நெகிழியின் தீமைகள் கட்டுரை

Nehili Theemaigal Katturai In Tamil

இந்த பதிவில் “நெகிழியின் தீமைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இந்த நெகிழியை பயன்படுத்தாமல் வாழ முடியாதா?

உக்கும் தன்மை இல்லாத இந்த நெகிழி நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தி இயற்கையின் சமநிலையை சீர்குலைகின்றது.

  • நெகிழியின் தீமைகள்
  • Nehili Theemaigal Katturai In Tamil
மரம் வளர்ப்போம் கட்டுரை

நெகிழியின் தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நெகிழியின் உருவாக்கம்
  3. நெகிழி ஏன் அதிகம் பயன்பாட்டில் உள்ளது
  4. நெகிழியின் தீமைகள்
  5. நெகிழியைக் கட்டுப்படுத்தும் மாற்று வழிகள்
  6. முடிவுரை

முன்னுரை

மனிதனுடைய அறிவியல் வளர்ச்சியின் விளைவாக புதிய புதிய பல கண்டுபிடிப்புக்கள் உருவாகி கொண்டுதான் இருக்கின்றன.

அவை மனிதனுக்கு நன்மை அழிப்பதும் வேலைகளை இலகுவாக்குவதும் ஒரு புறம் இருக்க அவை மிக பாரிய சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதை யாரும் அறிவதில்லை.

பூமியில் நுண்ணங்கிகள் எனும் பிரிகையாக்கிகள் எல்லாவிதமான பொருட்களையும் உக்கி மண்ணோடு மண்ணாக்கி விடுவதனால் தான் எமது உலகம் இன்னமும் சுத்தமானதாக இருக்கிறது.

இக்கட்டுரையில் நெகிழியின் உருவாக்கம், இதன் பாதிப்புக்கள், இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பன தொடர்பாக இக்கட்டுரை நோக்குகிறது.

நெகிழியின் உருவாக்கம்

வருடமொன்றுக்கு உலகளவில் 80 மில்லியன் தொன் பொலித்தீன் ஆனது உற்பத்தி செய்யப்படுகிறது. இது பாரமற்ற இரசாயனப் பதார்த்தம் இது பிரிகையாக்கிகளால் உக்கலடையாது.

நெகிழியின் மூலம் கொள்கலன்கள், வாகன உதிரிபாகங்கள், பொதியிடும் பைகள், குளிர்பான போத்தல்கள், உபகரணங்கள் போன்றன உருவாக்கப்பட்டு மக்கள் பாவனையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனுடைய மலிவான கிடைப்பனவும் சந்தை வாய்ப்பும் மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபல்யம் பெற்றுவிட்டது.

இதற்கு முன்னர் எமது மக்கள் உக்க கூடிய தாவர குழைமங்களையும் உலோகங்களையும் பயன்படுத்தியே பொதியிடல் மற்றும் தேவைகளை நிறைவேற்றினர். இது மண்ணுக்கும் மக்களுக்கும் நலன் தருவதாக இருந்தது.

நெகிழி ஏன் அதிகம் பயன்பாட்டில் உள்ளது

18ம் நூற்றாண்டின் பின்பு மக்கள் தொகை பலமடங்காக அதிகரிக்க துவங்கியது. கைத்தொழிற்புரட்சியின் விளைவாக உலகமெங்கும் உணவு உற்பத்தி, விவசாயம், வர்த்தகம் என உற்பத்திகள் உச்சம் தொட ஆரம்பித்தன.

மக்கள் அதிகம் நாகரீக மோகத்தில் மூழ்க ஆரம்பித்தனர். நாகரீகங்களை வரவேற்க துவங்கிய மக்களுக்கு நெகிழி ஒன்றும் விதிவிலக்கல்ல.

பொருட்களை அதிகம் கொள்வனவு செய்ய முடிவதால் மக்களின் விருப்பத்துக்குரிய தெரிவாக இது மாறியது.

