நாம் வாழும் இந்த வாழ்க்கை மேடும், பள்ளமும் நிறைந்ததே ஆகும். இவைகளை கடந்து தான் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
துன்பம், சந்தோஷம், போராட்டங்கள் கலந்து தான் வாழ்கை அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மையில் வாழ்க்கை என்பது வரையறுத்துக்கூற முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் நாம் வாழும் இந்த வாழ்க்கை சரிவர யாராலும் புரிந்துகொள்ளப்படவில்லை என்றால் அதுமிகையல்ல.
வாழ்க்கை என்பது மாற்றமடையும் ஒன்றாக, நிச்சயத்தன்மையற்றதாகவே இருக்கின்றது. வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் ஏராளம்.
பிரச்னைகளே இல்லாத வாழ்வு வேண்டும் என்று வேண்டுவதை விட பிரச்னைகளை எதிர் கொள்ளும் மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பதே சிறப்பாகும். நமக்கான பாதையில் தடுமாறாமல் தடம் மாறாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
Table of Contents
வாழ்க்கை என்றால் என்ன
பிறப்புக்கும், இறப்புக்கு நடுவே நடக்கும் வேடிக்கை வினோத நிகழ்வுகளை வாழ்க்கை எனலாம். சுருங்கக் கூறின் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை ஆகும்.
நிம்மதியாக வாழ்வது எப்படி
அழுத்தும் பணிச்சுமைகள், துரத்தும் கடமைகள், நிற்க நேரமின்றி, யாரையும் நிமிர்ந்து பார்க்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம். கிடைத்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும்.
எனவே விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். அது வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.
எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்துப் பழகும் போது குற்ற உணர்வுகள் இன்றி மகிழ்வாக வாழ முடியும். எண்ணங்கள் சிறப்பாக அமையும் போது மன மகிழ்ச்சி ஏற்படும்.
எதிர்மறையான எண்ணங்கள் மனதில் அமைதியைக் குலைத்து விடும். எனவே எப்போதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.
நேர்மறையான எண்ணங்கள் நம்மை வலிமையுள்ளவர்களாக ஆக்குவதுடன், கவலை துன்பங்கள், தோல்விகளையும் சுலபமாக கடந்து வாழ்வில் முன்னேற வைக்கும்.
வாழ்வில் எக்காரணத்திற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காது வாழும்போது தன்னம்பிக்கை நமக்குள் பிறக்கும்.
மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள். அது நம்மை அன்பானவர்களாக மாற்றுவது மட்டுமின்றி, மன அமைதியையும் தரும். உங்களை நேசித்துப் பழகுங்கள்.
கடந்த காலத்து சோகமான நினைவுகளை மீட்டுப் பார்க்கும் போது அது மேலும் கவலையை ஏற்படுத்தும். அவை நடந்து முடிந்தவை எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்கக் கூடாது. நிகழ்காலத்தில் வாழுங்கள்.
உலகில் யாரும் ஏழு முறை பிறக்கப் போவதில்லை. பிறப்பும் ஒரு முறை தான், இறப்பும் ஒரு முறை தான் இருக்கின்ற அந்த ஒரு வாழ்க்கையையும் இன்பமயமாய், இனிமை நிறைந்ததாய் அமைத்திட வாழ்கிற அந்த வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் அனுபவங்கள் கற்றுக்கொடுக்கும் பாடமே சிறந்தது என அறிவில் சிறந்த வல்லுநர்கள் கூறியதுண்டு.
இவ்வாறு நாம் வாழும் இந்த வாழ்க்கையின் நாட்களை மகிழ்ச்சியாய் கழிப்பது நம் கையில் தான் உள்ளது என்னும் தத்துவத்தை உணர்ந்தவர்கள் வாழ்க்கையின் எந்த பாதையையும் கடந்து செல்வர் என்பது மறுக்க முடியாத நிதர்சனமாகும்.
Read more: மாதவிடாய் தள்ளி போக காரணங்கள்