கிறிஸ்தவர்கள் வருடந்தோறும் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்றாக விளங்குகின்றது. இது நத்தார் என்றும் அழைக்கப்படுகின்றது.
இவ்விழா கிறிஸ்தவத் திருவழிபாடு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச் செய்து பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும். கிறிஸ்து பிறப்பு காலத்தின் தொடக்க நாளாகும்.
கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கியது ரோமாபுரி நாட்டில் ஆகும். கிறிஸ்துமஸ் விழா மெல்ல மெல்ல கிறிஸ்தவ சமுதாயம் வசிக்கின்ற பகுதிகளில் பரவிப் பின்னர் உலகெங்கும் பரவியது.
432ல் எகிப்திற்கும் அங்கிருந்து இங்கிலாந்திற்கு 6ம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாவது நூற்றாண்டின் இறுதியில் ஸ்காண்டினேவியா, தீபகற்பம் வரையிலும் பரவியது.
17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கினர்.
ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் சாதாரணமாக ஒரு திருப்பலி (Mass) என்ற அளவிலிருந்து படிப்படியாக கிறிஸ்துமஸ் மரம், ஸாண்ட்டா கிளாஸ், வால் நட்சத்திரம், ஒளியுமிழ் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்மஸ் மரத்துண்டு (Yule log), காலுறை தொங்க விடுதல், குழுப் பாடல், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் என்று பட்டியல் நீண்டது.
Table of Contents
கிறிஸ்துமஸ் என்றால் என்ன
“கிறிஸ்துமஸ்” என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு.
மேலும், கிறிஸ்துமஸ் என்னும் சொல், “கிரைஸ்ட்” (Christ) “மாஸ்” (Mass) என்னும் இரண்டு ஆங்கில சொற்களின் சேர்க்கையாகும். இதில் “கிரைஸ்ட்” என்றால் கிறிஸ்து. “மாஸ்” என்றால் பூஜை அல்லது ஆராதனை என்று பொருள்படும்.
எனவே இது கிறிஸ்துவுக்காக செய்யப்படும் ஆராதனையாக, அதாவது அவருடைய மானிட பிறப்பை நினைவுகூர்ந்து செய்யப்படும் ஒரு ஆராதனையாக உள்ளது.
அதாவது சுருங்கக் கூறின், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து செய்யப்படும் ஆராதனையே கிறிஸ்மஸ் ஆகும்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தினம்
கி.பி.4ம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டு வரை டிசம்பர் 25ம் தேதியே உலகின் சகல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நாளாக இருந்தது.
ஆனால், அதன் பின்னர் சில நாடுகளில் ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக கிழக்கு மரபுவழி திருச்சபைகள் 7ஆம் தேதியில் கொண்டாடுகின்றனர்.
இதற்குக் காரணம், அக்காலத்தில் புதியதொரு காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டதே ஆகும். கி.பி. 16ம் நூற்றாண்டு வரை, கி.பி. 46ம் ஆண்டில் ரோம சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்ட “ஜூலியன் காலண்டரே” உபயோகத்தில் இருந்தது.
ஆனால், கி.பி. 1582ல் 13வது கிரகரி என்னும் போப்பாண்டவர் பூமி சூரியனைச் சுற்றும் நேரத்தைக் கணிப்பிட்டு புதியதொரு காலண்டரை உருவாக்கினார். இதற்கும் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த ஜூலியன் காலண்டருக்கும் இடையில் 13 நாட்கள் வித்தியாசம் உள்ளது.
தற்காலத்தில் கிரகரியின் காலண்டரே உபயோகத்தில் உள்ள போதிலும் சில நாடுகள் மார்க்க விடயங்களுக்கு இன்று வரை ஜூலியன் காலண்டரையே உபயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக் காலண்டரை உபயோகிக்கும் நாடுகளில் டிசம்பர் 25ம் தேதியாகும் போது, நம்முடைய காலண்டரின் தேதி ஜனவரி 7 ஆக உள்ளது. இதனால்தான் தற்காலத்தில் சில நாடுகளில் ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
Read more: இயற்கையாக முடி கருமையாக