மனிதநேயம் என்றால் என்ன

manitha neyam in tamil

மனிதநேயம் என்றால் என்ன

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தரவாரா”

எனும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளின் பொருளை சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த தலைவர்களின் செயல்களில் காண முடிகின்றது.

மனிதநேயத்தோடு மக்கள் பணியாற்றிய எத்தனையோ கொடை வள்ளல்கள் வாழ்ந்த திரு நாட்டில், மனிதமும், நேயமும் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தைக்கு உதாரணம் காட்டுவதற்கு கூட சிலரின் பெயரை யோசிக்க வேண்டியுள்ளது.

கடமையாற்ற பணத்தை எதிர்பார்க்கும் சிலர் தான் செய்வது சேவைப் பணி என்பதனை மறந்து விடுகின்றார்கள். இன்றைய சூழலில் பணம் இல்லாமல் எதுவும் கிடைத்து விடாது.

கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் இன்று வியாபாரமாகிவிட்டன. தாகம் என்று தண்ணீர் கேட்டால் கூட முதலில் பணம் கொடு என்று தான் கேட்கின்றார்கள்.

பணம், புகழ், போதை என நிலையில்லாததன் மீது கொண்டுள்ள மோகம் மனிதநேயத்தை மறக்க செய்கின்றது.

மனிதனை மனிதன் அழிக்கும் சமுதாய கொலைகள், கற்பழிப்புகள், தீவிரவாதம், அரசியல் சண்டைகள் என ஒவ்வொரு கொடுஞ்செயல்களாலும் மனித நேயம் கரைந்து கொண்டிருப்பதனை உணர்த்துகின்றன.

காந்தி பிறந்த மண்ணில் இன்று யார் இரக்கம் காட்டுகின்றார்கள்? புத்தன் பிறந்த மண்ணில் இன்று அன்பு கூட அளவாகத்தான் காட்டப்படுகின்றது.

பெரும்பாலும் நம்மில் பலர் பாவம் செய்துவிட்டு பரிகாரம் செய்தால் போதும் புண்ணியம் கிடைத்துவிடும் என்று தவறான எண்ணத்தில் மனசாட்சிக்கு விரோதமான செயல்களை துணிச்சலாக செய்து வருகின்றார்கள்.

பொன்னையும், பொருளையும், மண்ணையும் தேடும் நாம் பல நேரங்களில் மனித நேயத்தைத் தொலைத்து விடுகின்றோம். இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மனித நேயம் இரையாக்கப்படுகின்றது என்பது மறுக்க முடியாததாகும்.

நம் அகம் சார்ந்த தேடல் நிகழும்போது புறம் சார்ந்த மனிதர்களை நினைக்க மறந்துவிடுகின்றோம். ஆனால் அகமும் புறமும் சார்ந்ததுதான் வாழ்க்கை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஒருவரின் துயர் கண்டு துடித்தெழுவது மட்டும் உண்மையான மனித நேயமாகாது. அதனை செயல் வழி காட்ட வேண்டும் என்பதனை உணர வேண்டும்.

மனிதநேயம் என்பது மனிதனின் உயர்ந்த குணம், உயர்ந்த கண்ணியம். அது இல்லாமல், மனிதன் ஒரு விலங்கு மட்டுமே என்பதனை உணர்ந்து மனிதநேயத்துடன் வாழ வேண்டும்.

மனிதநேயம் என்றால் என்ன

மற்றவர்களையும் மதித்து நடத்தல், ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் மனிதநேயம் என்று சொல்லலாம்.

மனிதநேயத்தின் முக்கியத்துவம்

மனித நேயத்தின் மூலமே இறைவனை காண முடியும். இந்திரர் அமிர்தம் கிடைத்தாலும் அது இனிமையானது என தனித்து உண்ணாத தகைமையாளர்களாலும், தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கின்ற சான்றோர்களாலும்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என நமது முன்னோர்களின் மனித நேயம் குறித்துக் கூறுகிறது புறநானூறு.

மனிதநேயம் மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையில் வெளிப்படுத்தப்படுகிறது, அதே போல் ஒருவரின் சொந்த, உறவினர்களிடம் மட்டுமல்ல, அந்நியர்களிடமும் கருணையுள்ள அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது.

மனிதநேயம் பயனுள்ள விஷயங்களைச் செய்ய மன உறுதியைப் பெற உதவுகிறது. மனிதநேயம் என்பது ஒரு நபரை மரியாதைக்குரியதாக மாற்றும் ஒரு விலைமதிப்பற்ற பண்பு ஆகும்.

Read more: அன்பு பற்றிய கட்டுரை

உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை