பிரண்டை துவையல் செய்வது எப்படி

pirandai thuvaiyal seivathu eppadi in tamil

இன்றைய காலத்தில் வேலைச்சுமை காரணமாக ஆரோக்கியமான உணவுகளை சமைத்து உண்ண மறந்து விட்டோம். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அதிகம் துரித உணவுகளை உட்கொள்கிறோம்.

ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவை முடிந்தளவு உட்கொள்வதே சிறந்தது. அந்த வகையில் மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை துவையல் வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நன்று.

இப்போது ஆரோக்கியம் மிக்க பிரண்டை துவையல் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்

  • பிரண்டை – ஒரு கப்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கடலைப்பருப்பு – ¼ டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – ¼ டீஸ்பூன்
  • மல்லி – 1 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் – ¼ டீஸ்பூன்
  • வரமிளகாய் – 12
  • சின்ன வெங்காயம் – 15
  • இஞ்சி – சிறிதளவு
  • புளி – எலுமிச்சை பழ அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • தேங்காய் – தேவையான அளவு

பிரண்டை துவையல் செய்முறை

முதலில் பிரண்டையை சுத்தம் செய்ய வேண்டும். பிரண்டையை உடைத்து எடுக்கும் போது அதில் கூடவே நாரை உரித்து எடுத்துக் கொள்ளவும். அவரைக்காயை உரித்து எடுப்பது போல் பிரண்டையை உரித்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் பிரண்டையைச் சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் பிரண்டை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கியதும் ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

சிறிது வதங்கியதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்து புளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கூடவே உப்பு சேர்த்தும் நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கிளறி விடவும். பின்னர் கால் மூடி தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

அடுத்து இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறவைக்கவும். ஆறியதும் வதக்கிய பிரண்டையை அதனுடன் சேர்த்து ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விட்டுப் பரிமாறவும்.

இப்போது சுவையான பிரண்டை துவையல் ரெடி!!!

Read more: அதிரசம் செய்வது எப்படி