உணவே மருந்து கட்டுரை

Unave Marunthu Katturai Tamil

இந்த பதிவில் “உணவே மருந்து கட்டுரை” பதிவை காணலாம்.

நம் உடல் நலத்தின் ஆரோக்கியத்தை பேணுவதில் உணவு மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

நம் முன்னோர்கள் நோய்களுக்கான மருந்தாக மூலிகைகளையும் உணவுகளையுமே பயன்படுத்தினார்கள்.

உணவே மருந்து கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உணவும் ஆரோக்கியமும்
  3. இயற்கை உணவுகள்
  4. மாறிவரும் உணவு கலாச்சாரம்
  5. அதிகரிக்கும் நோய்கள்
  6. முடிவுரை

முன்னுரை

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்கிறார் திருவள்ளுவர் அதாவது உடலுக்கு எது பொருத்தமான உணவு என்பதை தேர்ந்தெடுத்து உண்பதால் நோய்களின்றி வாழமுடியும். என்பது தான் இதனுடைய கருத்து.

மனிதனுடைய முக்கியமான தேவைகளில் உணவு முக்கியமானது. நாம் உள்ளெடுக்கின்ற உணவு தான் எமது உடல் நலத்தை பேணுகின்றன. இதனால் அனைவரும் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

உடல் ஆரோக்கியம் இல்லாத போது மனித வாழ்க்கை துன்பமானதாக மாறிவிடும். எனவே அனைவரும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இக்கட்டுரையில் உணவின் அவசியம் இன்றைய உணவுபழக்க வழக்கங்கள் போன்றன நோக்கப்படுகின்றது.

உணவும் ஆரோக்கியமும்

“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” என்று கூறுவார்கள் அது போல நல்ல ஆரோக்கியம் நிறைந்த சமூகம் தான் நல்வாழ்வினை வாழ முடியும்.

இந்த இயற்கை நமக்கு ஏராளமான வளங்களை நல்கியுள்ளது. அவற்றில் இருந்து விளைகின்ற தானியங்கள் பழங்கள் காய்கறிகள் இலை, தளைகள் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை

நாம் சரியான முறையில் எடுப்பதன் மூலமாக எமது உடல் ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்தி கொள்ள முடியும். இதன் வாயிலாக சுறுசுறுப்பான திடகாத்திரமான மனிதர்களாக நாம் வாழமுடியும்.

புரதம், காபோவைதரேற்று, கொழுப்பு, விற்றமின்கள் மற்றும் கனிப்பொருட்கள் போன்ற போசனை பொருட்கள் உடலை வளமாக வைத்திருப்பதோடு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும்.

நல்ல வளமான நிலத்தில் வளரும் பயிர் போல ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மனிதனும் வளமாக வாழமுடியும்.

இயற்கை உணவுகள்

இயற்கையான முறையில் நஞ்சற்ற அசேதன உரங்களற்ற கிருமி நாசினிகள் தெளிக்கப்படாத மரக்கறிகள், தானியங்கள், கிழங்குகள், கீரை வகைகள், பசும் இலைகள் மற்றும் பசும்பால் உணவுகள், பழங்கள் போன்ற இயற்கையான உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு சால சிறந்தன.

இன்று விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ள செயற்கை முறையிலான விவசாய நடவடிக்கைகள் மனித உடலுக்கு பல தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இன்று நாம் உண்ணும் உணவுகள் அதிகம் நஞ்சாகி விட்டன. இதுவே நம்மில் பலரை நோயாளியாக்கி வைத்தியசாலைகளில் அலையவிடுகின்றது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதனால் உணவுகளை அதிகம் இயற்கை முறை சார்ந்தவையாக எடுத்து கொள்வது நன்றாகும்.

மாறி வரும் உணவு கலாச்சாரம்

இன்று எமது சமூகம் மேற்கத்தைய நாகரீக மயப்படுத்தலுக்கு உள்ளாகி துரித உணவுகளை அதிகம் உண்கின்றனர்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கொழுப்பு, அதிக சீனி, அதிக எண்ணை மற்றும் சுவையூட்டி, நிறமூட்டி, மணமூட்டி போன்றன அதிகம் உள்ள உணவுகளையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

இவை உடலுக்க கேடு விளைவிக்க கூடிய இரசாயன பதார்த்தங்களை கொண்டவையாகும்.

நமது பிரதேசங்களில் அதிகம் விற்பனையாகும் “பெப்சி, கொக்கா கோலா ” போன்ற குளிர்பானங்களை அதிகம் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான நாகரீக வளர்ச்சியின் காரணமாக நம்முடைய இயற்கையான உணவு பழக்க வழக்கங்கள் அருகி போய்விட்டன.

இயற்கையோடு ஒன்றித்த தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் வழக்கொழிந்து போவது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.

அதிகரிக்கும் நோய்கள்

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற கூறுவார்கள். நாம் எடுத்து கொள்கின்ற உணவு தான் எமது நீண்டகால ஆரோக்கியத்தை தீர்மானிக்கும்.

இளம் வயதில் உணவு கட்டுப்பாடுகளை மதிக்காது சுவை என்ற பெயரில் நாம் எடுத்து கொள்கின்ற ஆரோக்கியமற்ற உணவுகள் தான் இன்று அதிகளவான நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

போசாக்கற்ற தீங்கான உணவுகளை உண்பதால் மட்டுமே உலகமெங்கிலும் பல மக்கள் இறந்து போகின்றனர்.

மேலும் புற்றுநோய்கள், மனஅழுத்தம் சார்ந்த நோய்கள், உயர் குருதியமுக்கம், உடற்பருமனாதல், சலரோகம் போன்ற அதிகளவான நோய்கள் ஏற்பட எமது உணவு பழக்கமே காரணமாகும்.

இவ்வாறு உலகமெங்கிலும் உணவு சார்ந்த பிரச்சனைகளால் உலகில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதனால் மக்களினுடைய ஆயுள் எதிர்பார்ப்பு மிகவும் குறைவடைந்து வருகின்றது.

முடிவுரை

இன்று மனிதன் அபிவிருத்தி, பொருளாதாரம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று வளர்ச்சியை பற்றி மாத்திரமே சிந்திக்கின்றானே அன்றி மனித உடல், ஆரோக்கியம் பற்றி யாரும் அதிகம் அலட்டி கொள்வதில்லை.

பின்பு நோய்கள் வந்த பின்னர் வருந்துவதில் பயனில்லை ஆகவே வெள்ளம் வரும் முன் அணை கட்ட வேண்டும் என்பது போல நாம் உணவுகள் பற்றி நாளாந்தம் கவனம் செலுத்துவது நன்மை பயப்பதாக இருக்கும்.

இதனை சரி செய்ய வேண்டுமாயின் விவசாயம் இயற்கை முறைக்கு திரும்புவதை தவிர வேறு வழி இல்லை.

You May Also Like :

உடல் நலம் காப்போம் கட்டுரை

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை