நான் ஒரு பாடநூல் கட்டுரை

naan oru paada nool katturai

இந்த பதிவில் “நான் ஒரு பாடநூல் கட்டுரை” பதிவை காணலாம்.

அறிவினையும், உலக ஞானத்தையம் அள்ளி வழங்குவதில் நூல்களின் பங்களிப்பு இன்றி அமையாதது.

நான் ஒரு பாடநூல் கட்டுரை – 1

நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு என்பதற்கிணங்க நாம் எந்தளவிற்கு நூல்களை தேடிக் கற்கின்றோமோ அந்தளவிற்கு அறிவினை பெற்றுக் கொள்ள முடியும். மாணவர்களிற்கு அறிவினையும், உலக ஞானத்தையம் அள்ளி வழங்குவதில் நூல்களின் பங்களிப்பு இன்றி அமையாதது.

அத்தகைய சிறப்புக்களை பெற்ற நூல்களுள் நான் ஒரு பாடநூல் ஆவேன். பாடசாலை மாணவர்களிற்கு அவர்கள் கற்கும் பாடங்கள் தொடர்பான அறிவினை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றேன்.

தரம் ஆறு மாணவர்களிற்காக வழங்கப்படுகின்ற தமிழ்மொழி பாடநூல் நானாவேன். சின்னஞ்சிறிய மாணவர்களிற்கு உலகத்தின் பழம்பெரு மொழியான தமிழ்மொழியின் சிறப்பை தெரியப்படுத்துவதற்காகவே நான் படைக்கப்பட்டுள்ளேன்.

என்னுடைய முகப்பு பக்கமானது அழகிய வண்ணங்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதில் பாரதியார், திருவள்ளுவர் போன்றோரின் படங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.

ஆரம்பப் பக்கங்களில் தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்துப்பா, மற்றும் உள்ளடக்கம் ஆகியன இடம் பெற்றிருக்கின்றன. மேலும் என்னுள்ளே கவிதைகள், கட்டுரை மற்றும் கதைகள் போன்றன இடம்பெற்றிருந்தன. மாணவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் அவை எழுதப்பட்டிருக்கின்றன.

என்னுள் தழிழ் புலவரான திருவள்ளுவர் மற்றும் ஒளவையாரின் சுயசரிதை போன்றன காணப்படுகின்றன. திருவள்ளுவரால் எழுதப்பட்ட மிகச்சிறந்த நூலான திருக்குறளில் உள்ள பத்து குறட்பாட்களும் அவற்றின் விளக்க உரையும் எளிய மொழிநடையில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

அதனைத் தவிர ஒளவையாரால் எழுதபட்ட ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியவற்றின் சிறப்புக்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நற்பண்புகளையும் நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொள்ளும் வகையில் அறிவுரைகளை உள்ளடக்கியதாக நான் அமையப் பெற்றுள்ளேன்.

வண்ணப் படங்களும், பல்வேறு நிறங்களினால் எழுத்தப்பட்டுள்ள எழுத்துக்களையும் கொண்டு மாணவர்கள் கவனத்தை கவரும் வண்ணம் நான் காணப்படுவதனால் மாணவர்கள் என்னை விரும்பி படிப்பர்.

நான் ஒரு பாடநூல் கட்டுரை – 2

அரசாங்கத்தால் நடாத்தப்படும் அச்சகம் ஒன்றில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நான் ஒரு பாடநூல் ஆவேன். மாணவர்களின் கல்விசார் தேவைகளிற்காக நான் உருவாக்கப்பட்டுள்ளேன்.

நூற்றுக்கணக்கான புத்தகங்களுடன் அச்சடிக்கப்பட்ட நான் பாடசாலை ஒன்றின் தேவைக்காக எடுத்துச் செல்லப்பட்டேன். அப்பாடசாலையில் மாணவர்களிற்கு புத்தகங்கள் வழங்கும் போது மாணவி ஒருவரிற்கு வழக்கப்பட்டேன்.

அந்த சிறுமி மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் பெற்றுக் கொண்டாள். தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்ற அவள், என்னுடைய முகப்பு பக்கங்களைச் சுற்றி அழகான பூக்களின் வண்ணமுடைய உறையால் அலங்கரித்தாள்.

என்னுடைய முகப்பு பக்கமானது பலவண்ணப் படங்களினால் அலங்கரிக்கபட்டிருந்தாலும் அதனை மூடிமறைத்து உறையிட்டது மனதிற்கு வருத்தமாக இருந்த போதும், அவள் என்னை பாதுகாப்பதில் எடுக்கும் ஆர்வத்தை நினைத்து மகிழ்ந்தேன்.

அச்சிறுமி என்னை மிகவும் நேசித்தாள். அவளது புத்தகப்பையிலே நான் எப்பொழுதும் இருப்பேன். காலையும் மாலையும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் என்னை எடுத்துப் படிப்பதனை வழமையாகக் கொண்டிருந்தாள்.

கவிதைகள், கட்டுரை, பாடல்கள் மற்றும் கதைகள் என்னுள் காணப்பட்டமையால் சிறுவர்களை கவரும் வண்ணம் நான் காணப்பட்டேன். என்னுள் உள்ள வரிகளை கிட்டத்தட்ட மனப்பாடம் செய்யும் அளவிற்கு திரும்ப திரும்ப வாசித்துக் கொண்டிருப்பாள்.

என்னுள் உள்ள கதைகளை மற்றவர்களிற்கும் கூறுவாள். அதனைக் கேட்கும் போது நான் மிகுந்த ஆனந்தமும் கர்வமும் அடைவேன். என்னுடைய பக்கங்களை மடிக்காமல், கிழிக்காமல், அழுக்கு படியாமல் மிகுந்த அவதானத்துடன் பயன்படுத்துவாள்.

என்னை பெற்றுக் கொண்ட நாளில் இருந்து இன்றுவரை கண்ணை இமை காப்பது போல் காத்து வருகின்றாள். அனைத்து மாணவர்களும் தங்களுடைய பாடநூல்களை இவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் அவா ஆகும்.

You May Also Like :
புத்தக வாசிப்பு கட்டுரை
எனது பொழுதுபோக்கு சிறுவர் கட்டுரை