விரும்பியோ விரும்பாமலோ நெகிழியை பாவிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் எனும் அளவிற்கு இதன் பாவனை இன்று மக்களை ஆக்கிரமித்துள்ளது.

தீமைகள்

இன்றைக்கு நாம் வாழும் சூழலில் எண்ணிலடங்காத மாசடைவுகளுக்கு நெகிழி ஒரு முக்கியமான காரணமாகும்.

நெகிழி மக்காத குப்பை ஆகையால் மக்களால் பாவித்து விட்டு தூக்கி வீசப்படும் ஒவ்வொரு நெகிழியும் மண்ணை மலடாக்குகின்றது. அழகான நதிகளின் அழகை சிதைக்கிறது. அங்கு வாழும் உயிரினங்களையும் சுவாசிக்கவிடாது செய்கிறது.

இந்தியாவின் கங்கை நதியில் நெகிழி மாசடைவுகளால் ஓட்சிசன் அளவு நதியில் குறைந்து அங்கு நீர்வாழ் உயிரிகள் பல அழிந்துள்ளன.

இந்தியாவில் பல நீர்நிலைகள் நெகிழிப் பொருட்களால் நிறைந்துள்ளன. சென்னை மாநகரத்தின் கூவம் ஆறு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. எத்தனை அழகான இயற்கை பொலிவிழந்து போக நெகிழியே காரணமாகும்.

பொலித்தீன் தாள் மண்ணில் சேர்வதால் அது பல ஆயிரம் ஆண்டுகள் உக்காது காணப்படும். மற்றும் நீரை மண்ணுக்கு ஊடுபுக விடாது இதனால் வரட்சி போன்ற நிலைகளும் உருவாகின்றது.

இவ்வாறு நெகிழி பாவனையால் பலவிதமான சூழல் பாதிப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படையான உண்மையாகும்.

நெகிழியை கட்டுப்படுத்தும் வழிகள்

நெகிழியை உருவாக்கி அதனை பாவித்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் சிந்தித்தால் நெகிழியைக் கட்டுப்படுத்த முடியும்.

முதலாவது விடயம் நெகிழியை முற்றாக தடை செய்யவேண்டும். இதற்கு மாற்றீடாக உக்க கூடிய தாவர குழைமங்களால் உருவாகும் பொருட்களை பயன்படுத்த முடியும்.

உணவு பொருட்களை உண்ண மூங்கில், கரும்பு தாழ்களால் ஆன தட்டுக்கள், வாழை இலை போன்றன ஆரோக்கியமானவையாகும்.

மற்றும் நெகிழி பொருட்களில் இலகுவில் உக்கல் அடையக் கூடிய நெகிழியை உருவாக்கலாம். இல்லாதுவிடின் நெகிழியை மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியும்.

பாவிக்கின்ற நெகிழியை சரியான முறையில் கழிவகற்றல், மீள்சுழற்சி செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதும் நெகிழி தொடர்பான பாதிப்புக்களை கட்டுப்படுத்தும் முறைகளாகும்.

முடிவுரை

பூமியினுடைய அழகை சிதைக்கின்ற இந்த நெகிழியின் பாவனையை இழிவளவாக்குவது அனைவருக்கும் நன்மை பயப்பதாகும்.

பொலித்தீன் பாவனையானது நாளாக நாளாக உயர்வடைந்து செல்வதனால் மாசாக்கமும் உயர்வடைந்தே செல்கின்றது.

இங்கே எம்முடைய இயற்கை மூலப்பொருட்கள் ஏராளமாக கிடைக்கின்றன அவற்றினை பயன்படுத்தி பாதிப்பற்ற வாழ்க்கை முறையினை உருவாக்க முடியும்.

ஆதலால் நாமும் பொலித்தீன் பொருட்கள் பாவனையை குறைத்துக் கொள்ள வேண்டும். மாற்றங்கள் மகத்தானவையாக மாற இன்றே முயற்சிப்போம்.

You May Also Like :

உலக வெப்பமயமாதல் கட்டுரை

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை