தண்ணீர் பற்றிய கட்டுரை

Thanneer Patri Katturai In Tamil

இந்த பதிவில் உலகின் அடிநாதமான “தண்ணீர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தண்ணீர் எல்லோருக்கும் உயிர்நீர் என்பதை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தண்ணீர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தண்ணீரின் முக்கியத்துவம்
  3. தண்ணீரும் தமிழர் வாழ்வியலும்
  4. தண்ணீர்ப் பற்றாக்குறை
  5. நீரைச் சேகரிக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மனித வாழ்க்கைக்கு மட்டுமன்றி அனைத்து உயிரின வாழ்க்கைக்கு தண்ணீர் ஆதாரம் ஆகின்றது. இதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் “நீரின்றி அமையாது உலகு” என நீரின் முக்கியத்துவத்தை தெளிவாக உலகுக்கு எடுத்துரைத்துள்ளார்.

தண்ணீர் என்பது வெறும் நீரல்ல.. அது நாகரிகம், பண்பாடு சம்பந்தப்பட்டது. உலக நாகரீகங்கள் எல்லாம், நீர் நிலை ஓரத்தில் தான் தோன்றியது. இக்கட்டுரையில் தண்ணீர் பற்றி நோக்கலாம்.

தண்ணீரின் முக்கியத்துவம்

நிறம், மணம், குணம் இவை எதுவுமற்ற அரிதான இயற்கை வளமான நீரானது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கின்றது.

மனித உயிர் வாழ்க்கைக்கு நீர் முக்கியம். சாதாரணமாக ஒரு மனிதன் நீரின்றி 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். நீரே மனிதவாழ்வின் அடிநாதம் ஆகும்.

இவ்வுலகில் மரம், செடி, கொடி போன்ற இயற்கைத் தாவரங்கள் செழிப்பாக வளரவும் விலங்குகளின் உயிர் வாழ்க்கைக்கும் நீரானது முக்கியத்துவமாகின்றது.

தண்ணீரும் தமிழர் வாழ்வியலும்

கால்நடைக்கும், கதிரவனுக்கும் பொங்கல் விழா எடுத்தது போல், நீருக்கும் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் நமது முன்னோர்கள்.

“காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொறுணை நதி” என்றார் பாரதி.

காவிரி மட்டுமல்லாமல் எல்லா நதிகளும் வற்றாத ஜீவநதிகளாய் ஓடி, தமிழர் வாழ்வில் வளம் சேர்த்தன. வான் வழங்கிய மழையைக் கூட மதித்தவர்கள் நம் தமிழர்கள்.

தண்ணீர்ப் பற்றாக்குறை

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தண்ணீரின் தேவையானது, அவ்விடத்தில் இருக்கும் தண்ணீரின் அளவினைவிட அதிகரிக்கும் போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

உலகில் பல பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் மோசமான தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர் தண்ணீர் பஞ்சம் காரணமாக பல கோடி மக்கள் குடிபெயர்ந்தும் உள்ளனர்.

உலக அளவில் தண்ணீர் பிரச்சனையின் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் பிரச்சினையும் பாரிய பிரச்சனையாக எழுந்துள்ளது.

இந்தியா, தன் 40 சதவீத தண்ணீர் தேவைக்காக, நிலத்தடி நீரை நம்பி இருக்கிறது. இந்நிலையில் கிணறுகளில் ஆண்டுக்கு 5 அடி வேகத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.

நீரைச் சேகரிக்கும் வழிமுறைகள்

ஒவ்வொரு வீட்டிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.

மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், தடுப்பணைகள் அமைத்தல் போன்றவற்றின் மூலம் மழைநீரினால் உண்டாகும் மேற்பரப்பு நீரினைக் கொண்டு நிலத்தடி நீரினை செறிவூட்ட வேண்டும்.

நீரினை நவீன அறிவியல் முறையின் மூலம் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். வேளாண்மைக்கு நீரினை பயன்படுத்தம் போது முறையான பாசன முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தண்ணீர் எல்லோருக்கும் உயிர்நீர் என்பதை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

முடிவுரை

தண்ணீர் நம் உயிரை போல அவசியமானது. ஆனால் தண்ணீரை முறையற்ற பாவனைகளால் வீண் செலவு செய்கின்றோம்.

தண்ணீர் செலவினத்தை குறைத்து, மனிதன், பறவை, விலங்கு என பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நீர்வளத்தை அழிவிலிருந்து பாதுகாத்து வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்.

You May Also Like :
நீர் வளத்தை பாதுகாப்போம் கட்டுரை
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை