நான் விரும்பும் பள்ளி கட்டுரை

Naan Virumbum Palli Katturai In Tamil

இந்த பதிவில் “நான் விரும்பும் பள்ளி கட்டுரை” பதிவை காணலாம்.

நம் வாழ்வில் பள்ளி காலங்கள் மிக முக்கியமானவை. நம்மை செதுக்கி அறிவு கூர்மையும் ஒழுக்கமும் நிறைந்தவர்களாக மாற்றும் இடம் தான் பள்ளி.

சமுதாயத்தில் சிறப்பு மிக்கவர்களாக நம்மை உருவாக்கும் பள்ளி கூடங்கள் சிறப்பானதாக அமைய வேண்டும் என்பது அனைவரதும் விருப்பமாக இருக்கும்.

  • நான் விரும்பும் பள்ளி
  • Naan Virumbum Palli Katturai In Tamil
எனது கனவு பள்ளி கட்டுரை

நான் விரும்பும் பள்ளி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பள்ளியின் அமைப்பு
  3. கற்பித்தல் முறைகள்
  4. ஆசிரிய மாணவ முறைகள்
  5. முடிவுரை

முன்னுரை

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு” என்பதற்கு இணங்க ஒவ்வொரு மனிதனும் அவன் எந்தளவிற்கு கல்வியைக் கற்கின்றானோ அந்தளவிற்கு அவனது அறிவாற்றலானது அதிகரிக்கின்றது.

அந்த அறிவினை அனைவரிற்கும் அள்ளி வழங்குவதில் பள்ளிகளிற்கு பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்கமுடியாத பருவமாக அமைவதும் இப்பள்ளிப் பருவமே.

இவ்வாறு இன்றியமையாததாக விளங்கும் பள்ளிப் பருவமானது பலவகையான வாழ்க்கைப் பாடங்களையும் அனுபவங்களையும் அள்ளி வழங்குகின்றது.

சின்னஞ்சிறு பிஞ்சுகளாய் பெற்றோரின் கைபிடித்து பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் நாம், ஆசிரியர்களுடன் கைகோர்த்து அறிவுகள் பல பெற்று முழுமையடைந்த மனிதனாக பள்ளியில் இருந்து வெளியேறுகின்றோம்.

இவ்வாறு மறக்க முடியா பல நினைவுகளைப் பெற்றுத்தரும் பள்ளியானது எவ்வாறு இருக்கவேண்டுமென ஒவ்வொருவரிற்குள்ளும் தனித்தனியான கனவுகள் பல உண்டு.

அத்தகைய நான் விரும்பும் பள்ளி பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பள்ளியின் அமைப்பு

ஒரு பாடசாலையானது மாணவர்களுடைய நற்பழக்கவழக்கங்கள், பல்வேறு ஆற்றல்கள், உலக வாழ்க்கைக்கான அனுபவங்கள் மற்றும் நல்ல மனப்பாங்குகளை உருவாக்கும் இடமாக திகழ்கின்றது.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகள் அதன் அமைப்பு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். நான் விரும்புகின்ற பள்ளியானது மாணவர்கள் நலன் மீது முதன்மையான அக்கறை செலுத்தவேண்டும்.

தூய்மையான சூழலில் அமைந்திருப்பதோடு, நல்ல சூரிய ஒளி கிடைக்கக்கூடிய, காற்றோட்டமான வகுப்பறைகளைக் கொண்டு காணப்பட வேண்டும்.

அந்த வகுப்பறைகளிலுள்ளே மாணவர்கள் அமர்வதற்கேற்ற கதிரை மேசைகளை கொண்டிருப்பதோடு, போதுமான இடவசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

அத்துடன் அப்பள்ளியில் மாணவர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்கிவிக்க போதிய வசதிகளைக் கொண்ட மைதானத்தையும், ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகளை ஊக்குவிக்க நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுகூடங்களையும் கொண்டமைய வேண்டும்.

சுத்தமான உணவை மாணவர்களிற்கு வழங்கக்கூடிய சிற்றூண்டிசாலைகளையும், சுகாதார முறைப்படி அமைந்த கழிவறைகளையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே நான் விரும்புகின்ற பாடசாலையின் அமைப்பு முறையாகும்.

கற்பித்தல் முறைகள்

ஒவ்வொரு பாடசாலைகளிலும் கற்றுத்தரும் விடயங்களே மாணவர்களிற்கு அனுபவப்பாடங்களாக அமைகின்றன.

“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்ற பழமொழிக்கேற்ப பள்ளிப் பருவத்தில் கற்பது சிலையில் எழுத்துப் போல குழந்தைகள் மனதில் ஆழமாக பதியக்கூடியது.

வெறுமனே வகுப்பறை கல்வி மாத்திரம் இடம்பெறாமல் செயன்முறைக்கல்வியும் இடம்பெற வேண்டும்.

மேலும் களப்பயணங்களின் ஊடாக மாணவர்களிற்கு நேரடியான உதாரணங்களை வழங்குவதோடு, வருடத்திற்கு ஒருமுறை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும்.

மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் ஒரு பள்ளியாக விளங்க வேண்டும்.

ஆசிரிய மாணவ உறவு

“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதற்கிணங்க எமது பெற்றோரிற்கு அடுத்தபடியாக எம்மை வழிநடாத்துபவர்கள் ஆசான்களே. நல்ல குருவை அடைந்தவர்களே சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவர்.

ஆகவே ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டிகளாகவும், மாணவர்களை அரவணைத்து நல்வழிப்படுத்துபவர்களாகவும் காணப்படவேண்டும். நான் விரும்புகின்ற பள்ளியில் நன்றாக கற்றறிந்த அனுபவம் மிக்க ஆசிரியர்களே கடமை ஆற்றவேண்டும்.

அறிவுச் செருக்கோடு மாணவர்களை நடாத்தாமல் அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்து ஐயந்திரிபுர தெளிவுபடுத்த வேண்டும்.

மாணவர்கள் தவறு செய்யும் போது கோபம் கொள்ளாமல் நட்புடன் அவர்களது தவறைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களையும் ஊக்கமளித்து வழிநடத்துபவர்களாக இருக்க வேண்டும்.

வெறுமனே ஏட்டுப் பாடங்களை மட்டும் கற்றுத்தராது வாழ்க்கையின் அனுபவப் பாடங்களையும் கற்றுத்தரும் ஆசிரியர்கள் பணிபுரிதல் அவசியமாகும்.

எனது கனவுப் பள்ளியானது திறமைமிக்க ஆசிரியர்களை மட்டும் கொண்டிராது, ஆசிரியர்கள் கூறும் நல்ல கருத்துக்களை உள்வாங்கி அதன்படி ஒழுகுகின்ற மாணவர்களையும் கொண்டிருக்க வேண்டும்.

முடிவுரை

ஒரு சமூகம் எந்தவித சீர்கேடுகளுமற்ற சமுதாயமாக திகழ வேண்டுமாயின் அங்கே வாழும் மக்கள் சிறிதளவாவது கல்வி அறிவினை பெற்றிருத்தல் அவசியமாகும்.

இந்த கல்வி அறிவினை சமூக்திற்கு வழங்குவதில் பாடசாலைகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

மாணவர்களது வாழ்வில் அறிவொளியினை ஏற்றும் ஒரு பாடசாலையானது நான் விரும்புகின்ற பாடசாலை போன்று அமைந்திருந்தால் இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து பிள்ளைகளுமே உயர்ந்த பண்புகளைப் பெற்று சிறந்த மகான்களாக மாற்றம் பெற்று விளங்குவர்.

You May Also Like :

கல்வி வளர்ச்சி கட்டுரை

சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை