மேன்மை என்றால் என்ன

மேன்மை என்பதன் பொருள்

மனித வாழ்வில் மேன்மை என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. நிலையில்லா செல்வத்தையும், உடம்பையும் கொண்டு, நிலையான புகழைப் பெற்று மேன்மையுடன் வாழ்வதே வாழ்க்கைக்கு அர்த்தமாகும்.

ஒழுக்கத்தில் மேன்மையடையும் போது நன்மதிப்பைப் பெற முடியும். கல்வியில் மேன்மையடையும் போது புகழைப் பெற முடியும். பதவியில் மேன்மையடையும் போது உயர்வைப் பெற முடியும்.

இவ்வாறாக வாழ்வில் எல்லா நிலைகளிலும் சிறப்புப் பெற்று வாழ்வதன் மூலம் முழு வாழ்வுமே மேன்மையுடையதாக அமையும்.

மேன்மை என்றால் என்ன

மேன்மை என்றால் சிறப்பு, உயர்வு எனப் பொருள் கொள்ளலாம்.

மேன்மை என்பதன் பொருள்

  • பெருமை
  • சிறப்பு
  • கண்ணியம்
  • உயர்வு

ஒழுக்கத்தின் மேன்மை

“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” அதாவது ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள், ஒழுக்கம் இல்லாதவர் அடையத் தகாத பழியை அடைவார்கள் என்கின்றார் வள்ளுவர்.

ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் மேன்மை தரும். மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது ஒழுக்கமே. எண்ணத்தாலும், செயலாலும் தூய்மையாக நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

இந்த ஒழுக்கமே மனிதனை மனிதனாகவும், தெய்வமாகவும் உயர்த்தும். ஒழுக்கம் உயிரினும் மேலானதாக கருதப்படுகின்றது.

சினம், பொறாமை, தீய சொற்கள், பிறர் பொருட்களுக்கு ஆசைப்படுதல் போன்ற தீய பழக்கங்களை நீக்கி ஒழுக்கத்துடன் வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

நம்மை நாமே மேன்மைப்படுத்துவதன் அவசியம்

நம்மை மேன்மைப்படுத்துவதற்கு முதலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய விடயம் மனதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கடந்தகால கசப்பான விடயங்கள், கோபம், வெறுப்பு, பொறாமை, வஞ்சம் போன்ற தீயவைகளையும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையையும் விட்டுவிடுதல் வேண்டும்.

அப்போதுதான் மனது தூய்மை அடையும். நிகழ்காலத்தை அனுபவித்துக் கொண்டு பல புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளும் போது நம்மை நாமே மேன்மைப்படுத்த முடியும்.

மறைபொருட்கள் எனும் மனம், உயிர், அறிவு, தெய்வம் என்ற நான்கு நிலைகளை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து தன்னில் அமைதி பெற்று அந்த அமைதி உலக அமைதியாக மாற அனைவரும் முயற்சி செய்தல் வேண்டும்.

மௌன நோன்பினைக் கடைப்பிடிப்பதன் மூலம் நம்மை நாமே மேன்மைப்படுத்திக் கொள்ளலாம். உலகில் பல மொழிகள் உள்ளன. இவற்றுள் முதன்மையாக மௌனம் உள்ளது.

மௌனத்தில் இருந்து பிறந்த சப்தம் அல்லது ஒலி தான் வார்த்தைகளாக, சொற்களாக உலகம் முழுவதிலும் பேசப்படுவதனை நாம் காண்கின்றோம்.

மனித குலத்திலுள்ள மொழிகளைக் கடந்து மனிதனது மனம் லயமாகி நின்றால் தன்னிலே இருக்கக் கூடிய அழுத்தமான, தேவையற்ற விடயங்களை எல்லாம் விலக்கிக் கொண்டு மனதை ஓர் தூய்மையான நிலையிலே வைத்திருக்க முடியும்.

எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் நல்ல விளைவுகளை நமக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும். இது மௌன நோன்பின் மிகச் சிறந்த ஓர் பலனாக உள்ளது.

இன்று உலகம் முழுவதிலும் பல பிரச்சினைகள் குடும்பத்திலும்இ சமுதாயத்திலும் உள்ளன. இதனால் பல விளைவுகளைக் கொண்டு வருகின்றது

இது மனதினைப் பாதிப்படையச் செய்து, உடலில் பல நோய்களைக் கொண்டு வருகின்றது. அதன் காரணம் மனதைச் சரியான நிலையில் நிறுத்தத் தெரியாமையே ஆகும்.

எது எமக்குத் தேவை, எது தேவையில்லாதது, எந்த எண்ணம் எம்மை உயர்த்தும், எந்த எண்ணம் எம்மைப் பாதிக்கும் என்பதனை நாம் அறிந்து கொள்ளாத வரையில் நல்ல நிலையில் இருந்து வாழ்வை வாழ முடியாது.

Read more: தனிமனித ஒழுக்கம் கட்டுரை

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை