பெண்களின் முன்னேற்றம் கட்டுரை

Pengal Munnetram Katturai In Tamil

இந்த பதிவில் “பெண்களின் முன்னேற்றம் கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய காலப்பகுதியில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு பெண்களின் வளர்ச்சி அமைந்திருக்கின்றது.

ஆனால் ஒருகாலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அடக்கு முறைகளும் உச்சத்தில் இருந்தது போது அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மிக மிக அதிகம்.

  • பெண்களின் முன்னேற்றம்
  • Pengal Munnetram Katturai In Tamil
கல்வி வளர்ச்சி கட்டுரை

பெண்களின் முன்னேற்றம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாழ்வியலில் பெண்களின் வகிபங்கு
  3. பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
  4. பெண்களுக்கான சுதந்திரம்
  5. பெண்களுக்கான பாதுகாப்பு
  6. பெண்களின் முன்னேற்றமும் சமூகத்தின் வளர்ச்சியும்
  7. முடிவுரை

முன்னுரை

பெண் என்ற தாய்மையில் இருந்து தான் இந்த உலகின் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகுவதற்கு பெண்கள் மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

குழந்தைகளைப் பெற்று வளர்த்து அவர்களை ஆளாக்கி குடும்பத்தை நிர்வகிப்பவர்கள் பெண்களே. பெண்கள் அசாத்தியமான மனவலிமையும் பொறுமையும் உடையவர்களாக இருப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்ணின் அன்பும் ஆதரவும் தியாகங்களும் நிறைந்திருக்கும்.

ஆனால் இத்தகைய பெண்களுக்கு உரிய அந்தஸ்த்தும் உரிமைகளும் பாதுகாப்பும் சமூகத்தில் மறுக்கப்படுவது ஏனோ? இது பழைய கதைகளின் பெண்ணடிமைத்தன சித்தாந்தங்களின் சாரமாக தான் இருக்க வேண்டும்.

ஆனால் இன்று இந்த இருள் விலக துவங்கியுள்ளது. பெண்கள் முன்னேற்றம் உள்ள சமூகம் தலைசிறந்த சமூகம் என்று மாறிவருகின்றது.

இக்கட்டுரையில் பெண்களின் முக்கியத்துவமும் அவர்களின் சவால்களும் அவர்களது முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமாகும் என்பது தொடர்பாக நோக்கப்படுகிறது.

வாழ்வியலில் பெண்களின் வகிபங்கு

ஒரு பெண் சமூகத்தில் பல வேடங்கள் எடுக்கின்றாள். குழந்தைகளுக்கு தாயாகவும் கணவனுக்கு மனைவியாகவும் பெற்றோருக்கு நல்ல மகளாகவும் சகோதரர்களுக்கு அன்பான சகோதரியாகவும் மாணவர்களுக்கு அன்பான ஆசிரியையாகவும் மருத்துவர்களாகவும் தாதிகளாகவும் பல துறைகளிலும் வாழ்வின் அனைத்து துன்பமான நேரங்களிலும் ஆண்களுக்கு துணையாக பெண்கள் உள்ளனர்.

பொதுவாக ஒரு பெண் ஆணின் துணையின்றி பிழைத்து கொள்வாள் ஆனால் ஒரு ஆண் பெண்ணின் ஆதரவின்றி வாழ்வது இயலாது காரியம் என உளவியல் கூறுகிறது. அன்பு, அரவணைப்பு, தியாகம், பொறுமை, சகிப்பு இவற்றுக்கு பெண்களுக்கு நிகர் பெண்களே.

இத்தகைய பெண்கள் ஒரு சிறந்த சமூகம் ஒன்றை கட்டமைக்கின்றார்கள். “பெண்ணில்லா ஊரில் பிறந்தவர்கள்” அன்பின் இலக்கணம் அறியாதவர்களாக” தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது.

மேலும் இந்து சமயத்தில் பெண் தெய்வங்கள் மங்களம் சுபீட்சம் போன்ற சுப விடயங்களின் சொருபமாக வழிபடப்படுகின்றன.

பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

பெண்கள் பிறப்பின் அடிப்படையில் உடல் அளவில் மென்மையானவர்கள் எமது சமூகத்தில் ஆரம்பகாலங்களில் இருந்தே பெண்களை விட ஆண் பலமானவன் உயர்ந்தவன் என்ற ஆணாதிக்க கோட்பாடு ஒன்று உள்ளது.

பெண்ணடிமைத்தனம், சீதனம், கட்டாய திருமணம் இவை போன்ற செயல்கள் இந்த மடமைத்தனத்திற்கு வித்திட்டது.

பெண்கள் கல்வி கற்க சுதந்திரமாக அனுமதிக்கப்படுவதில்லை அவர்களது கனவுகளை யாரும் அங்கீகரிப்பதில்லை பெண் வளர்ந்தால் அவளை திருமணம் செய்து வைப்பதே தமது கடமை எனும் சிந்தனை பெற்றோர்கள் மனதில் உள்ளது.

இதனால் தான் பெண்கள் தமது கனவுகளை பெற்றோருக்காக சிதைத்து கொள்கின்றனர். இவ்வாறான நிலை இன்று கணிசமாக மாறியுள்ளது. இருப்பினும் முற்று பெறவில்லை.

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. பல தடைகளை தாண்டித்தான் ஒரு பெண் இந்த சமூகத்தில் வாழவேண்டி இருக்கிறது.

பெண்களின் சுதந்திரம்

பெண்களுக்கான சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பது தொடர்பான போராட்டம் தமிழ் வரலாற்றில் மகாகவி பாரதியாருடைய வரிகளால் விதை போடப்பட்டது. கவிதைகள், பாடல்கள் மூலமாக பெண் விடுதலைக்காக பாரதி தனது புரட்சியை செய்தார்.

இன்றைய சமுதாயம், அரசியல் சட்டங்கள் பெண்ணுரிமையை முதன்மை படுத்துகின்றன. பெண்களது கல்வியும் அவர்களது உயர்வும் இன்று வளர்ச்சி கண்டுள்ளன.

பெண்கள் எல்லா துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி காண்பது இந்த சமூகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இன்றைக்கு நாம் எதிர்பார்க்கின்ற பாலின சமத்துவம் எமது தேசங்களில் மெல்ல மெல்ல உருவாக ஆரம்பித்திருக்கின்றன.

பெண்களுக்கான பாதுகாப்பு

பெண்களுக்கான பாதுகாப்பு என்பது அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆண்கள், பெண்கள் தொடர்பான நன்மதிப்பை கடைப்பிடித்தால் இது தொடர்பான குற்றங்கள் குறையும் அது போலவே பெண்களும் தமக்கான விழுமியங்களில் நின்று ஒழுகுவது சிறப்பானதாக இருக்கும்.

இன்றைய சமூகத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றவர்கள் அதிகமாக இருப்பதனால் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவடைய மறைமுகமான காரணமாக உள்ளது.

பெண்களுக்கான முன்னேற்றமும் சமூகவளர்ச்சியும்

பெண்கள் முன்னேற்றப் பாதையில் வந்து கல்வியில் வளர்ச்சி பெறுவதனால் சமூகத்தில் இடம்பெறும் குற்றங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரம் பெறுவதனால் சமூக குற்றங்கள் தடுக்கப்பட்டு அந்த சமுதாயமும் வெற்றிகரமாக அமையும்.

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே சம்பாதித்தனர் ஆனால் இன்று பெண்களும் சமனாக வருமானம் ஈட்டுவதனால் பொருளாதாரம் மற்றும் உழைப்பாளர் தொகை என்பன உயர்வடைகின்றது.

இது ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் மேம்படுத்த உதவும். முற்று முழுதாக சமூக வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

முடிவுரை

உலகத்தின் தலைசிறந்த நாடுகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் மற்றும் வளவாய்ப்புக்கள் சுதந்திரம், பாதுகாப்பு என்பன தொடர்பாக அதிகம் கவனம் எடுக்கின்றன.

இந்த நாடுகளின் வளர்ச்சியில் பெண்கள் பெரும்பங்காற்றுகின்றனர். உலகளவில் நாடுகளிளுடைய அரசியல் தலைவர்களாகவும் நிர்வாக தலைவர்களாகவும் பெண்கள் மாறியிருக்கின்றனர்.

இவ்வாறான வளர்ச்சி ஆண்களின் சுமையை வெகுவாக குறைத்து ஒரு ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இவற்றை எமது தேசமும் உள்வாங்கி பெண்களை பாதுகாக்கவும் வளர்ச்சியடைய செய்யவும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாகும்.

You May Also Like:

பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்

எனது கனவு பள்ளி கட்டுரை