அதிரசம் செய்வது எப்படி

adhirasam seivathu eppadi in tamil

தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகையைச் சேர்ந்தது தான் அதிரசம். இது தீபாவளி ஸ்பெஷல் இனிப்பாகவும் செய்யப்படுவதுண்டு. சிறியவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள். அதிரசத்தை எப்படி சுவையாக பாரம்பரிய முறைப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்

  • பச்சை அரிசி – ½ கிலோகிராம்
  • மண்டை வெல்லம் – ½ கிலோகிராம்
  • சுக்குப்பொடி – ½ டீஸ்பூன்
  • ஏலக்காய்ப் பொடி – ¼ டீஸ்பூன்
  • சோடா மா – ¼ டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

அதிரசம் செய்முறை

முதலில் பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் அதை சுத்தம் செய்து ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் அரிசியை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

மா சலிக்கும் சல்லடையில் இருக்கும் ஓட்டையை விட சிறிது அதிகமாக இருக்கும் சல்லடையில் மாவை அரித்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து அதில் அரை கிலோகிராம் வெல்லத்தை சேர்த்து கூடவே கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

மண்டை வெல்லம் கரைந்து நுரை பொங்கி வரும் போது சுக்குப் பொடி சேர்த்து கூடவே ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.

பாகை 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை ஆப் செய்யவும்.

பின்னர் முன்பு அரைத்து வைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் தயாரித்த மண்ட வெல்லப் பாகை கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து கலந்து விடவும். கொதிக்க கொதிக்க வெள்ளம் சேர்ப்பதால் கரண்டியால் அல்லது குச்சியால் கலந்து கொள்ளவும்.

பின்னர் சோடா மாவு சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு ஒரு நாள் வரை மூடி வைக்கவும்.

ஒரு நாளின் பின்னர் திறந்து மாவை கைகளால் பிசைந்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்துக் கொள்ளவும். பின் அதில் அதிரசம் வேகும் அளவு எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் கொதித்ததும் தயாரித்து வைத்த மாவை உருட்டி தட்டையாக்கி பின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

இவ்வாறு ஒவ்வொன்றாக பொரித்து எடுத்து ஒரு தட்டில் மாற்றிப் பரிமாறவும். இப்போது சுவையான அதிரசம் ரெடி!!!

Read more: சென்னா மசாலா செய்வது எப்படி