“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்கின்றார் வள்ளுவர். அதாவது எந்த கருத்தாக இருந்தாலும் அந்தக் கருத்தை யாரிடமிருந்து கேட்டாலும் மேலோட்டமாகப் பார்த்து முடிவு செய்யாமல் ஆழ்ந்து சிந்தித்து அதற்கான காரணங்களை கண்டறிந்து அதன் உண்மைப் பொருளைக் காண வேண்டுமென வள்ளுவர் கூறியுள்ளார்.
பகுத்தறிவே மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. இதுவே மனிதனுக்கு ஜீவநாடி உயிர் நாடி ஆகும். இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்று பொருள்.
மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவுடையவனாக இருக்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவனாகின்றான். பகுத்தறிவே மனித வாழ்வை உயர்த்தும்.
ஒரு செயலை செய்வதற்கு முன்பு அந்த செயலால் ஏற்படக்கூடிய நன்மைகள், தீமைகளை முன்னரே அறிந்து கொள்வதற்காக உதவுவது தான் ஆறாவது அறிவு என்னும் பகுத்தறிவு ஆகும்.
ஒரு செயலை செய்வதற்கு முன்பு அந்த செயலால் ஏற்படக்கூடிய நன்மைகள், தீமைகளை ஆராய்ந்து நன்மையை மட்டும் செய்ய வேண்டும்.
பகுத்தறிவு என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டாது. எல்லோரிடத்திலும் இருக்கமாட்டாது என்பதனை புரிந்து கொள்வது அவசியம். ஆனால் பகுத்தறிவுள்ள மக்களால் எந்த ஒரு இடத்திலும் வாழ்ந்து விட முடியும்.
வாழ்வில் பிரச்சனைகளை சரிசெய்து வாழ இவர்களால் முடியும். சுயநலம் இல்லாது எவன் ஒருவரின் செயல் அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்துகின்றரோ அவரே ஆறாம் அறிவு முழுமை பெற்றவராகின்றார்.
எனவே சிந்தனையே அறிவு அதுவே மனித வாழ்வை உயர்த்தும் என்பதனை உணர்ந்து எதையும் ஆராய்ந்து பகுத்தறிவுடன் செயற்படுவதே சிறந்ததாகும்.
Table of Contents
பகுத்தறிவு என்றால் என்ன
பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளக்கும் நுண்ணறிவு ஆகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும்.
மேலும், ஒரு கருத்து உண்மையோ, பொய்யோ அல்லது நல்லது, கெட்டது அல்லது பயனுள்ளது, பயனற்றது அல்லது தேவையானது, தேவையற்றது என அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
மேலும் எந்த காரியத்தை செய்வதற்கு முன்பும் அது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதா? இது நடைமுறைக்கு ஒத்து வருமா? செயற்பாட்டில் இருக்கின்றதா? (செய்வதற்குரிய காரியம்) உண்மையானதா? என நமது சொந்த அறிவைக் கொண்டு சிந்தித்தலே பகுத்தறிவு ஆகும்.
பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவதே ஆகும்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு வாழ்வியல் சிந்தனைகள்
- மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
- கல்வியறிவும், எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- எந்த மனிதனும் எவனுக்கும் மேலானவனல்ல. அதுபோல் எவனும் எவனுக்கும் கீழானவனும் அல்ல.
- மானமுள்ள நூறு பேருடன் போராடலாம் மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
- ஒரு மதத்தை குறை சொல்லும் ஒருவனை விட அயோக்கியன் எவனும் இருக்கமாட்டான்.
- விதியை நம்பி மதியை இழக்காதே.
- யார் சொல்லியிருந்தாலும் எங்கு சொல்லியிருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
Read more: மேன்மை என்றால் என்ன