அன்னாபிஷேகம் என்றால் என்ன

அன்னாபிஷேகம்

தாயின் அன்பினை உணர்த்தும் விடயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும், உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகின்றது.

சிலர் சாப்பிடும்போது இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுத்துவதுண்டு.

“அன்னையோடு அருஞ்சுவை உண்டிப்போம்” என்று அருஞ்சுவை உணவிற்கும், அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் சித்தர் குறிப்பிடுகின்றார். எனவேதான் அம்மை, அப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றோம்.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி நீரில் மூழ்கி தீயால் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமானது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையாகும்.

அன்னாபிஷேகத்தின் போது இறைவனை முழுவதும் தழுவிக் கொள்கின்றது. அவனிடம் அடைக்கலம் கொள்கின்றன. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் கடவுளிடம் அடைக்கம் என்பதும் இவற்றின் உள்ளிருந்து இயக்கும் கடவுளே பரம்பொருள் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும் இறையருளைப் பெற எளிய வழியாக இருப்பது அன்னதானமாகும். “தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்” என்ற பழமொழி இதனால்தான் கூறப்படுகின்றது.

பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. ஆனால் ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால்போதும் என்ற சொல் மன நிறைவோடு எழுவது உண்ணும் போது மட்டும்தான் என்றால் அதுமிகையல்ல.

அன்னாபிஷேகம் என்றால் என்ன

இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள் ஆகும். அன்னத்தைச் சிவலிங்கம் முழுவதும் காப்பாகப் படைப்பர். இதுவே அன்னாபிஷேகம் என்பார்கள். ஒரு சில இடத்தில் இது அன்னக்காப்பு என்றும் அழைக்கப்படுவது உண்டு.

சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று உச்சிகாலப் பூஜையின் போது அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடத்தபடுகிறது.

அன்னாபிஷேகத்தின் பயன்கள்

இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தை கலைந்து அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம் போல செய்து பூஜை செய்வார்கள். அதனை எடுத்துக் கொண்டு போய் ஊரிலுள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல்கள் அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை.

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு அடுத்த அன்னாபிஷேகம் வரை உணவுக்கு பஞ்சம் இருக்காது.

பலருக்கு செல்வ செழிப்பு இருந்தாலும், உணவைக் கண்டால் வெறுப்பாக இருக்கும் அல்லது சாப்பிட பிடிக்காது இதை அன்ன திவேஷம் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து அன்னத்தை எவ்வித வியாபார நோக்கிலும் இல்லாமல் ஏழை மக்களுக்கு தானம் செய்து வந்தால் அன்ன திவேஷம் விலகும்.

சிவலிங்கத் திருமேனியில் இருக்கும் அன்னத்தை உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கூறப்படுகின்றது. வாழ்வுள்ள வரையில் அன்னத்திற்குப் பஞ்சம் நமக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் அன்னாபிஷேகத்தில் கலந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

Read more: பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்

சனி பகவான் வழிபடும் முறை