இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கட்டுரை

India Suthanthira Porattam Katturai In Tamil

இந்த பதிவில் “இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கட்டுரை” பதிவை காணலாம்.

அந்நியர்கள் 1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவை இந்தியர்களிடம் ஒப்படைத்தனர். இத்தினமே இந்தியாவின் சுதந்திர தினமாகும்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தேசத்தின் பெருமை
  3. ஆக்கிரமிக்க வந்த வஞ்சகர்கள்
  4. அடக்கு முறையின் ஆரம்பம்
  5. விடுதலை வேட்கையின் ஆரம்பம்
  6. சுதந்திர போராட்ட வீரர்கள்
  7. முடிவுரை

முன்னுரை

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் இப்பயிரை காத்தோம்” என்ற வரிகள் இந்த சுதந்திரம் கிடைக்க இந்த தேசம் எவ்வளவு பாடுபட்டிருக்கிறது என்று புலப்படுத்துகிறது.

நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றில் எம் முன்னோர்களின் தியாகம் கலந்திருக்கின்றது. இந்த சுதந்திரம் எமது முன்னோர்களின் குருதியாலும் தியாகத்தினாலும் கிடைத்திருக்கிறது.

ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரமடைந்தது 1947 இல் ஆகும். இதற்கான வரலாறு நீண்டதாகும் அதனை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தேசத்தின் பெருமை

“பூமியில் சொர்க்கம் என்பது இருக்குமெனில் அது இந்தியா தான்” என பேரரசர் “ஜஹாங்கீர்” கூறினார். இயற்கை வளங்களும் பெறுமதியான பொருட்களும் இந்தியாவில் காணப்பட்டமையினால் உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் அந்நிய நாட்டவர்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தனர்.

இந்தியாவிற்கு முதன் முதலில் போர்த்துக்கேய மாலுமி “வாஸ்கொடகாமா” கள்ளிக்கோட்டை துறைமுகத்தில் வந்து இறங்கினார்.

இந்தியாவில் இருந்த வாசனை திரவியங்கள், ஏலக்காய், கறுவா, ஏலம், முத்துக்கள், யானை தந்தம் போன்ற ஏராளமான வளங்கள் காணப்பட்டமையினால் வணிக நோக்கிலும் அதிகளவான அந்நியர்கள் வர துவங்கினார்கள். இது பாரததேசத்திற்கும் மக்களுக்கும் ஆபத்தாய் முடிந்தது.

ஆக்கரமிக்க வந்த வஞ்சகர்கள்

இந்தியாவில் பெறுமதியான வளங்கள் இருப்பதனை கண்ட ஐரோப்பியர்கள் அவற்றை தமது நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் வர்த்தகர்கள் வடிவில் படையெடுக்க துவங்கினர்.

இந்தியாவில் இருந்த போத்துக்கேயர்களை விரட்டி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்தினார்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனி எனும் பெரிய அமைப்பை உருவாக்கி இந்தியாவில் வணிக ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார்கள்.

இவர்கள் ஆயுத பலம் அதிகமாக வைத்திருந்தமையால் இந்திய அரசுகள் ஆங்கிலேயர்களிடம் அடிபணிய நேரிட்டது. பல அரசுகள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் சூழலும் உருவானது.

அடக்குமுறையின் ஆரம்பம்

மன்னராட்சி பகுதிகள் மாகாணங்களாக்கப்பட்டன. எல்லைக்குட்பட்ட மன்னர்களிடம் இருந்து வரி வசூல் செய்தனர். வரி செலுத்த மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. சொந்த நாட்டிலேயே அந்நியருக்கு வரி செலுத்தும் அவல நிலை இந்தியர்களுக்கு ஏற்பட்டது.

அவற்றை கண்டு சில மன்னர்கள் மாத்திரம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டனர். இவர்களுள் தமிழ்நாட்டில் “மருது பாண்டியர்கள், பூலித்தேவன்” முதலான மன்னர்களை குறிப்பிடலாம்.

அந்நியர்களிடம் அடிபணிந்து வாழ்வதை விட போராடி உயிர் நீப்பது மேல் என இவர்கள் பேராடி வீர மரணம் எய்தினர் இவ்வாறு இந்தியாவில் அடக்குமுறைகளும் அதனை எதிர்க்கும் போராட்டங்களும் இடம் பெற்றன.

விடுதலை வேட்கையின் ஆரம்பம்

ஆயுத வழி போராட்டங்கள் மட்டும் போதாது என உணர்ந்த காந்தியடிகளின் வருகை இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் புதுமையான அத்தியாயத்தை உருவாக்கியது. எதிர் தாக்குதல்கள் எதுவும் இல்லாமல் அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தார்.

போராட்டங்களை கலைக்க ஆங்கிலேயர்கள் முயன்ற போதும் சுதந்திர போராட்ட வீரர்கள் மனம் தளராது மீண்டும் மீண்டும் கடுமையாக போராடினர்கள்.

இந்திய போராட்டங்களில் “ஜாலியன் வாலாபாக்” சம்பவம் போன்ற தீவிரமான போராட்டங்கள் இரத்த சரித்திரம் என வர்ணிக்கப்படுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்கள்

அகிம்சை வழியில் உப்பு சத்தியாகிரகம் எனும் போராட்டம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமானது. “வெள்ளையனே வெளியேறு” என்ற கோசம் இந்தியாவெங்கும் எதிரொலிக்க துவங்கியது.

மறுபுறம் “நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்” ஆயுத வழியில் ஒரு பாரிய போராட்டத்தை முன்னெடுத்தார்.

இந்த பெரும் போராட்டத்தில் “நேருஜி, ராஜாஜி, பகத்சிங்” போன்றவர்களும் தென்னகத்தில் “பாரதியார், வ.உ.சி, சுப்ரமணியசிவம், வாஞ்சிநாதன்” போன்றவர்களும் மிக முக்கிய பங்காற்றி உள்ளார்கள். பல வீரர்கள் தமது வாழ்க்கையினை இந்திய சுதந்திரத்துக்காக தியாகம் செய்தனர்.

முடிவுரை

இரண்டாம் உலகப்போரில் இடம்பெற்ற பெரும் பொருளாதார நெருக்கடி ஆங்கிலேயர்களுக்கு பெரும் சோர்வை ஏற்படுத்தியது. அதே வேளை இந்தியர்களின் தொடர் போராட்டங்களுக்கும் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

வேறு வழியில்லாமல் 1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவை இந்தியர்களிடம் ஒப்படைத்தனர். இத்தினமே இந்தியாவின் சுதந்திர தினமாகும்.

இவ்வாறு பலரின் தியாகங்களால் கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி ஒற்றுமையாக இந்தியர்கள் நாம் முன்னேறுவோம். இதுவே எமது முன்னோருக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.

You May Also Like :

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை