பாடசாலையில் ஒரு பகுதியில் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியாக மலசலகூடங்கள் அமைக்கப்பட்டு அவை சுத்தமாகவும் சீராகவும் பராமரிக்கப்பட்டிருந்தன.

பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சுத்தம் பேணுதலில் அதிகூடிய அக்கறை செலுத்தியமையினால் மாணவர்களும் அதற்கேற்றவாறு பழக்கப்படுத்தி இருந்தனர்.

மாணவர்கள் குப்பைகளை குப்பைக் கூடைக்குள் போடுவதற்கு பழக்கப்பட்டிருந்தமையால் வகுப்பறைகள் அனைத்தும் எப்போதும் குப்பைகள் இன்றி காணப்படும்.

வெறுமனே ஒரு பாடசாலையை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் மட்டும் அழகாக ஆக்கிவிட முடியாது. மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இதற்கு பங்களிப்பு செய்திருந்தார்கள்.

ஒரு பாடசாலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக காணப்பட்ட இப்பாடசாலையில் படிப்பதில் எனக்கு மிகுந்த கர்வம் உண்டு. அழகான எனது பாடசாலை சுத்தமாக இருப்பதற்கும், சுய ஒழுகத்தை பேணுவதற்கும் எனக்கு கற்பித்தது.

You May Also Like :
நான் கண்ட வீதி விபத்து கட்டுரை
நான் விரும்பும் பள்ளி கட்டுரை