குழந்தைகள் தினம் பற்றிய கட்டுரை

Kulanthaigal Dhinam Katturai In Tamil

இந்த பதிவில் குழந்தைகள் தினம் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிப்பவர்கள் இன்றைய குழந்தைகள் தான். இவர்களே நாளைய தலைவர்கள்.

குழந்தைகள் தினம் பற்றிய கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்
  3. நேருவும் குழந்தைகளும்
  4. குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
  5. பன்னாட்டு குழந்தைகள் நாள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகம் முழுவதும் ஏதோவொரு சிறப்பு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்ற வழக்கமுண்டு. இதில் மகிழ்வான நாட்களுமுண்டு துக்கமான நினைவுகளை நினைவு கூறும் நாட்களுமுண்டு. இதன் காரணம் குறித்த நாள் பற்றி மனிதர்கள் தெரிந்து கொள்வதற்காகவும்⸴ அதனை நினைவில் கொள்வதற்குமாகும்.

இவ்வாறே பாரத தேசத்திலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது. முன்னாள் பிரதமரும்⸴ இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்⸴ இந்தியாவின் ஒளி விளக்காகத் திகழ்ந்த மாந்தருள் மாணிக்கமுமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் திகதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

பாரத நாடெங்கும் ஆண்டு தோறும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் உலகை ஆளப் போகின்றவர்கள் குழந்தைகளே இவர்களைக் கொண்டாடி மகிழும் நாளான குழந்தைகள் தினம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்

வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுக்கான குழந்தைகள் தினம் உலகம் முழுவதிலும் நவம்பர் 20ஆம் நாள் சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. இருப்பினும் இந்தியாவில் நவம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

பிரதமர் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராவர். இதனாலேயே இவர் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்கக்கவும் இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகின்றது.

நேருவும் குழந்தைகளும்

முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அதிக அக்கறையும்⸴ அன்பும் கொண்டவர். குழந்தை வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

நேரு அவர்கள் குழந்தைகள் பற்றிக் கூறும் போது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை அளித்து அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகள் வழங்கும் போது தான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள் என்றார்.

நேருவின் மீது குழந்தைகளும் மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். அதனால் தான் அவரை “நேருமாமாˮ என அன்புடன் அழைக்கின்றனர்.

குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

பள்ளி மாணவ⸴ மாணவியர்கள் குழந்தைகள் தினத்தன்று தத்தமது பள்ளிக்கூடங்களில் விமர்சையாக கொண்டாடி மகிழ்வர்.

காலையில் தேசியக்கொடி ஏற்றி ஆரம்பிப்பர். தலைமை தாங்குதல்⸴ சொற்பொழிவாற்றல்⸴ கலை நிகழ்ச்சிகள் நடாத்துதல் முதலியன மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

இவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டியாகச் செயற்படுவார். அன்றைய தினம் அனைத்துக் குழந்தைகளும் மகிழ்வாக தமது நேரத்தை செலவழிப்பார்.

பன்னாட்டு குழந்தைகள் நாள்

பன்னாட்டு குழந்தைகள் நாளானது பல நாடுகளில் ஜூன் 1ம் திகதி கொண்டாடப்படுகின்றது. உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இலங்கையில் அக்டோபர் 1ம் திகதியும்⸴ ஆஸ்திரேலியாவில் ஒக்டோபர் 4ஆம் வாரத்திலும்⸴ பங்களாதேசில் மார்ச் 17ஆம் திகதியும்⸴ சீனாவில் ஜூன் 1ம் திகதியிலும்⸴ மத்திய ஆபிரிக்காவில் டிசம்பர் 25 ஆம் திகதியும் கொண்டாடப்படுகின்றது.

முடிவுரை

எதிர்கால சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆற்றல் பெற்றவர்கள் குழந்தைகளே எனவேதான் குழந்தைகள் தினம் நம் தேசத்தில் மிகுந்த மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பிறந்தநாளில் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கட்கும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது குழந்தைகளாகிய நாம் நேருவைப் போல் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தி அறிவாற்றலுடன் சிறந்து வாழ வேண்டும்.

You May Also Like :

குழந்தை தொழிலாளர் கட்டுரை

சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை

பெண் குழந்தை பாதுகாப்பு கட்டுரை