சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் கட்டுரை

Sutru Sulal Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் “சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கையை நேசித்து இயற்கையை பாதுகாத்து வாழ வேண்டியது எம்மை வாழ வைக்கும் இயற்கைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுற்றுச்சூழலின் அவசியம்
  3. சுற்றுச்சூழலை அழிவடையாமல் பாதுகாத்தல்
  4. அழிவடைந்தவற்றை மீள உருவாக்கல்
  5. சுற்றுச்சூழல்பாதுகாப்பு அமைப்புக்கள்
  6. சூழல் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்கல்
  7. முடிவுரை

முன்னுரை

சுற்றுச்சூழல் எனப்படுவது நாம் வாழ்கின்ற இந்த பூமியில் எம்மை சூழ்ந்து காணப்படுகின்ற இயற்கை அரண் எனலாம். இந்த இயற்கை சூழல் சமநிலையை இழந்து விட்டால் இங்கு எந்த உயிரினங்களும் வாழ முடியாது போய்விடும்.

இயற்கை சூழலை பாதுகாத்தல் எனப்படுவது எமது சுற்றாடலை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகள் ஆகும். மனிதர்களினுடைய மோசமான செயல்களால் பாதிக்கப்படுகின்ற இயற்கை சூழலை பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று உலகம் உள்ளது.

இக்கட்டுரையில் சூழலின் முக்கியத்துவம் அவற்றை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலின் அவசியம்

சுற்றுச்சூழல் ஏன் அவசியமானது? நாம் சுவாசிக்க காற்று, பருக நீர், உண்ண உணவு, உடுத்திக்கொள்ள ஆடை, வாழ்வதற்கு வீடு என்று இங்கே நாம் வாழ இயற்கை சூழலையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

மனிதர்கள் மாத்திரமன்றி பல்லாயிரகணக்கான உயிரினங்கள் இந்த சூழலை நம்பி வாழ்கின்றன. ஆக நாம் சூழலை பாதுகாக்க வேண்டியது மிக அவசியமாகின்றது.

சூழலை அழித்தல் எமது அழிவிற்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதாக அமைகிறது. அது போல மனிதனால் ஒருபோதும் இயற்கையை வென்றுவிட முடியாது என்பது தெளிவான உண்மை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலை அழிவடையாமல் பாதுகாத்தல்

சூழலை பாதுகாக்க மனிதன் ஒன்றும் பெரிய பிரயத்தனங்களை செய்ய வேண்டியதில்லை. மனித நடவடிக்கைகளான காடழித்தல், பாரிய கைத்தொழில் நடவடிக்கைகள், சுவட்டு எரிபொருள் அகழ்வுகள், அணு ஆயுத உற்பத்திகள் இது போன்ற இயற்கைக்கு முரணான செயற்பாடுகளை நிறுத்தினாலே போதும் இயற்கை தன்னை தகவமைக்கும் ஆற்றல் கொண்டது.

அது தன்னையும் பிற உயிர்களையும் பாதுகாக்கும் சமநிலையாக வைத்துக்கொள்ளும். இதனை கண்டுகொள்ளாமல் இயற்கையை மனிதன் அழிப்பதனால் தான் புவி வெப்பமடைதல், பச்சைவீட்டு விளைவு, காலநிலை மாற்றம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இன்று மனிதர்கள் எதிர்கொள்ளும் எல்லா இயற்கை சமநிலை குழப்பங்களுக்கும் சூழல் பாதுகாக்கப்படாமையே காரணமாகும்.

அழிவடைந்தவற்றை மீளஉருவாக்கல்

எது எவ்வாறாக இருந்தாலும் மனித நடவடிக்கைகளால் சூழல் வெகுவாக அழிக்கப்பட்டு விட்டது. மிக அழகானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்த சூழலை மீள கட்டமைக்க வேண்டிய பொறுப்பு இன்று மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதற்காக உலகநாடுகள் பலவும் மீள் காடாக்கம், காற்று சுத்திகரிப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, பச்சைவீட்டு வாயுக்கள், காபன் வாயுக்கள் வெளியேற்றம் போன்றனவற்றை குறைத்தல், கழிவகற்றல் முகாமைத்தவம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அழிவின் விளிம்பில் இருக்கின்ற இயற்கை சூழலை பாதுகாத்து மீள கொண்டுவர முயற்சிகளை எடுக்கின்றன.

கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து, நோர்வே, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் சூழலை பாதுகாப்பதில் முன்னோடியான நாடுகளாக காணப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள்

உலகளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச அளவில் இயங்குகின்ற அமைப்புக்கள் இருக்கின்றன. அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த மாநாடுகளை நடாத்துகின்றன.

உலக நாடுகளுக்கு சூழல்பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. உதாரணமாக UNEP, UNESCO, Bird Life International, WWF, IUCN, IPCC போன்ற அமைப்புகள் உலகில் சூழல் பாதிப்புகள் தொடர்பான தரவுகளை கொண்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னின்று எடுத்து வருகின்றன.

சூழல் பாதுகாப்பு சட்டங்கள்

இந்தியாவில் சூழல் பாதுகாப்பு மற்றும் தொடர்பான சட்டம் 1986 இல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் 253 ஆவது பிரிவின் கீழ் நடைமுறையில் உள்ளது.

இது ஜக்கிய நாடுகள் சபையின் சுற்றுசூழலை பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவுகளை செயற்படுத்த நிறைவேற்றப்பட்டது.

மேலும் நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், காற்று மாசுபடுத்தல் தடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் நடை முறையில் உள்ளன. இவற்றிற்கு கட்டுப்பட்டு சூழலை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவருடையதும் கடமையாகும்.

முடிவுரை

சூழலை மாசுபடுத்தல் அனைவருக்கும் கேடு தருகின்ற விடயமாகும் சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்காது விட்டால் எமது எதிர்காலம் மிக பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும்.

இயற்கையை நாம் அழித்தால் அந்த இயற்கையால் நாம் அழியவேண்டி வரும் ஆகவே தான் சூழலை பாதுகாக்க வேண்டும் எனும் கருத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக வருடம் தோறும் ஜீன் 5 ஆம் திகதி சுற்றுசூழல் தினம் உலகமெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

நாம் வாழும் சூழலை நேசிப்போம் பாதுகாப்போம்.

You May Also Like :

இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை