வாசிப்பை நேசிப்போம் கட்டுரை

vasippai nesippom katturai in tamil

உங்களிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தால் என்ன செய்வீர்கள் என பேரறிஞர் அப்துல் கலாம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது நான் உடனடியாக ஒரு புத்தகம் வாங்குவேன் என்றாராம் அவர். இவ்வாறாக பலரும் வாசிப்பை உயிர் மூச்சாக கொண்டு பேரறிஞர்களாக வாழ்ந்துள்ளனர்.

வாசிப்பை நேசிப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாசிப்பிற்கான ஊடகங்கள்
  • வாசிப்பின் முக்கியத்துவம்
  • அருகிவரும் வாசிப்பு பழக்கம்
  • முடிவுரை

முன்னுரை

நேரம் வீணாகிறதே என்று பதட்டப்பட வேண்டிய அவசியம் அற்றவர்கள் புத்தகங்களை வாசிப்பவர்கள் மட்டுமே என்கிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

24 மணித்தியாலங்கள் போதாதென்று நேரத்துடன் போராடும் இந்த காலக்கட்டத்தில் மனிதன் வாசிப்பு பழக்கம் என்ற ஒன்று இருப்பதையே மறந்து விட்டான் என்பது கவலைக்குறிய விடயம் ஆகும். எவ்வாறான சூழ்நிலைகளிலும் வாசிப்பை நேசிக்கும், ஊக்குவிக்கும் மனிதர்களாக நாம் இருக்க வேண்டும்.

வாசிப்பிற்கான ஊடகங்கள்

எழுத படிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் மனிதன் ஏடு, அரிச்சுவடிகளில் ஆணி கொண்டு எழுதி வாசிக்க கற்றுக் கொண்டான். அன்றைய காலம் தொடக்கம் வாசித்து தம் அறிவைப் பெருக்கி கொண்ட மனிதன் இன்று தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இலகுவான முறைகளை உருவாக்கியுள்ளான்.

நூல் வடிவத்தில் வாசித்து பழகிய மனிதர்கள் இன்று ஆடியோ, வீடியோ வடிவில் நூலை பெற்றுக்கொள்கின்றனர். காலில் சக்கரம் கட்டி நேரமின்றி சுழன்றுகொண்டிருக்கும் நூல்களை நேசிக்கும் மனிதர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கின்றது.

மேலும் இன்று நூல்களை எழுத்தாளர்கள் மென்பொருள் வடிவில் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருவதால் பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கி வாசிக்கக்கூடிய வசதிகள் இல்லாதவர்கள் இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர். நடமாடும் நூலகங்கள் இன்று பெரும் பயனுள்ளதாக இருக்கின்றன.

வாசிப்பின் முக்கியத்துவம்

மனித இனம் சிறப்பு பெறுவது அவன் கொண்டிருக்கும் ஆறாம் அறிவைக்கொண்டுதான். இப்பகுத்தறிவை மனிதன் தான் பார்த்த, கேட்ட, வாசித்த, உணர்ந்த விசயங்களை கொண்டு மேலும் விருத்தி செய்து கொள்கின்றான்.

இந்த பரிணாம வளர்ச்சியில் நூல் வாசிப்பின் மூலம் அவன் பெற்றுக்கொள்ளும் அறிவு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வாசிப்பதன் மூலம் அனைத்து விடயங்களையும், முழுமையாக எம் வாழ்நாள் முழுவதும் அறிந்துக்கொள்ளலாம். வாசிப்பானது எழுத்தாளர் கூறும் கருத்துகளை பயனாளர் மனதில் உளி கொண்டு செதுக்கிய அழகிய சிற்பமாக பதிய வைக்கும் அதிசய சக்தி கொண்டது.

இதனால் வாசிப்பவர் அடையும் நன்மைகள், அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். இதற்கு நாம் பார்த்த பார்க்கின்ற அறிஞர்கள், தலைவர்கள், பண்டிதர்கள், அறிவியலாளர்கள் என அனைவரும் சாட்சியாக இருக்கிறார்கள்.

ஓதுவது ஒழியேல் என்கிறார் ஔவைப்பிராட்டி. வாசிப்புப்பழக்கம் பிழையில்லாத வசன அமைப்பையும் மொழி வளத்தையும் செம்மைப்படுத்துகின்றது. நாம் எதிர்நோக்கும் சவால்களை தைரியமாக எதிர்த்துப் போராடவும் ஒழுங்கான தீர்வு காணவும் நம் வாசிப்பு பழக்கம் துணை புரியும்.

அருகி வரும் வாசிப்பு பழக்கம்

மனிதனின் பரிணாம வளர்ச்சியை கண்டு வியந்தாலும் அவன் நேரமின்மை எனும் பெரும் பிரச்சனையால் பலரும் பலவற்றை இழக்கின்றனர். ஆனால் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் அவன் தொலைபேசிகளிலும் வீண் கேளிக்கைகளிலும் நேரத்தை செலவழிக்க தொடங்கி விட்டான்.

இதனால் அவன் பெற்றுக்கொள்ள வேண்டிய, அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்களை பெற தவறி விடுகிறான். இது அவனுக்கு பேரிழப்பை ஏற்படுத்துகின்றது எனலாம்.

தொழில்நுட்ப சாதனங்களை அறிவை வளர்த்துக்கொள்ளும் சாதனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

வாசிப்பின் முக்கியத்துவத்தை நாம் உலகறிய உரக்கச் சொல்ல மறந்து விட கூடாது. வாசிப்பு பழக்கமானது ஒரு தனி மனிதன் தொடக்கம் இப்பிரபஞ்சத்தையே மாற்றக்கூடிய சக்தி படைத்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

You May Also Like :

புத்தக வாசிப்பு கட்டுரை

வாசிப்பின் நன்மைகள்