கர்ம வீரர் என்றால் என்ன

karmaveerar endral enna

இவ்வுலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்து வாழ்ந்து இறந்துள்ளனர். எனினும் அனைவரும் வரலாற்றில் போற்றப்படுவதில்லை.

ஒரு சிலர் மட்டுமே இறந்த பின்னரும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்றனர். இதற்குக் காரணம் வாழும் காலங்களில் அவர்கள் வாழ்ந்த முறையும், செய்த நற்செயல்களுமே ஆகும்.

வாழும் காலங்களில் அனைவருமே தமக்கான கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றிவிடுவதில்லை. அவ்வாறு நிறைவேற்றி போற்றுதற்குரிய செயல்களைச் செய்பவர்கள் என்றென்றும் நினைவுகூறத் தக்கவர்களாவர்.

கர்ம வீரர் என்றால் என்ன

கர்மவீரர் என்றால் கர்மமே கண்ணாகக் கொண்டவர் என்று அர்த்தம் ஆகும். பெருந்தலைவர் காமராஐருக்கு அமைந்த ஒரு சிறப்புப் பட்டம் கர்மவீரர் காமராஐர் என்பதாகும்.

கர்மவீரர்கள் நடவடிக்கைகள் பற்றி “குமரகுருபரர்” பட்டியலிட்டுள்ளார். அவையாவன மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார், செல்வி அருமையும் பாரார், அவமதிப்பும் நாட்டார் எனப் பட்டியலிட்டுள்ளார்.

காமராஜர்

இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தை பெயர் குமாரசாமி, தாயார் பெயர் சிவகாமி அம்மாள்.

சிவகாமி அம்மாள் காமராஜரை ராஜா என்று செல்லமாக அழைத்து வந்தார். பின்னர் அவர்களின் குலதெய்வமான காமாட்சி அம்மனின் பெயரை நினைவு கூர்ந்து காமாட்சி என்றும் மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்தும் காமராஜர் என்று அழைத்தார்கள்.

“கறுப்புக் காந்தி” என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். பெருந்தலைவர் காமராஜர் படிக்காத மேதையாவார். தான் படிக்கவில்லை என்றாலும் பலர் படிப்பதற்கு காரணமாக இருந்தவர் இவரே.

குறிப்பாக தமிழக சமுதாயத்தைத் தொலைநோக்குப் பார்வையுடன் பார்த்து கல்வி அறிவைக் கொடுத்துச் சென்றவராவார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 7% ஆக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை இவருடைய ஆட்சியில் 37% ஆக உயர்ந்தது.

அதுமட்டுமன்றி குழந்தைகள் படிப்பிற்கு அவர் போட்ட விதைகள் தான் இன்றும் தமிழகத்தின் கல்வி சதவீத வளர்ச்சிக்குப் பங்காற்றியது என்றால் அது மிகையல்ல.

கல்வி அறிவு கொடுத்தால்தான் ஒரு மாநிலம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக வளர்ச்சி பெறும். சிறந்த மருத்துவர்களை, பொறியியலாளர்களை, விஞ்ஞானிகளைப் பெற முடியும் என்பது காமராஜரின் கணக்கு.

கல்விக்கு அடுத்து இவர் எடுத்துக் கொண்டது விவசாயமாகும். இவரது ஆட்சியில் பல அணைகள் கட்டப்பட்டன. இன்றும் இந்த அணைகள் தமிழக விவசாயத்திற்கு உயிர் கொடுத்து வருகின்றன என்பது சிறப்பாகும்.

மேலும் மாநிலத்தில் தொழில் வளத்தையும் பெருக்கினார். பெரம்பலூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சியில் பெல் நிறுவனம், ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி ஊட்டி ஆகிய இடங்களில் மின்வெப்பத் திட்டம் போன்ற பலவும் இவரால் கொண்டுவரப்பட்டவையாகும்.

எளிமையான முதலமைச்சராவார். ஊழல்களும், அரசியலில் ஆடம்பரங்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் தலைவிரித்து ஆடும் இன்றைய காலகட்டத்தில் காமராஜரைப் போல் ஓர் அரசியல்வாதி மீண்டும் பிறந்திர மாட்டாரா என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும் ஆகும்.

மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல்வாதியாவார்.

அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என வாழ்ந்தவர் காமராஜராவார். இவர் தமிழகத்தை ஆண்ட காலப்பகுதி (1954-963) பொற்காலம் என்றால் அதுமிகையல்ல.

Read more: கல்வி புரட்சி கட்டுரை

ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு