சிறுகதை என்றால் என்ன

sirukathai enral enna in tamil

சிறுகதையின் தந்தை என போற்றப்படுபவர் – வே. சு. ஐயர் (வ. வே. சுப்பிரமணிய ஐயர்)

மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவான போதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது.

காலங்காலமாக கதை கேட்பதும் கதை சொல்வதும் எல்லா தேசங்களிலும் எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வருகின்றது. பல கதைகள் தேச எல்லைகள் கடந்து உலகப் பொதுக் கதையாகவும் பேசப்படுகிறது.

நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இனக் குழுக்களாக வாழ்ந்து வந்த போது தமிழர்கள் ஓய்வு நேரங்களில் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடனும் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதை “தொல்காப்பியர்” ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ என்று உரைப்பார்.

பொதுவாக கதை என்பதை அதன் நீளத்தைப் பொறுத்து மூன்று விதமாக பிரிக்கலாம். அதாவது

  1. சிறு கதைகள்
  2. குறுநாவல்கள்
  3. நெடுங்கதைகள்

என மூன்றாகப் பிரிக்கலாம்.

நவீன சிறுகதைகளின் உள்ளடக்கத்தைச் சீர்தூக்கிப் பார்த்து அவற்றை, “நல்ல கதைகள்” என்றும் “நச்சுக் கதைகள்” என்றும் “பொழுதுபோக்குக் கதைகள்” என்றும் ஆய்வாளர்கள் தரம் பிரிப்பார்கள்.

சிறுகதை என்றால் என்ன

சிறுகதை என்பது சிறிதாக உரைநடையில் விபரிக்கப்பட்ட கதை ஆகும்.

மேலும் சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை என்றும் பொருள் கொள்ளலாம்.

சிறுகதை பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

சிறுகதைகள்

சிறு கதையானது அரை மணி முதல் இரண்டு மணி நேரத்துக்குள் படித்து முடிக்க கூடியது. குதிரைப் பந்தயத்தை போல தொடக்கமும், முடிவும் சுவை மிக்கனவாக இருத்தல் வேண்டும்.

புதினம் புளிய மரம் என்றால் சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாமி. சுருங்கச் சொல்லுதலும் சுருக்கச் சொல்லுவதும் இதன் உத்திகளாகும்.

இதனால் சிறுகதைகளின் நீண்ட வர்ணனைகளுக்கு இடமில்லை. கிளைக்கதைகளும் இங்கு இடம் வருவதில்லை.

சிறுகதையின் தனியொரு இலக்கியமாக கருதுகின்ற நோக்கினை அமெரிக்காவைச் சேர்ந்த “எட்கர் ஆலன் போ” தொடக்கி வைத்தார்.

அறிவியல் வளர்ச்சியும் பத்திரிகைகளின் பக்க பலமும் சிறுகதைகளின் வளர்ச்சிக்குத் துணை நின்றன.

சிறுகதையின் கருப்பொருள் வாழ்வியலில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளுமே சிறுகதைகளின் கருப்பொருளாக அமையலாம்.

வாழ்க்கையின் சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ ஏதாவது ஒரு அணுவின் சலனமோ இடம்பெற இடமுண்டு.

நவீன சிறுகதைகள்

வாய்மொழி மரபையும் ஆங்கில இலக்கியத்தின் வழியாகப் பெறப்பட்ட வடிவத்தையும் கொண்டு உருவானதுதான் நவீன சிறுகதை வடிவம். தமிழில் இவ்வடிவத்தின் முன்னோடியாக வ.வே.சு.ஐயரைக் குறிப்பிடலாம்.

அவரைத் தொடர்ந்து பி.எஸ்.இராமையை, கு.ப.இராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, பி.எம்.கண்ணன், இளங்கோவன், சிதம்பரசுப்பிரமணியன், மௌனி போன்றவர்கள் நவீன சிறுகதைகளுக்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.

1980-90களுக்குப் பிறகு படைப்பு சார்ந்தும், படைப்பு மொழி சார்ந்தும் தமிழ்ச் சிறுகதையில் பெரியமாற்றம் நிகழ்ந்தது.

அடித்தட்டு மக்களும், விளிம்புநிலை மக்களும், அவர்களுடைய மொழியும் இலக்கியமாக்கப்பட்டது.

தலித்தியம், பெண்ணியம் என்ற கோட்பாடுகளால் எழுச்சிபெற்று எழுந்த இலக்கியங்கள் தமிழ் சிறுகதைக்கு புதிய முகத்தைக் கொடுத்துள்ளது.

தற்காலத்தில் தமிழ்ச் சிறுகதை வடிவம் காட்டாறு வெள்ளம்போலப் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றால் அது மிகையல்ல.

Read more: தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

எனக்கு பிடித்த கதை கட்டுரை