இந்த பதிவில் “நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.
ஆசிரியர்களை காணும் போதெல்லாம் ஏற்படும் ஆசைகளின் கற்பனையே இந்த கட்டுரை.
Table of Contents
நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை – 1
என்னுடைய வகுப்பாசிரியரை காணும்போதெல்லாம் அவரைப் போல சிறந்தவொரு ஆசிரியராக வரவேண்டும் என்கின்ற ஆர்வம் எனக்குள் எழுவதுண்டு. நான் ஒரு ஆசிரியரனால் சிறந்த கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் மாணவர்களிற்கு கற்றுத் தருவேன்.
மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களை எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக உருவாக்க அயராது உழைப்பேன். அவர்கள் தவறு செய்யும் போது தண்டிக்காது, இனிமையாக எடுத்துக் கூறி சிறந்த நற்பழக்கங்கள் உள்ள மாணவர்களாக மாற்றுவேன்.
கடினமான பாடங்களை இலகுவாக அனைவருக்கும் விளங்கும் வகையில் கற்றுத்தந்து, கல்வியில் சிறந்து விளங்க மாணவர்களை ஊக்குவிப்பேன். மாணவர்களின் ஆற்றல்களை இனங்கண்டு, அவற்றில் சிறந்து விளங்க உறுதுணையாக இருப்பேன்.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். எனவே நான் ஒரு ஆசிரியரானால் சிறுவர்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாக மாற்ற அயராது உழைப்பேன். தன்னலனை பாராது, மாணவர்களது நலனில் மட்டும் அக்கறை செலுத்தும் பரந்துபட்ட சிந்தனையுடைய ஆசிரியராக விளங்குவேன்.
அனைத்து மாணவர்களாலும் நேசிக்கப்படும் சிறந்த ஆசானாக விளங்குவதோடு, அனைத்து மாணவர்களும் முன்னுதாரணமாகக் கொள்ளும் சிறந்த சமூக பிரஜையாக நடந்துகொள்வேன்.
சமூகத்தில் ஆசிரியருக்குள்ள கடமைகளை உணர்ந்து, பொறுப்புமிக்க ஆசிரியாரக பணியாற்றி, மாணவர்களை ஊக்கப்படுத்தி அரவணைக்கும் கருணைமிக்க ஆசானாக சமூகத்தில் உயர்ந்து விளங்குவேன்.
நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை – 2
சேவைகளுள் சிறந்த சேவை ஆசிரிய சேவையே ஆகும். நான் ஒரு ஆசிரியரானால் இந்த நாட்டிற்கும், என் சமூகத்திற்கும் அரிய பல சேவைகள் புரிந்திடுவேன்.
கல்வியே ஒருவரிற்கு அளிவில்லாத செல்வமாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்விச் செல்வத்தை மாணவர்களிற்கு அள்ளி வழங்கிடுவேன். மாணவர்களின் பாடங்கள் மீதான சந்தேகங்களை கேட்டறிந்து அவற்றை இன்முகத்துடன் ஐயம் திரிபுற எடுத்துரைப்பேன்.
கோபத்துடன் அவர்களை அணுகாது எப்போதும் அன்பாக நடந்து கொள்வேன். ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாய் விளங்குவேன்.
நற்பழக்கவழக்கங்களை அள்ளி வழங்கும் இடமாக பாடசாலை விளங்குகின்றது. எனவே அதற்கேற்றாற் போல மாணவர்களிற்கு நல்ல பல பழக்கங்களை கற்று கொடுத்து, அவர்கள் சிறந்த ஒரு மனிதனாக இச் சமூகத்தில் வாழ வழி சமைப்பேன்.
உயிர்களிடத்தே இரக்கம் காட்டுதல், உண்மை பேசுதல், பெரியோரை மதித்தல், பொறாமை கொள்ளாமை, அமைதி பேணல் போன்ற உயரிய பண்புகளை மாணவர்கள் பின்பற்ற கற்றுத் தருவேன். ஏற்றத் தாழ்வின்றி அனைவரையும் சமமாக மதித்து அன்பு செய்ய அவர்களை ஊக்குவிப்பேன்.
தவறுகள் செய்வது மனித இயல்பு. மாணவர்கள் தவறும் போது அவற்றை தன்மையாக எடுத்துக் கூறி அதனை திருத்திக் கொள்ள வாய்ப்பளிப்பேன். தாம் தவறு செய்யும் போது மன்னிப்பை வேண்ட அவர்களிற்கு கற்றுத்தருவேன் இவ்வுயரிய பண்பு அவர்களை சமூகத்தில் வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும்.
நான் ஒரு ஆசிரியரானால் எமது கலாச்சாரத்தையும் வாழ்வியல் பண்பாடுகளையும் மாணவர்களிற்கு கற்றுத் தருவேன். அனைத்து சிறப்பம்சங்களும் பொருந்தியவர்களாக மாணவர்களை வளர்த்தெடுத்து, சமூக அக்கறையுடன் பணி செய்து ஆசிரியப் பணியை பெருமைப்படுத்திடுவேன்.
You May Also Like :