மாதவிடாய் தள்ளி போக காரணங்கள்

mathavidai thalli poga karanam

பெண்களின் வாழ்வில் மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று. ஆனால் பெண்ணுக்கு பெண் மாதவிடாய் சுழற்சி வேறுபடுகின்றது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட திகதியில் குறைந்தோ அல்லது நாள் தவறியோ மாதவிடாய் ஏற்படலாம்.

சிலருக்கு குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறை நிகழும். சிலருக்கு அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறை நிகழும். இவ்வாறு ஏற்படுவது சகஜம். ஆனால் ஒரு சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதும் உண்டு.

கர்ப்பத்தை தவிர பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மாதவிடாய் தள்ளி போக காரணங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

மாதவிடாய் தள்ளி போக காரணங்கள்

ஹார்மோன் சமச்சீரின்மை

ஹார்மோன்களின் சமச்சீரின்மை அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். குறிப்பாக பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் ஓர் ஹார்மோன் சமச்சீரின்மை நோய்க் கூறாகும். ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும் போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிகரித்த உடல் எடை

உடற்பருமன் அதிகரிக்கும்போது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும். அதிக உடல் எடையானது உடலின் செயற்பாட்டை பாதிப்படையச் செய்கின்றது. எனவே உடல் எடையைக் குறைப்பதுடன் உடலுக்கு சக்தியை வழங்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

மன அழுத்தம்

அதிகப்படியான மன அழுத்தமானது மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாது உடல் ரீதியான பாதிப்புகளையும் அதிகம் ஏற்படுத்துகின்றது. அதிகப்படியான மன அழுத்தம் மாதவிடாய் சுழற்சியில் தாமதத்தை ஏற்படுத்தலாம். இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் தள்ளிப் போகலாம்

குழந்தைக்கு பாலூட்டும் காலங்களில் மாதவிடாய் தள்ளிப் போகும். ஆனால் குழந்தை பால் குடியை மறந்ததும் மீண்டும் மாதவிடாய் காலங்கள் வழக்கமானதாக மாறும்.

பெரிமெனோபாஸ் (Perimenopause)

பெரும்பாலும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். மாதவிடாய் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.

தைராயிட் பிரச்சினை

அதிகம் செயல்படும் அல்லது செயல்படாத தைராய்டு சுரப்பி மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம். இதில் கரு உருவாதலில் கூட பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

அதிகரித்த உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை கொடுப்பதாக இருந்தாலும் அளவுக்கு மீறிய அல்லது அதிகரித்த உடற்பயிற்சியானது மாதவிடாய் காலத்தை தள்ளிப் போகச் செய்யலாம்.

அதிகரித்த உடற்பயிற்சியானது ஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. இது சீரான மாதவிடாய் சுழற்சியை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடற்பயிற்சியை அளவோடு செய்யும்போது உடல் ஆரோக்கியம் பேணப்படுவதோடு மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பும் நிகழாது.

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள்

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட நினைப்பவர்கள் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். இது ஹார்மோன் மற்றும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. எனவே முடிந்தளவு இத்தகைய மாத்திரைகளை உட்கொள்ளாது இருப்பது நன்மை தரும்.

சாதாரண நடைமுறை

பூப்பெய்திய பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படத் தொடங்கிய முதல் இரண்டு வருடங்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது சாதாரணம் ஆகும். காரணம் சிலருக்கு உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதலுக்கு தயாராகாமல் இருக்கலாம். இதனால் மாதமொருமுறை கரு முட்டை வெளியேறத் தாமதமாகும்.

கருத்தரிப்பு

கருத்தரித்த பெண்களுக்கு மாதவிடாய் தவறும். மாதவிடாய் தவறும் காலத்தில் வைத்தியரை நாடி பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் கருத்தரிப்பா அல்லது வேறு காரணமா என்பதை கண்டறிந்து மாற்று வழிகளைத் தேடலாம்.

You May Also Like :
நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
அக்குள் கருமை நீங்க