வாசிப்பின் நன்மைகள்

வாசிப்பின் பயன்கள்

வாசித்தல் என்ற பண்பு, மக்களின் வாழ்வியலில் நீங்கா இடம் பிடித்துள்ளது. வீட்டை அலங்கரிக்கப் புத்தகங்களை விட அழகானதும் சிறந்ததும் பயனுள்ளதுமான பொருள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றே கூறவேண்டும்.

புத்தகம் வாசித்தல் என்பது ஓர் மனிதனிடம் இருக்கக்கூடிய சிறந்த பண்புகளில் ஒன்றாகும். புத்தக வாசிப்பின் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

வாசிப்பின் நன்மைகள்

#1. மொழியில் புலமையை தருகின்றது.

ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். வாசிப்பதனால் அம்மொழியில் புலமை பெற முடியும். மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். ஒரு மொழியில் உள்ள பல புதிய சொற்களை அறிய அம்மொழி நூல்களை வாசிக்க வேண்டும்.

#2. மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

வாசிப்பின் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். சிந்திப்பின் ஆற்றலையும் குறித்த விடையத்தை நினைவில் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கவும் வாசிப்பு உதவுகிறது.

#3. பகுத்தறிவு மென்மேலும் வளர்ச்சி அடையும்.

வாசிப்பதன் மூலம் புரிந்துகொள்ளுதல் மற்றும் பகுப்பாய்வு திறன்கள் வெகுவாக வளர்ச்சி பெறும். தொடர்ந்து வாசிப்பதன் மூலமே அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.

#4. வாசிப்பு வெற்றிகரமான மனிதர்களை உருவாக்குகின்றது.

உலகின் வெற்றிகரமான மனிதர்களில் பலர் முடிந்த அளவு வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனரும், கோடீஸ்வர கொடை வள்ளலுமான பில் கேட்ஸ், வாசிப்பு தன் வாழ்க்கையை மாற்றியது என்கிறார். அவர் வாரம் ஒரு புத்தகம் அல்லது ஆண்டுக்கு 50 புத்தகங்கள் தவறாமல் வசிப்பதாக கூறுகின்றார்.

#5. வாசிப்பு பொது அறிவைப் பெற்றுத் தருகின்றது.

பொது அறிவையும் வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது.

#6. வாழ்வை வளமாக்கும்.

வறுமையான வாழ்க்கையில் இருந்து வளமான வாழ்க்கைக்கு முன்னேற புத்தகங்கள் உதவியிருக்கிறது. புத்தகங்கள் ஊக்கம் பெற வைத்து, பொருளாதார மற்றும் சமூக போராட்டங்களை கடந்து எதிர்காலத்தை உருவகப்படுத்திக்கொள்ள வழி செய்யும்.

#7. எழுத்தார்வத்தை வளர்க்க உதவும்.

சிறந்த புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் எழுத்தார்வம் தூண்டப்படும். பல புத்தகங்கள், கட்டுரைகள் என்று வாசிக்கும் போது மற்றவர்களின் எழுத்து நடை, அவர்கள் கையாளும் எழுத்துமுறை என்று பல விடையங்களை கிரகித்துக்கொண்டு அதன் அடிப்படையாக வைத்து எழுதிப் பழகுவதன் மூலம் எழுத்துத் திறனை அதிகரிக்கலாம்.

#8. மன அழுத்தத்தை குறைக்கும்.

வாசிப்பு மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியை அதிகரிக்கிறது. வாசிக்கும் போதும் ஒரு நாவலிலோ, கதையிலோ மூழ்க விடுவோம். இதனால் மனதிற்கு கவலையை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றி சிந்திக்க வேண்டி ஏற்படாது.

#9. வாசிப்பு ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றக்கூடியது.

ஓய்வு நேரங்களைச் சிறந்த முறையில் செலவு செய்வதற்கு வாசிப்பு உதவுகின்றது. ஓய்வு நேரங்களில் நாம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இவ்வுலகில் ஒரு மாமேதையாகலாம்.

#10. ஒரு வழிகாட்டியாகவும் திகழும்.

சிறந்த புத்தகங்கள் என்பது காரிருளில் செல்பவர்களுக்குப் பேரொளியாகவும் வழி தவறியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழும். எனவேசிறந்த புத்தகங்களை வாசிப்பதனால் வாழ்வில் நல்வழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

You May Also Like :
காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்
வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை