இந்தியாவின் சிறப்புகள் கட்டுரை

Indiavin Sirappu Katturai In Tamil

இந்த பதிவில் “இந்தியாவின் சிறப்புகள் கட்டுரை” பதிவை காணலாம்.

பல சிறப்புக்களை கொண்ட இந்திய தேசத்தின் குடிமகனாக பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் சிறப்புகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இந்தியாவின் புவியியல் சிறப்புக்கள்
  3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  4. கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சிறப்புகள்
  5. இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

என்ன வளம் இல்லை இந்திய நாட்டில் என்று கூறுமளவிற்கு அத்தனை வளங்களையும் தன்னகத்தே கொண்ட தேசம் நம் பாரத தேசம். இங்கு பல மதம், மொழி, இன சாதிய வேற்றுமைகளைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.

வேற்றுமையிலும் ஒற்றுமை கொண்ட மக்கள் வாழ்கின்ற நாடாக இந்திய தேசம் விளங்குகின்றது. உலக நாடுகளில் மிகச் சிறந்த நாடாகவும், புகழ்பெற்ற நாடாகவும் விளங்கும் இந்தியாவின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இந்தியாவின் புவியியல் சிறப்புக்கள்

இந்தியா பரப்பளவில் உலகில் ஏழாவது நாடாகவும் ஆசியாவில் இரண்டாவது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் உள்ள பல நாடுகளை விடவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பரப்பளவு அதிகமாக காணப்படுகின்றது.

இந்தியா வடக்கில் கம்பீரமான இமயமலை முகடுகளையும், தெற்கில் அழகான கடற்கரைகளையும் மேற்கில் இந்திய பாலைவனத்தையும் கிழக்கில் புகழ் பெற்ற இயற்கைப் பாரம்பரியத்தையும் கொண்ட சிறந்த புவியியல் தோற்றங்களைக் கொண்ட ஒரு வல்லமைப் பெற்ற நாடாக அமைத்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இன்றுவரை பெருமளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்து வருகின்றது. அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் போன்ற முன்னுரிமை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளைக் கண்டறிந்து வளர்ந்து வருகின்றது.

இந்தியாவில் பல அணு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்திய நாடு அணு ஆற்றல் வளர்ச்சிக்கு முதன்மை அளிப்பது போல விண்வெளி ஆய்வுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது.

தொலைத் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானிலை, இயற்கை வளங்களைக் கண்டறிதல் போன்றவற்றின் வினைத்திறனை வளர்ப்பதற்கு செயற்கைகோள்களை உருவாக்கி அவற்றை விண்ணில் ஏவும் முயற்சி வரை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சிறப்புகள்

இந்தியப் பண்பாடானது பல சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் இந்தியக் கலாச்சாரம், சடங்குகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்களுக்கு பெயர்போனது.

வேற்றுமைகளிடையில் ஓர் ஒற்றுமை என்ற நிலையில் பல மொழிகளும், பல இனங்களும், பல மதங்களும், பல வாழ்க்கைப் போக்குகளும் நிறைந்த இந்தியா ஒரு பொதுப் பண்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

திருமணம், மகப்பேறு, தெய்வ வழிபாடு, நோன்பு, இறந்தார் நினைவு ஆகியவற்றில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு இனங்களிலும் சில கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது.

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்

இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கொண்டு விளங்குகின்றது. சிக்கலான கோவில் கட்டிடக்கலை, வரலாற்று இடிபாடுகள், ஆன்மீகம் மற்றும் கடற்கரை போன்ற பலவற்றையும் கொண்டுள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று இடங்களுள் ஒன்று ஹம்பி. இது மிகவும் மிகவும் கவர்ச்சிகரமான இடிபாடுகள் கொண்டிருக்கிறது.

ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் பிரகதீஸ்வரர் கோயில் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று ஆகும்.

முடிவுரை

இந்திய தேசமானது தன்னகத்தே ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டு காணப்படுகின்றது. உலகின் பல நாட்டினரும் வியந்து பார்க்கும் அளவிற்கு இந்தியாவின் சிறப்புகள் மேலோங்கி உள்ளன.

இத்தகைய இந்திய தேசத்தின் குடிமகனாக பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டும். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் இந்திய தேசத்தின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும் என்றென்றும் பார்புகழுச் செய்ய வேண்டும்.

You May Also Like :
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி
பசுமை இந்தியா கட்டுரை