வல்லபாய் பட்டேல் பற்றிய கட்டுரை

Sardar Vallabhbhai Patel Katturai In Tamil

இந்த பதிவில் சுதந்திரத்திற்கு பிறகு சிதறி கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்த இரும்பு மனிதர் “சர்தார் வல்லபாய் பட்டேல் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பற்றிய கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆரம்ப வாழ்க்கை
  3. கல்வி
  4. பட்டேல் சிலை
  5. சர்தார் பட்டேலின் சிறப்பு
  6. முடிவுரை

முன்னுரை

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெயர் சொல்லக்கூடிய மாமனிதர்கள் பலர் உள்ளனர். இவர்களுள் வல்லபாய் பட்டேலும் ஒருவராவார்.

இந்தியா விடுதலை அடைந்தபோது நாடு முழுவதும் துண்டு துண்டாக மன்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைத்த பெருமை இவரையே சாரும்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதம அமைச்சராகவும்⸴ உள்துறை அமைச்சராகவும் கடமையாற்றிய பட்டேல் சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவை ஒருங்கிணைந்த இரும்பு மனிதனாவர். இவர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஆரம்ப வாழ்க்கை

“சர்தார் வல்லபாய் பட்டேல்” லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்திய குடும்பத்தில் பிறந்தார்.

அன்றைய பம்பாய் மாகாணத்தின் கோடா மாவட்டத்திலிருக்கும் நதியாத் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் தான் இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் இவர் பிறந்தார்.

தற்போது குஜராத்தில் ஒரு பகுதியாக இருக்கும் நதியாத் கிராமத்தில் 1885 ஒக்டோபர் 31ஆம் திகதி ஜாபேர்பாய் படேல் – லாட்பாய் தம்பதியினரின் நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் தந்தையுடன் வேலைக்கு சென்று விவசாயத்தில் ஒத்தாசை செய்வதும் வீட்டில் ஆடுமாடுகளை பார்த்துக்கொள்வதுமாயிருந்தார்.

கல்வி

ஆறு வயதில் பள்ளிக்கு சேர்க்கப்பட்ட இவர் ஆரம்பத்தில் தாய்மொழியான குஜராத்தில் கல்வி கற்றார். ஆரம்பக் கல்வியை முடித்த போது இவருக்கு வயது 13 ஆகும். இடைப்பட்ட காலத்தில் மாஸ்டர் கசந்தாஸ் என்பவரிடம் ஆங்கிலம் கற்றார். ஆரம்பக் கல்வி முடித்த மூன்றாம் ஆண்டில் திருமணமானது.

தனது 22வது வயதில் மெட்ரிக்குலேஷன் கல்வியில் தேர்ச்சி பெற்றார். வழக்கறிஞராக வேண்டும் எனத் தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் படிப்பினை கற்றார்.

தனது 30ஆவது வயதில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். குற்றவியல் சட்டங்களில் நிபுணராக அகமதாபாத்தில் தனது தொழிலை தொடங்கினார்.

பட்டேல் சிலை

சர்தார் வல்லபாய் பட்டேலின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட பட்டேலின் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இச்சிலையின் சிறப்பம்சமாக குஜராத்தில் நர்மதா அணை பக்கத்தில் 3.2Km தூரத்தில் அமைக்கப்பட்டது. இச்சிலை 2389 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட மூன்று மடங்கு உயரமானது.

நாடு முழுவதிலுமிருந்து இரும்பு சேகரித்து பத்மபூஷன் விருது பெற்ற ராம்வீசுதர் என்ற சிற்பக் கலைஞரால் இச்சிலை அமைக்கப்பட்டது.

மொத்தமாக 250 பொருளியலாளர்கள்⸴ 3400 தொழிலாளர்கள் இணைந்து இச்சிலை 33மாதங்களில் உருவாக்கப்பட்டது. ஒற்றுமையின் சின்னமாக இச்சிலை பார்க்கப்படுகின்றது.

சர்தார் பட்டேலின் சிறப்பு

இவர் சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என அழைக்கப்படுகின்றார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்படுகின்றார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவராவார்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும்⸴ துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

இந்தியா விடுதலை பெற்ற பின்பு சிற்றரசர்களின் கீழ் உடைபட்டுத் தனித்தனி இராச்சியங்களாக இருந்ததை இரும்புக்கரம் கொண்டு அனைத்து சாம்ராஜ்யங்களையும் ஒன்றிணைத்தார்.

அரச குடும்பங்கள் தங்கள் நாடுகள் தங்களுக்கு வேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாநிலம் சார்ந்த இந்தியாவை வி.பி மோகனுடன் இணைந்து இரும்பு மனிதராக நின்று அகண்ட பாரதத்தை உருவாக்கினார்.

முடிவுரை

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாமனிதர் 1950 டிசம்பர் 15ஆம் திகதி இறைபாதம் எய்தினார். பல விமர்சனங்களையும் தாண்டி ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதே தனது இலக்காகக் கொண்டு செயற்பட்டார். இவரின் தன்னம்பிக்கை⸴ தைரியம்⸴ விடாமுயற்சி போன்ற குணாம்சங்களை நம் வாழ்வின் பாடங்களாக பெற்றுக்கொள்வோம்.

You May Also Like :

வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை

தேசிய ஒருமைப்பாடு பற்றிய கட்டுரை