கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை

kodikatha kumaran katturai in tamil

இந்த பதிவில் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த “கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இவரின் உயிர்த் தியாகம் சுதந்திர வேட்கையை கொழுந்துவிட்டு எரியச் செய்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. விடுதலைப் போராட்டத்தில் பங்கு
  4. கொடிகாத்த குமரன்
  5. நினைவகம்
  6. முடிவுரை

முன்னுரை

இந்தியாவின் தேசத்தந்தை காந்தியடிகள் சொல் கேட்டு தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்க சித்தமாய் இருந்தவர்கள் பலர் அவர்களில் திருப்பூர்க் குமரனும் ஒருவராவார்.

இந்திய நாட்டில் ஆங்கிலேயரின் சர்வாதிகார ஆட்சியை வேரோடு வெட்டியெறிய இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட திருப்பூர்க் குமரன் சுதந்திர வேட்கையில் தனி முத்திரை பதித்துள்ளார் என்றால் அதுமிகையல்ல.

பிறப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலையின் அருகிலுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் 1904 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி நாச்சிமுத்து, கருப்பாயி தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.

இவரது இயற்பெயர் குமாரசாமியாகும். குடும்ப வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் ஆரம்பக் கல்வியுடனேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார்.

நெசவுத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்கப் பெறாததால் திருப்பூருக்கு இடம் மாறினார். 1923 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் ராமாயி என்பவரைத் திருமணம் முடித்தார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கு

இளம் வயது முதலே நாட்டுப் பற்றுக் கொண்ட இவர் காந்தியடிகளின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவராவார். நாட்டு விடுதலைக்காக பல பங்களிப்பினைச் செய்துள்ளார்.

காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார். திருப்பூரில் நடைபெறும் அறப்போராட்டங்களில் கலந்து கொண்ட குமரன் பல போராட்டங்களுக்கு தலைமையும் தாங்கிச் செயற்பட்டார்.

தேசபக்திப் பாடல்களைப் பாடியபடி, அது தொடர்பான ஓரங்க நாடகங்களையும் நடத்தியபடி, திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்தில் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார். இதனால் பிரிட்டீஸ் அரசாங்கப் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

கொடிகாத்த குமரன்

1932 ஆம் ஆண்டு ஐனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தில் திருப்பூர்க் குமரன் கலந்து கொண்டார். அப்போது ஆங்கிலேய அரசின் காவல் துறையால் தடியடிக்கு உள்ளானார்.

தலையில் அடிபட்டு மண்ணில் சரிந்த போதும் அவர் தன் கையில் இருந்த அக்காலத்துச் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியினை விடாமல் உயர்த்திப் பிடித்தபடியே மண்ணில் விழுந்தார் தேசபக்தர் குமரன்.

இதனால்தான் கொடிகாத்த குமரன் என்று போற்றப்படுகின்றார். சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைக்காக கொடியினை ஏந்தி அடிபட்ட போதும் அதனை விடாமல் பாதுகாத்த திருப்பூர் குமரன் 1932 ஆம் ஆண்டு ஐனவரி 11ஆம் திகதி சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தார்.

நினைவகம்

கொடிகாத்த குமரனின் தியாகத்தைப் போற்றம் வகையில் திருப்பூரில் திருப்பூர்க் குமரன் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது 100 ஆவது பிறந்த தினத்தினைப் போற்றும் வகையில் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுரை

இவரின் உயிர்த் தியாகம் சுதந்திர வேட்கையை கொழுந்துவிட்டு எரியச் செய்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். திருப்பூர் மண்ணுக்குப் பெருமை சேர்த்தது மட்டுமல்லாது தமிழரக்கும் பெருமை சேர்த்த தியாகியாவார்.

வறுமையில் வாடினாலும் வெறுமை கொள்ளாமல் தேசப்பற்றே பெரிது தேசியம்தான் பெருமை என்று தேசக் கொடியை உயிராக நேசித்தவர்.

தேசத்தின் மானம் காக்க சுவாசித்த சுவாசத்தை தேசத்திற்குப் பரிசாகக் கொடுத்த தியாகச் செம்மலை என்றென்றும் போற்றுவோம்.

You May Also Like :
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு