நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

Nadakathin Thotram Valarchi Katturai In Tamil

இந்த பதிவில் “நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை” பதிவை காணலாம்.

நாடகங்கள் கதையழகோடு கவிதையழகு கொண்டு மக்களின் வாழ்வை செழுமைப்படுத்துபவையாக அமைந்தால் வரவேற்கத்தக்கதாகும்.

நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நாடகம் என்பது
  3. தமிழ் நாடகத்தின் தொன்மை
  4. கூத்தும் நாடகமும்
  5. நாடகத்தின் வளர்ச்சிநிலை
  6. முடிவுரை

முன்னுரை

தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என மூன்று பெரும் பகுதிகளை உடையது. இது உலகின் வேறு எந்த ஒரு மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பாகும். எனவே தமிழை முத்தமிழ் என்றும் அழைக்கலாம்.

இதில் நாடகத் தமிழ் பழங்காலம் முதலே படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. நாடகக் கலை என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடியாகும்.

பிறர் செய்வதைப் போலத் தாமும் செய்து பார்க்க வேண்டும் என்கின்ற மனித உணர்ச்சியே நாடகம் தோன்றக் காரணமாகும். நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாடகம் என்பது

இயலும், இசையும் கலந்து கதையை தழுவி நடித்து காட்டப்படுவது நாடகமாகும். நாடகம் என்னும் சொல்லை நாடு+அகம் எனப் பிரிக்கலாம். அதாவது நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை எனலாம்.

ஒரு கதையை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்க அமைப்பு, இலக்கியம், ஒலி-ஒளி முதலான கலைகளில் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவது நாடகம் எனலாம்.

தமிழ் நாடகத்தின் தொன்மை

தொல்காப்பியர் “நாடக வழக்கினும்” என்று நாடகத்தை குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் ஆகவே திகழ்கின்றது.

அகத்தியம், குணநூல், கூத்துநூல், சயந்தம், மதிவாணர், நாடகத் தமிழர் போன்ற நாடக நூல்கள் பழந்தமிழ் வழக்கில் இருந்தன என்பதை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். இன்று இவற்றில் பல நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

கூத்தும் நாடகமும்

கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டியும், கூத்தாக ஆடிக்காட்டியும் நாடகம் நடத்தப்படுகிறது. இதனைக் கூத்துக்கலை என்றும் குறிப்பிடுவர்.

சங்க காலத்தில் கூத்து துணங்கைக் கூத்து ஆடிப்பாவை போன்ற கூத்து வகைகளைக் காணமுடிகின்றது. மேலும் நாடகங்களும் சங்க காலத்தில் இருந்துள்ளன.

இந்த நாடகங்களை வேத்தியல், பொதுவியல் என இருவகையாகப் பிரிக்கலாம். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக் காட்டப்படுபவையாகும். பொதுமக்களுக்காக நடித்து காட்டப்படுவது பொதுவியலாகும்.

நாடகத்தின் வளர்ச்சி நிலை

பல்லவர் காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளார். இது மிகவும் புகழ் பெற்றிருந்தது.

இன்னிசை கூத்து, வரலாற்று கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலப்பகுதியில் இருந்தன. பதினோராம் நூற்றாண்டின் சோழர் காலத்தில் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள் மகாபாரதம், இராமாயணம் முதலிய காவியங்களின் கதைக் கூறிலிருந்து படைக்கப்பட்டன.

19ம் நூற்றாண்டில் சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றன. நாட்டு விடுதலை போராட்டக் காலகட்டத்தில் பல்வேறு தேசிய நாடகங்கள் அரங்கேறின.

இருபதாம் நூற்றாண்டில் நாடகத்துறையில் பெருந்தொண்டு ஆற்றியவர் சங்கரதாஸ் சுவாமிகள் இவர் நாடக உலகின் இமயமலை என்று சிறப்பிக்கப்பட்டார்.

முடிவுரை

இன்று நாடகங்கள் அரிதாகவே நடைபெறுகின்றன. கல்விச்சாலைகளில் ஓரங்க நாடகம், நாட்டிய நாடகங்கள் நடித்துக் காட்டப்படுகின்றன.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நடித்துக் காட்டப்படுகின்றன.

நாடகங்கள் கதையழகோடு கவிதையழகு கொண்டு மக்களின் வாழ்வை செழுமைப்படுத்துபவையாக அமைந்தால் வரவேற்கத்தக்கதாகும்.

You May Also Like :
மாணவர் ஒழுக்கம் கட்டுரை
புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்